மீண்டும் மிரட்டும் 'ஜெனிவா'

ஆக்கம்: கே. சஞ்சயன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன.

இதற்கு முன்னரும் பலமுறை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டங்கள் தொடர்பாக பரபரப்பாக செய்திகள் வெளியாவதுண்டு.

குறிப்பாக 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், இது ஒரு வழக்கமான விவகாரமாகி விட்டது.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்க சில வாரங்கள் முன்னதாகவே தொற்றிக்கொள்ளும் இந்தக் காய்ச்சல், அது முடிவுக்கு வரும் வரை விடாமல் அடித்துக் கொண்டேயிருக்கும்.

இப்போதும் அப்படித் தான், இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க இன்னும் கிட்டத்தட்ட 4 வாரங்கள் இருக்கின்ற போதும், அதையொட்டிய பரபரப்புக்கு குறைவேதும் இல்லாமல் கிளம்பிவிட்டது.

பெப்ரவரி 27 தொடங்கி மார்ச் 23 வரை நடக்கப் போகும் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இதற்கு முன்னரும் பலமுறை ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கம் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அத்தகைய சூழல்களில் இருந்து இம்முறை சற்று வித்தியாசமானது.

இதற்கு முன்னர், ஜெனிவா கூட்டத்தொடரில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்த போதெல்லாம், அதனை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்க்கப் போவதாக கூறிவந்தது.

அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடத்தப்படுகிறது, அந்த அறிக்கை வெளியாகும் வரை, பொறுத்திருக்குமாறு அரசாங்கம் சமாதானம் கூறியது. ஆனால் இப்போது அந்த சாதகமான நிலைமை அரசுக்கு இல்லை.

அப்போது அரசாங்கம் வைத்து விளையாடிய பந்து இப்போது சர்வதேச சமூகத்தினது கையில், குறிப்பாக மேற்குலகின் கையில் சிக்கியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்க மேற்குலகம் விரும்புகிறது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் இலங்கை தொடர்பாக மற்றொரு அறிக்கையும் உள்ளது.

கடந்த கூட்டத்தொடரின் போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையே அது.

அதுபற்றி இன்னமும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எந்த முடிவுக்கும் வராத நிலையில் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய விவாதத்துக்கு மேற்கு நாடுகள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கூட்டத்தொடரில், இந்த அறிக்கை வெளியிடப்பட முன்னரே அதனை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தாங்கள் முதலில் அறிக்கையைப் படித்த பின்னரே அதனை பகிரங்கப்படுத்துவோம் என்று அடித்துக் கூறிவிட்டது அரசாங்கம். ஆனால், இப்போது அறிக்கை வெளியே வந்து விட்டது. இதனால் இந்த அறிக்கையை ஜெனிவா கூட்டத்தில் சமர்ப்பிக்கக் கோருகிறது மேற்குலகம்.

ஆனால், இலங்கை அரசாங்கமோ அதனை ஜெனிவா மாநாட்டில் விவாதத்தில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் போது, அதிலுள்ள குறைபாடுகள் குறித்த ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளும் பிய்தெறிந்து ஆராய்வர். அது இலங்கைக்குச் சாதகமற்ற நிலையை ஏற்படுத்தும்.

ஆனால் மேற்கு நாடுகள் ஒன்றும் அவ்வளவு சுலபத்தில் இந்த விடயத்தை கைவிடுவதாக இல்லை. அப்படி இந்த அறிக்கை ஜெனிவாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், ஏற்கனவே மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள ஐ.நா நிபுணர் குழு அறிக்கையையும் அது கூடவே சந்திக்கு இழுத்து வந்து விடும். அது தான் அரசாங்கத்துக்கு மிகவும் ஆபத்தான விடயம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வரவேற்றுள்ள மேற்குலக நாடுகள், குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பான போதியளவு பதிலளிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறிவிட்டன.

பொறுப்புக்கூறுதல் தான் இலங்கைக்கு பெரிய தலைவலியான விடயமாக இருந்து வருகிறது. அதுவே தான் மனிதஉரிமைகள் பேரவையிலும் முக்கியமாக அலசப்படும்.

எனவே நல்லிணக்க நடவடிக்கை சார்ந்து எதை எடுத்துக் கூறினாலும், எதைச் செய்தாலும், பொறுப்புக் கூறும் விவகாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்காதவரை அரசாங்கத்தினால் மேற்குலக நாடுகளைத் திருப்திப்படுத்த முடியாது.

இதனால் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகவே அமையப் போகிறது. இதனை தலைவலி என்பதை விட ஒரு அக்கினிப் பரீட்சை என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் மேற்குலக நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதிப்பதற்கு அல்லது இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் நிறைவேற்றுவதற்கு முனைந்தால், அதனைத் தடுப்பது எவ்வாறு என்று அரசாங்கம் யோசிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக பல்வேறு நாடுகளுக்கும் அமைச்சர்களையும் தூதுக்குழுக்களையும் அனுப்பி ஆதரவு தேடும் முயற்சிகள் தீவிரமடையப் போகின்றன.

இப்போது ஐரோப்பிய நாடுகளின் முழுமையான ஆதரவை இழந்துள்ள அரசாங்கம் இப்போது அரசாங்கம் குறிவைப்பது மத்திய கிழக்கு, ஆபிரிக்க, தென்அமெரிக்க, ஆசிய நாடுகளைத் தான். இவற்றில் அமெரிக்க எதிர்ப்புணர்வு கொண்ட நாடுகளை குறிவைத்து அரசாங்கம் காய்களை நகர்த்துகிறது.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதனை முறியடிப்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை.

ஈரான், சிரியா போன்றன இலங்கைக்கு ஆதரவாகவே இருந்தாலும், அமெரிக்க எதிர்ப்புணர்வு கொண்ட இந்த நாடுகளுடனான நட்பு அரசுக்கு ஆபத்தாகவும் அமைந்து விடலாம்.

எவ்வாறாயினும் இந்தமுறை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் ஒன்றும் இலங்கைக்கு சாதகமான தொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே தென்படுகின்றன.

அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும். அது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் என்பதை விட, இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், சர்வதேச அளவில் எதிர்கொள்ளப் போகும் உச்சக்கட்ட இராஜத்தந்திர நெருக்கடியாகக் கூட இருக்கலாம்

Please Click here to login / register to post your comments.