கலாமின் இலங்கை அவதாரம்!இரு கடலோர நிலவரம்
''இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு எடுத்துக்கொள்ளலாம்'' என்பதுதான் கலாம் சொன்ன யோசனை.
கலாமின் இந்தக் கருத்துக்கு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
''ராமேஸ்வரம் மண்ணின் மைந்தர் என்பதால், மீனவர் பிரச்னையைப் பற்றிப் பேசுவதாகச் சொல் லும் இவர், இதுநாள் வரையில் அப்படி ஒரு பிரச்னை இருப்பதாகவே வெளியில் காட்டிக் கொள்ளவில்லையே? மனிதகுலத்தையே உலுக்கிப்போட்ட ராஜபக்சே ராணுவத்தை, உலக நாடுகள் பலவும் போர்க்குற்றவாளியாக நிறுத்தியபோது மௌனம் காத்த கலாம், திடீரென இலங்கை சென்றது ஏன்? ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவத்துக்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. இனப்படுகொலை செய்தவர் என்று உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும் ராஜபக்சேவுடன் கைகுலுக்க அவருக்கு எப்படி மனம் வந்தது?'' என்கிறபடி மனம் வெந்து இணையத்தளங்களில் எழுதுகிறார்கள், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்கள்.
இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தின் மீன் வள ஆராய்ச்சியாளரும் யாழ். பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியருமான சூசை ஆனந்தனிடம் பேசினோம். ஆதங்கத்துடன் பேசியவர், ''போர்ச்சூழல் தொடர்ந்த இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மீனவர்களின் தொழில் நலிவடைந்து இருக்கிறது.
கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இப்போதுதான், வடபகுதி மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நைலான் வலையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். தமிழக மீனவர்களோ ட்ராலர் எனப்படும் இழுவை மடி வலையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையானது, கடலுக்கு அடியில் நிலத்தோடு இழுத்துக்கொண்டு, அடித்தளத்தில் இருக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகளையும் அள்ளிச்சென்று, மீன்வளத்தை ஏகமாக அழிக்கக்கூடியது.
இதனால், இந்த இழுவை மடி வலையை இலங்கை அரசாங்கம் தடைசெய்துள்ளது. ஆனால், இந்திய-தமிழக மீனவர்கள் இழுவை மடி வலையுடன் ட்ராலர் படகுகள் மூலம்தான், எங்களின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிக்கிறார்கள். இதனால், வடபகுதியில் உள்ள மூன்று லட்சம் பேரின் ஒரே வாழ்வாதாரமான மீன்வளம் அதிவேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.
அண்மைக் காலமாக, ஈழத்து மீனவர்களே அனுமதிக்கப்படாத முல்லைத் தீவுக் கடல் பிரதேசம் வரைக்கும் தமிழக மீனவர்கள் வந்து எங்களின் மீன்வளத்தை அள்ளிச் செல்கின்றனர். முன்னைவிட எங்களின் வள அழிவுகள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கெனவே, இருதரப்பு மீனவர்கள் கலந்துபேசியும் இது நிறுத்தப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால், ஐந்து ஆண்டுகளில் வடக்கு இலங்கையின் மீன்வளமே பாதி ஆகிவிடும்.
பத்து ஆண்டுகளில் மொத்த வளமும் அழிந்து விடும் ஆபத்தும் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, இருதரப்பு மீனவர்களும் இருதரப்பு கடலிலும் மீன் பிடிக்கலாம் என்பது எந்த வகையில் நியாயம்? இது, நடைமுறைக்குச் சாத்தியமானதும் இல்லை.
மற்றபடி, நாங்கள் தமிழக மீனவ சகோதரர்களின் நலனுக்கு எந்த வகையிலும் எதிரானவர்கள் அல்ல. இழுவைமடி, ட்ராலர் படகுகளைத் தவிர்த்து, மீன்வளத்தை அழிக்காதபடி, எந்த முறையிலும் தமிழக மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க உடன்பாடு செய்யலாம். இதில் இரு நாட்டு அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று முடித்தார், பேராசிரியர் சூசை.
ராமேஸ்வரம் கடலோர விசைப்படகு மீனவர் நலச் சங்கத்தின் ஆலோசகர் தேவதாஸ் இதுபற்றிப் பேசினார். ''பாக் ஜலசந்தியில் இந்திய, இலங்கை மீனவர்கள் தனித்தனியாக வாரத்துக்கு மூன்று நாட்கள் எனப் பகிர்ந்து மீன்பிடிக்க, அப்துல்கலாம் கூறிய யோசனை சாலச்சிறந்தது. தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல, ஈழத்து மீனவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். நம்முடைய தரப்பில் ட்ராலர் படகுகள் அதிகம் இருப்பது உண்மைதான். இவற்றை திடீரென விட்டுவிட்டு வரமுடியாது. கலாம் சொன்னபடி ஆழ்கடல் மீன்பிடியைச் செயல்படுத்த வேண்டுமானால், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள திட்டுகளைத் தோண்டி எடுக்கவேண்டும்'' என்றார்.
இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கிறார்கள் என்று, தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை தாக்குகிறது. உண்மையில் அது இலங்கைக் கடல் எல்லைதானா என்ற சந்தேகத்துக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. எல்லை மீறி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கிச் செல்லும் சிங்களக் கடற்படையை இதுவரை இந்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இரண்டு அரசுகளுக்குமான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், இரண்டு தரப்பு மீனவர்களுக்குமான நல்லிணக்கம்... ஆகியவற்றின் அடிப்படையில் காரியங்கள் நடந்தால் மட்டுமே, கடலில் மோதல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படும்!
பிரசுரித்த நாள்: Jan 30, 2012 22:51:28 GMT




