64 சுதந்திரக் காற்றில்ஆண்டுகள்

திம்புக் கோரிக்கைகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான குறைந்த பட்சக் கோரிக்கைகளாகும். அது அங்கீகரிக்க முடியாதென்றால் நாம் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்தப்படும் செய்தியாகும்.

நாம் இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம்; சுபீட்சம் நோக்கிய துரித அபிவிருத்திப் பாதையில் நாம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இப்போது நாம் இலங்கையின் எப் பகுதிக்கும் போகலாம், வரலாம்''

இந்த வார்த்தைகளுக்கும் உண்மைகளுக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லாத போதிலும் இவை அடிக்கடி ஜனாதிபதியாலும் அரச அமைச்சர்களாலும் கூறப்பட்டு வருபவை.

அவர்களுக்கு எவ்வித குறைவுமற்ற உரத்த தொனியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இவற்றை ஆமோதிக்கத் தவறுவதில்லை. இன்று ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் குடை நிழலில் நின்று கொக்கரிப்பவர்களுக்கும் சில விடயங்களில் சுதந்திரம் உண்டு என்பது மட்டும் உண்மைதான். அவர்களைப் பொறுத்தவரை சட்டம், ஒழுங்கு, நியாயம், நீதி, பாதுகாப்பு எல்லாமே அவர்கள் முன் வளைந்து கொடுக்கும் நிலைமையே நிலவுகிறது. கொலை, கொள்ளை, கப்பம் பெறல், பாலியல் கொடுமைகள், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல், மோசடி என்பனவெல்லாம் சமூகத்தின் இயல்பான விதிகளாகிவிட்டன.

தட்டிக் கேட்பவர்கள் கொல்லப்படலாம். காணாமற் போகலாம், சிறை செய்யப்படலாம், தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படலாம்.

மங்கிப் போகும் தமிழர் புகழ்

இது இன்று இலங்கை மக்கள் அனுபவிக்கும் சுதந்திரம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மேல் திணிக்கப்படுபவை. மேற்குறிப்பிடப்பட்டவற்றுடன் சில மேலதிகங்களும் கொண்டவை.

1815 இல் கண்டி ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியுடன் இலங்கை பிரிட்டனால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என ஐரோப்பியர் இந்த நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற போதெல்லாம் சங்கிலியன், மாயாதுன்னை, வீதியபண்டார, கைலை வன்னியன், விமலதர்மசூரியன், பண்டாரவன்னியன், கீர்த்தி சிறி விக்கிரம ராஜசிங்கன் ஆகியோர் அந்நிய ஆக்கிரமிப்புக்கெதிராக வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர். ஆனால் இலங்கையின் சுதந்திரம் பற்றிப் பேசப்படும் போது அவர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுவதில்லை.

ஏனெனில் அவர்கள் ஒன்றில் தமிழர்களாக இருந்தார்கள் அல்லது தமிழர்களின் படையுதவி பெற்றோ தமிழர்களுக்குப் படையுதவி வழங்கியோ அந்நிய எதிர்ப்புப் போரை நடத்தினார்கள்.

ஆனால், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கு எதிராகப் போர் செய்து வெற்றி பெற்ற துட்டகைமுனு மகா வீரனாகப் போற்றப்படுகிறான். அதன் அடிப்படையிலேயே எல்லாளன் தோற்கடிக்கப்பட்ட அனுராதபுர மாவட்டத்திலேயே இந்த முறை பிரதான சுதந்திர தின வைபவமும் தேசத்தின் மணிமகுடம் கண்காட்சியும் இடம்பெற்றன.

இந்தக் கண்காட்சி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடித்த பெருமையில் சிங்கள மக்களை மிதக்க வைத்து இனமேலாதிக்க உணர்வைத் திட்டமிட்டு வளர்க்கும் நோக்கம் கொண்டதாகும்.

அதாவது இலங்கையின் இனவாத ஆட்சியாளர்கள் இலங்கை அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வை வளர்ப்பதற்குப் பதிலாகத் தமிழ் மக்களுக்கு எதிராகக் குரோத உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டவே இந்தத் தினத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இலங்கை ஆங்கிலேயரால் கைப்பற்றப்படும் போது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இராசதானிகளைக் கொண்டிருந்தது. இவை அவர்களால் முழுமையாகக் கைப்பற்றப்பட்ட பின்பு 1883 இல் கோல்புரூக் ஆணைக்குழு மூலம் ஒரே தேசமாக்கப்பட்டது.

இன்று மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்படும் ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற கோஷம் சிங்கள மக்களுக்கு உரியதல்ல. அது ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இரவல் வாங்கப்பட்டதாகும்.

ஒரே தேசமாகக் கிடைத்த சுதந்திரம்

நாடுகள் ஒன்றிணைக்கப்படுவதும் ஒன்றிணைக்கப்படும் நாடுகள் பிரிந்து செல்வதும் வரலாறு சந்தித்திராத புதிய விடயங்களல்ல. ஆனால் இவை ஆட்சியாளர்களின் நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

சில சமயங்களில் போராட்டங்கள் மூலம் மக்களின் நலன்களுக்காக மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் இலங்கையில் எமது தேசங்கள் ஆங்கிலேயரின் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்பவே ஒன்றிணைக்கப்பட்டன. எனவே, ஆங்கிலேயர் இந்த நாட்டைவிட்டு வெளியேறிய போது நியாயபூர்வமாக இந்த நாடுகள் பிரிந்து சுயாதிபத்தியம் உள்ள தேசங்களாக உருவெடுத்திருக்க வேண்டும்.

ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்றபோது இருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஏகாதிபத்திய சார்பு நிலமானிய சிந்தனைப் போக்கையே கொண்டிருந்தன. எனவே அனைவரும் ஒரே இலங்கை என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். ஒரே இலங்கை என்ற கோட்பாடு ஒரு ஜனநாயக அரசியலமைப்பில் பெரும்பான்மை சமூகம் தமது பலத்தின் மூலம் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் மீதான ஒடுக்குமுறையை மேற்கொள்ள வாய்ப்புக்கள் உண்டு என்பதை அன்றைய தமிழ், முஸ்லிம் தலைமைகள் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டன.

அதன் காரணமாக இலங்கை ஒரே தேசமாகப் பிரிட்டனிடமிருந்து 1948 இல் விடுதலை பெற்றது. இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டிலேயே தமிழ் மக்கள் மீதான முதல் அடி விழுந்தது. அதாவது ஒரே ஒரு சட்டத்தின் மூலம் ஆறு லட்சம் இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக மலையகத்தில் அதுவரை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் 5 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் போகும் நிலை உருவாகியது.

அதாவது 6 லட்சம் மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதுடன் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

குடியுரிமையிலிருந்து நில அபகரிப்பு வரை

குடியுரிமை பறிப்பில் தொடங்கிய இன ஒடுக்குமுறை அடுத்த ஆண்டிலேயே நில அபகரிப்பு என்ற வடிவத்தில் தோற்றம் பெற்றது. விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் கல்லோயா என்ற சிங்களக் குடியேற்றம் மூலம் திருமலை மாவட்டத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை அண்டிய பகுதிகளில் மெல்ல மெல்ல இடம்பெற்ற பிற சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சேருவில என்றொரு புதிய சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டது.

அதன் மூலம் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையேயான நிலத் தொடர்பு துண்டிக்கப்படும் நிலையும் உருவாகியது. இவ்வாறே அம்பாறையில் சீனித் தொழிற்சாலையில் பணியாற்றவும் கரும்புப் பயிர் செய்கையில் ஈடுபடவும் கொண்டு வந்து குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் இன்று பல்கிப் பெருகினர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தைத் துண்டாடி ஒரு புதிய மாவட்டத்தையும் உருவாக்கி விட்டனர். இவ்வாறே தமிழ் மக்களில் இதய பூமியான மணலாற்றில் சிங்களவர்கள் மெல்ல மெல்லக் குடியேற்றப்பட்டதுடன் 1984 இல் மாவலி அபிவிருத்திச் சட்டத்தின் மூலம் பல தமிழ்க் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

போர் முடிந்த பின்பும் இராணுவக் குடியிருப்புகள், முன்பு சிங்கள மக்கள் குடியிருந்த இடங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என வெவ்வேறு வடிவங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

இனவிரோதச் செயற்பாடு

இவ்வாறு குடியுரிமை, நிலவுரிமை என்பவற்றின் மீது சுதந்திரத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் போன்றே எமது பொருளாதாரத்தை அழிப்பு திட்டமிடப்பட்டன. இதன் மீது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரத்தில் முன்பும் சரி பின்பும் சரி விவசாயத்தில் நாம் ஒரு கிராமியத் தன்னிறைவுப் பொருளாதார பலத்தைப் பெற்றிருந்தோம்.

அதுமட்டுமன்றி மன்னார், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தென்னிலங்கைக்கு நெல்லை ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளம் பெற்றிருந்தன. 1960 இன் பின்பு மிளகாய், வெங்காயம், வாழை, முந்திரி, வெற்றிலை என்பனவற்றை உற்பத்தி செய்ததன் மூலம் எமது விவசாயிகள் ஒரு சிறப்பான பொருளாதார நிலைமையை எட்டியிருந்தனர்.

ஆனால் 1977 இல் இனவிரோத அடிப்படையில் இந்தப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அதனால் ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக எமது உப உணவுப் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டது. பின்பு போர் காரணம் காட்டப்பட்டுக் கொண்டு வரப்பட்ட உரப் பசளைத்தடை, எரிபொருள் தடை என்பன காரணமாக நெல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

இவ்வாறே காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்த எமது பொருளாதார பலம் போரின் போது முற்றாகவே துடைக்கப்பட்டது. வளம் பெற்று வாழ்ந்த எமது விவசாயிகள் வறுமையிலும் துன்பத்திலும் வாடுகின்றனர்.

இவ்வாறே கடல் பாதுகாப்பு வலயம், எரிபொருள் தடை, மீன்பிடி உபகரணங்களுக்கான தடை என்பன மூலம் வடபகுதியில் கொடி கட்டிப் பறந்த மீன்பிடித் தொழில் பாழடிக்கப்பட்டது.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டு சட்ட பூர்வமாகவே எமது மொழியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பல்லாயிரம் தமிழ் ஊழியர்கள் வேலையிழந்து தெருவில் நின்றனர். எமக்கேயுரிய விகிதாசாரத்தின் படியான வேலைவாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன.

இவ்வாறே இனரீதியான தரப்படுத்தல் மூலம் எமது கல்வி உரிமையும் பறிக்கப்பட்டது.

இதன் பின்பு 1972 ஆம் ஆண்டு, 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டங்கள் மூலம் முற்றாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.

அடிப்படையில் ஒரு தேசிய இனத்துக்குரிய குடியுரிமை, மொழியுரிமை, நிலவுரிமை, பொருளாதார உரிமை தன் சொந்தக் கலாசாரங்களைப் பேணி வளர்க்கும் உரிமை என்பன சுதந்திரத்தின் பின்பு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வந்தமையே வரலாறு.

அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற தகைமையிலிருந்து கீழிறக்கப்பட்டு ஓர் இனக் குழுமமாக அவர்களை மாற்றும் முயற்சியே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் எம்மை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சியே முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பயங்கரவாத நாமம் சூட்டப்பட்ட போராட்டம்

இதன் காரணமாகவே நாம் எமது தேசியத்தையும் தேசிய இன தனித்துவங்களையும் பாதுகாக்கப் போராடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டோம். அஹிம்சை வழியிலான போராட்டங்கள் ஆயுத முனையில் ஒடுக்கப்பட்டதால் எமது இனமும் தவிர்க்க முடியாமல் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பயங்கரவாத நாமம் சூட்டப்பட்டது. எமது மக்களின் உரிமைகளோ, உணர்வுகளோ கணக்கெடுக்கப்படாமலே எமது மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவது பொருட்படுத்தப்படாமலே சர்வதேச நாடுகளின் உதவியுடன் எமது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இன்று நாம் உறவுகளை இழந்து உடலுறுப்புக்களை இழந்து, சொத்துக்களை இழந்து, எங்கள் தொழில் வளங்களை இழந்து, சகல உரிமைகளும் பறிக்கப் பட்டவர்களாகவும் எஞ்சிக் கிடக்கும் சில உரிமைகளும் தொடர்ந்து பறிக்கப்பட்டுக் கொண்டும் நிர்க்கதியான நிலையில் நிற்கின்றோம்.

இது இலங்கையில் தமிழ் மக்கள் பெற்ற சுதந்திரத்தின் 64 ஆண்டு கால வரலாறு. இந்தக் கொடிய காற்றுத்தான் நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று எனக் கூறப்படுகிறது.

எனினும் பேச்சு என்ற மாயவலை எம்மேல் விரிக்கப்பட்டுள்ளது. இன்று பேச்சு என்பது எமது சம்மதத்துடன் எமது உரிமைகளைப் பறிக்கும் ஒரு ஆயுதமாகவே இன்றைய அரசால் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில் ஒருபுறம் பேச்சுக்களை நடத்துவது என்ற பேரில் இழுத்தடிப்பும் செய்து கொண்டும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சர்வகட்சிக்குழு என வெவ்வேறு திசை திருப்பல்களையும் முன்வைத்துக் கொண்டும் மறுபுறத்தில் எமது உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதும் எமது தேசியத்தின் அடிப்படைகளை அழிப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன.

மஹிந்தவின் தீர்மானம்

சுதந்திர தினத்தை அடுத்து வடபகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திம்புப் பேச்சுக்கள் முதல் இன்றுவரை தமிழர் தரப்பினர் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளையே முன் வைக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். அதன் அர்த்தம் தமிழ் மக்களின் அன்றைய கோரிக்கைகள் என்றாலென்ன, இன்றைய கோரிக்கைகள் என்றாலென்ன எவற்றையும் தான் நிறைவேற்றப் போவதில்லை என்பதுதான்.

திம்புக் கோரிக்கைகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான குறைந்த பட்சக் கோரிக்கைகளாகும். அது அங்கீகரிக்க முடியாதென்பது நாம் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக் கொள்ள அரசு தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

இன்று சிங்கள மேலாதிக்க சக்திகள் நாம் ஒரு தேசிய இனம் என்பதை நிராகரித்து எம்மை ஒரு இனக்குழுவாக்கி நிரந்தர அடிமைகளாக்கி எமது இனத் தனித்துவங்களை அழிக்கும் இன ஒழிப்பை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பதுதான் அவர்களின் சுதந்திரதினச் செய்தி. இதுதான் எமது 64 ஆண்டு கால வரலாறு.

Please Click here to login / register to post your comments.