கச்சதீவு

ஆக்கம்: ஏ. சூசை ஆனந்தன் - B. A. Hons), (M. A), (Dip. in Ed) - விரிவுரையாளர், புவியியற்றுறை
1974 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய கடலோர எல்லைகள் ஒப்பந்தத்தின் மூலம் அதுவரை காலமும் சர்ச்சைக்குரியதாக காணப்பட்ட கச்சதீவுப் பகுதி இலங்கையின் எல்லைக்குள் வீழ்ந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டிலும், அகில இந்திய ரீதியிலும் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இருப்பினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சில சரத்துகள் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக கச்சதீவுப் பகுதியில் அனுபவித்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க உதவியமையால் காலப்போக்கில் கச்சதீவு தொடர்பான விவகாரம் தணியலாயிற்று.

1983 இல் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு பாதுகாப்புக் கருதி மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடல் வலயத் தடைச் சட்டம் காரணமாக கச்சதீவு கடற்பிராந்தியம் ஓர் அமைதியற்ற பிராந்தியமாக மாற வழி வகுத்தது.

இலங்கை - இந்தியாவுக்கிடையில் அமைந்துள்ள கடற் பரப்புக்கள் பாரம்பரிய நீர்ப்பரப்புக்கள் எனப்படுகின்றன. இவை மூன்று நீர்ப்பரப்புக்களாகப் பிரிக்கப்படுகின்றன.

    1. வங்களாவிரிகுடாப் பகுதி - இது பாக்கு நீரிணையை அடுத்து யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடகரையோரம் அமைந்துள்ளது.
    2. பாக்குநீரிணைப் பகுதி - இது ஆதாம்பாலத்திலிருந்து வடகிழக்காக யாழ்ப்பாண வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ளது.
    3. மன்னார் குடாப்பகுதி - இது ஆதாம் பாலத்திலிருந்து மன்னார்த் தீவின் தென்பகுதி சார்ந்து அமைந்துள்ளது.

மன்னார்த்தீவு, ஆதாம்பாலம், பாம்பன்தீவு என்பன இந்த பாரம்பரிய நீர்ப்பரப்புப் பகுதியினை இரு கூறாகப் பிரிக்கின்றன. இந்த நீர்ப்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியே மிக ஒடுங்கிய கடற்பரப்பாகும். இவ் ஒடுங்கிய அமைப்பானது தமிழ் நாட்டுக் கரையோரத்தினதும், இலங்கையின் வடபகுதி கரையோரத்தினதும் வரலாற்றையும், பொருளாதாரத்தையும். பண்பாட்டையும் ஆழமாகப் பாதித்துள்ளது. இலங்கை - இந்தியத் தமிழர்களை ஐக்கியப்படுத்துவதுடன் அவர்களைப் பிரித்தும் உள்ளது. இதன் விளைவாக இரு நாடுகளிடையேயும் நிர்வாக மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது.

வரலாற்று ரீதியாகவே இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் விரிவடைவதற்கு இவ் ஒடுங்கிய நீர்ப்பரப்பு முக்கிய வழியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் இலங்கையின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை இவ்வழியாகவே கொண்டு வந்தனர். தென்னிந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்நீரிணை வழியாக, இலங்கை வந்தனர். இதேபோன்று 1983 ஜுலை கலவரத்தின் பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பி ஓடியதும் இந்நீரிணை வழியாகவே.

கச்சதீவு என்பதன் பொருள் இரண்டு சொற்களால் ஆனது சமஸ்கிருதத்தில் கச் என்பது கடற்கரையையும் தீவு என்பது நீர்சூழ் நிலத்தையும் குறித்து நிற்கிறது. ஆகவே கச்சதீவு என்பதை கடற்கரைத்தீவு என வரையறை செய்யலாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்கில் அமைந்துள்ள சப்த தீவுகள் எனப்படுகின்ற பிரதான ஏழு தீவுகளுடன் பாலைதீவு, இரணை தீவு, கக்கிர தீவு என்பவற்றுடன் கச்சதீவையும் சேர்த்து பதினொரு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றுள் இரணைதீவு தவிர்ந்த கச்சதீவு, பாலைதீவு, கக்கிரதீவு ஆகிய மூன்றும் மக்கள் வாழிடமற்ற வெறும் தீவுகளாகவே காணப்படுகின்றன.

கச்சதீவானது நெடுந்தீவிற்கு தென்மேற்கே ஏறக்குறைய (9 மைல்) 14.4 கிலோமீற்றஎ தொலைவிலும் பாம்பன் - இராமேஸ்வரத்திலிருந்து வடகிழக்கே (10 மைல்) 16 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையையும் இந்தியாவையும் ஊடறுத்துச் செல்லும் ஒடுங்கிய பாக்குநீரிணையின் மையப்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது.

இத்தீவின் நீளம் சராசரியாக (1 மைல்) 1.6 கிலோமீற்றர் மற்றும் அகலம் சராசரியாக (300 யார்) 275 மீற்றர் ஆகும். இதன் பரப்பளவு 82 ஹெக்டர்கள் ஆகும். இங்கு வரண்ட வலயத்திற்குரிய முட்புதர்கள் தவிர சிறிய புற்றரைகளும் கடற்கரையோரத் தாவரங்களும் படர்ந்துள்ளன. இதன் கிழக்கு அரைப்பகுதி முருகைக் கற்களால் ஆனது. மற்றைய பகுதி மணற்றிட்டுகளைக் கொண்டு காணப்படுகின்றது. நன்னீர் நிலைகள் எதுவுமற்ற இத்தீவில் எவ்வித மிருகங்களும் இல்லை. கடற்பாம்புகள் அவ்வப்போது தென்படுகின்றன.

1974 இல் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமாகிய பின்னர் தேர்தல் மாவட்டப் பிரிவைக் காட்டும் இலங்கைத் தேசப்படத்தில் இத்தீவானது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இல: 10/ ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி இல: 89 பிரிவினுள் காட்டப்பட்டுள்ளது. கி. சே. பிரிவு - நெடுந்தீவாகும். நீதி நிர்வாகப் பிரிவு யாழ்ப்பாண மாவட்டமாகும்.

கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர்கள் இத்தீவில் தற்காலகமாகத் தங்கி இளைப்பாறுவதுடன் மீன்களைக் கருவாடிடும் முயற்சிகளிலும் ஈடுவடுவதுண்டு. அத்துடன் சங்கு, அட்டை, முத்துக்குளித்தல் நடவடிக்கைகளும் இத்தீவு சார்ந்து மேற்கொள்ளப்படுவதுண்டு.

மேலும் இந்திய கமக்காரர்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் இத்தீவினைப் பயன்படுத்தியுள்ளனர். மருத்துவத்திற்கான மூலிகைகளும் இங்கு பெறப்பட்டுள்ளன. 2 ஆம் உலக யுத்தத்தின் போது இத்தீவு துப்பாக்கி சுடுதல், குண்டு வீசுதல் ஆகியவற்றின் பயிற்சிக் களமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக இத்தீவு மக்கள் குடியேற்றம் அல்லாத பகுதியாக இருந்தபோதிலும் கலாசார, பொருளாதார, அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் உடைய ஒரு இடமாக விளங்கி வந்துள்ளது.

கச்சதீவானது சிறந்த சமுத்திரவியற் பின்னணி காரணமாக வரலாற்று ரீதியாக நீண்டகாலமாக முத்துக் குளித்தல், சங்கு சேகரித்தல் என்பவற்றுடன் மீன்பிடியும் நல்லமுறையில் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று அட்டை சேகரித்தல், இறால் உற்பத்தி மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இறால், கடலட்டை, சங்கு உற்பத்திகளும் இப் பிரதேசத்திலிருந்தே கூடுதலாகப் பெறப்படுகின்றது. இப் பிரதேசம் இறாலுக்கு சிறப்பான இடம் ஆகையினால் இப் பகுதி இறால் வங்கி என அழைக்கப்படுகின்றது.

கச்சதீவில் 1913 ஆம் ஆண்டில் றோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்று கட்டப்பட்டுப் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பாலைதீவிலும் 1895இல் புனித அந்தோனியர் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இக்கடற்பரப்பில் மீன் பிடித்தலுக்காகச் சென்ற கரையோர மீனவர்கள் கடலில் அடிக்கடி தாம் சந்திக்கும் ஆபத்துக்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், தொழில் முயற்சிகள் நல்லமுறையில் கைகூட வேண்டுமென்று கருதி பாது காவலராகப் புனித அந்தோனியார் சொரூபம் ஒன்றை வைத்து சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டியிருக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது.

இக்கோயில்லை நம்புதாளை என்ற சிற்றூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கட்டினார். அவர் சென்ற படகு புயலில் சிக்கியபோது அவர் அந்தோனியாரை வேண்டிக் கொண்டார். அதன் காரணமாக அவர் புயல் அபாயத்திலிருந்து தப்பியதாகவும் அதனால் அவர் அந்தக் கோயிலைக் கட்டினார் என்றும் கூறப்படுகின்றது.

இராமாயணபுரத்தின் 1972 வர்த்தமானிப்படி இத்திருவிழாவின்போது இராமேஸ்வரத்துக்கு அண்மையிலுள்ள கங்கச்சி மடத்திலிருந்து ஒரு கத்தோலிக்கக் குருவானவர் கச்சதீவுக்குப் போய் அங்கு கிருவிருந்து நடத்துவார். இந்தத் தேவாலயம் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள் தமது ஆத்ம திருப்தி கருதி இவ்ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்தி வருகின்றனர்.

கச்சதீவிலும், பாலைதீவிலும் கட்டப்பட்டுள்ள ஆலயங்களின் நிர்வாகம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரின் கீழ் உள்ளது. பாலைதீவு ஆலயமானது வலைப்பாடு கோயிற் பங்கின் கீழும், கச்சதீவு ஆலயமானது நெடுந்தீவு கோயிற் பங்கின் கீழும் கண்காணிக்கப்படுகின்றன. இவ் ஆலயங்களில் வருடந்தோறும் வழிபாடுகளானது பாஸ்கு திருவிழாக் காலங்களிலேயே நடைபெற்று வருகின்றன. பங்குனி அல்லது சித்திரை மாதப் பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற பாஸ்கு திருவிழா 6 வாரங்களைக் கொண்டது (40 தினங்கள்). இதன் மூன்றாவது வாரத்தில் கச்சதீவிலும், நான்காம் வாரத்தில் பாலைதீவிலும் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3 தினங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளுகின்றனர். குறிப்பிட்ட பங்கினைச் சேர்ந்த குருவானவரும் கோயில் நிர்வாக சபையினரும் இவ் விழாவினை ஒழுங்கு செய்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சோளகம் தொடங்கிவிடுவதால் அக்காலத்தில் கடல் அலைகளின் தாக்கம் சற்று உயர்வாக இருக்கும். இதனால் படகுகளில் செல்வது கடினம். இதன் காரணமாகவே சோளகத்தின் முன்னர் அங்கு சென்று திரும்பிவிட வேண்டும்; என்பதற்காக இக்காலப்பகுதியைத் தெரிவு செய்துள்ளதாக வெளிக்கள ஆய்வின்மூலம் அறியப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கு குருநகர், ஊர்காவற்றுறை நெடுந்தீவு, குறிகட்டுவான், மைலிட்டி, தலைமன்னார், பேசாலை ஆகிய துறைகளிலிருந்து இயந்திர வள்ளங்களில் யாத்திரிகர்கள் சென்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி இந்துக்களும் முஸ்லீம்களும் வழிபாடு கருதியும், வர்த்தக நோக்கம் கருதியும் அங்கு சென்றனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களும் இக்காலப் பகுதிகளில் இங்கு வருகை தருவது வழக்கம். இவர்கள் சமய நோக்கங்களுக்காக மட்டுமன்றி இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களாகவுள்ள தங்களது உறவினர்களைச் சந்தித்து மகிழ்ச்சி கொள்ளும்; நோக்கத்திற்காகவும் இங்கு வருகை தந்தனர். விழாக் காலங்களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சமூகமும் பெருமளவில் இத் தீவிற்கு வந்து செல்வதுண்டு.

மேலும் இங்கு சிறிய அளவில் வர்த்தகப் பண்டமாற்று வியாபாரமும் நடைபெறுவதுண்டு. இலங்கையில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தேங்காய், தேங்காய் எண்ணெய், சோப், வாசனைப் பொருட்கள் கொண்டு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து சங்குப் பொருட்கள், வளையல்கள், அப்பிள், ஆடைகள் என்பன கொண்டுவரப்பட்டன. இவை பண்டமாற்று அடிப்படையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Please Click here to login / register to post your comments.