நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினம்! தண்டனை தருமா ஜெனிவா?

ஆக்கம்: ம.கா. தமிழ் பிரபாகரன்

'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது.

அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை.

இதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா.

ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில்தான், இலங்கை இனப் படுகொலைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கை இனப் படு கொலைகளுக்கு எதிராக இரண்டாவது முறை இந்தத் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வரப்போகிறது. 2009 மே மாதம் முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போது, உறுப்பினர்களான 47 நாடுகளில் 29 நாடுகள் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், அந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இப்போது மீண்டும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிட அமெரிக்கா முனைப்புடன் செயல்படுகிறது.

ராஜபக்சே அரசின் தமிழ் இனப் படுகொலை களுக்கு நீதி கேட்டு ஈழத் தமிழர்கள், ஜெனிவாவில் நடை பயணம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களால் இலங்கையில் தங்கள் அரசியல் உரிமையை எடுத்துரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகளாக மாறி விட்டனர் என்ற ஆவேசம் தமிழர்களிடையே இணையதளங்களில் பதியப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து இருப்பதுதான். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டுவரும் நிலை யில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் பங்கேற்காமல் தட்டிக்கழித்ததை, 'சந்தர்ப்பவாதப் பின்வாங்கல்’ என்று உலகத் தமிழர்கள் கொந்தளித்துச் சாடுகின்றனர்.

''ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்துவிட்டு, திடீர் விலகலுக்கு என்ன காரணம்?'' என்று சம்பந்தனிடம் கேட்டோம்.

''ஐ.நா. கூட்டம் தொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ, அனைத்து செயல்களையும் செய்து விட்டோம். ஆனால், இப்பொழுது இதில் பங்கேற் காமல் பிரசங்கமாக (அமைதியாக) இருக்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்நாடு செல்லும் முன்னரே விவாதித்தோம். அதில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று எடுத்த முடிவு அவருக்கும் தெரியும். மக்கள் சார்பாக அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் திறமான நோக்கத்துடன் உள்ளோம். ஊடகங்களின் பிரசாரத்துக்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவு தொடர்பாக இனி ஊடகங்களிடம் பேச முடியாது'' என்று இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இது மொத்தக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தனிப்பட்ட சம்பந்தனின் கருத்து. எங்கள் விவாதத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், எங்கள் உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு, 'இதில் பங்கேற்பது’ என்பதுதான். ஆனால் இல்லை என்று சம்பந்தன் சொன்னால், அது அவரே கூறிக்கொள்ளும் முற்றும் முழுதுமான பொய். நான் தமிழ்நாடு விரையும் முன் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றே முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப் பட் டுள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட ஒரே குரலில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

ஈழத்தமிழர்கள் மரணத்துக்கு சாட்சியாக இருந்த மத்திய அரசு, பாவத்தைக் கழுவிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

Please Click here to login / register to post your comments.