முஸ்லிம் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் - சிங்கள அரசின் சதி!

ஆக்கம்: ஷராஃப்தீன்
இலங்கை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களாக வசித்து வருகின்றனர். இந்த முஸ்லிம் பெரும்பான்மையை குறைக்கும் நோக்கில் பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறது சிங்கள அரசு. வட கிழக்கு பிரதேசங்களில் தமிழ் - முஸ்லிம் சமூகம்தான் பெரும்பான்மையினராக இருந்து வந்தனர். யுத்தத்தின் காரணமாக வடக்குப் பகுதியில் இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டது. தமிழ் மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும், இராணுவ முகாம்களும் பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகமும் அரசியல் ரீதியான அச்சுறுத்தலாக மாறக் கூடும் என்ற தொலைநோக்குச் சிந்தனையால் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக முஸ்லிம்களின் வலிமையை குறைக்கும் முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது சிங்கள அரசு.

தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதைப் போன்றே முஸ்லிம் பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களையும், புத்த விகார்களையும் அமைத்து வந்த இலங்கை அரசு தற்போது இராணுவ முகாம்களையும் அங்கு ஏற்படுத்தி வருகிறது.

வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த மண்ணிற்கு திருப்பி அனுப்பவோ, அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை கொள்ளவோ தயாராக இல்லாத சிங்கள அரசு, முஸ்லிம் பகுதிகளை அபகரித்து அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவதும், இராணுவ முகாம்கள் அமைப்பதும் வரலாற்றுத் துரோகமாகும்.

சிங்கள அரசு முஸ்லிம் பிரதேசங்களில் புத்த விகார்களை அமைத்து வருகிறது என்றும், சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள். இம்மக்களின் குற்றச்சாட்டுகளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய கவனத்துடன் பரிசீலிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் உரிய முக்கியத்துவத்துடன் ஒலிக்கவில்லை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

முஸ்லிம் தலைமைகளின் கவனக்குறைவின் விளைவு கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட அஷ்ரப் நகரில் 87 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவம் அங்கு இராணுவத்திற்கான முகாமை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்று கூறும் அஷ்ரப் நகர் முஸ்லிம்கள் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

87 ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி வேலி அமைத்திருக்கிறது இராணுவம். இந்த நிலத்திற்குள் வசித்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் படிப்படியாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த 87 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் 13 முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன. அதில் 8 குடும்பங்களை இராணுவம் வெளியேற்றியிருக்கிறது. எஞ்சியுள்ள 5 குடும்பங்களே அங்கு உள்ளன என்று தெரிவிக்கும் அஷ்ரப் நகர் மக்கள், இந்நிலம் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆனால் இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் நிஹல் ஹேபு வராச்சியோ, “இராணுவ கேம்ப் அமைக்கும் இந்த குறிப்பிட்ட நிலப்பகுதி அரசாங்கத்திற்கு சொந்தமானது. தனியாருக்கு சொந்தமானதல்ல. இராணுவ கேம்ப்பிற்கான கட்டுமானப் பணிகளை வனப் பாதுகாப்புத் துறையின் அங்கீகாரத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டி வருகிறது...'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 ஆண்டு அம்பாறை மாவட்ட பொன்னம்வெளி முஸ்லிம்களின் மேட்டு நிலம், விவசாய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேறினார்கள். இவர்களின் சட்ட விரோத குடியேற்றத்தை அங்கீகரித்த சிங்கள அரசு, 150 ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு வழங்கியது. அப்போது இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான அஷ்ரப் கடுமையாக எதிர்த்தார்.

அஷ்ரபின் எதிர்ப்பின் காரணமாக மாற்று ஏற்பாடாக அப்போது அரசு ஒதுக்கிய 140 ஏக்கர் நிலம்தான அஷ்ரப் நகர் நிலம். இந்த நிலத்தில் 87 ஏக்கர் நிலத்தை அபகரித்துதான் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு இராணுவக் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் அஷ்ரப் நகரில் இருக்கும் 150 முஸ்லிம் குடும்பங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாவார்கள் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இராணுவம் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ள பகுதிகளில் தீகவாய புனிதப் பிரதேசம் என (பவுத்தர்களின் புனித இடம்) அறிவிப்பு பலகையையும் வைத்திருக்கிறது இராணுவம்.

புனிதப் பிரதேசம் என்று கூறி முஸ்லிம்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, சிங்கள மக்களை அங்கு குடியமர்த்தும் அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இராணுவ முகாமிற்கான கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் சிங்கள அரசு செய்யும் சதிதான் இது என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகின்றனர். இப்பிரச்சினையை கையில் எடுத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அப்பகுதியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

இங்குள்ள குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சித்து வரும் இராணுவம், அவர்களுக்கு வேறு மாற்று இடங்களைத் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி வருகிறது.

“நிலத்தின் அனுமதிப் பத்திரங்களோடு வாழ்ந்து வரும் அஷ்ரப் நகர் மக்களை வெளியேற்றத் துடிக்கும் இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...'' என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.டி. ஹசன்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஏற்படுத்தி வரும் குடியேற்றங்களைப் போலவே, இலங்கை வட கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு. சமீப காலங்களாக இஸ்ரேலுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு இந்த குடியேற்றங்கள். அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் பலத்தை குறைக்கும் வகையில் இஸ்ரேலின் மறைமுக தூண்டுதலின் பேரில் சிங்கள அரசு ஏற்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

முஸ்லிம் - தமிழ் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் நிகழ்வதை தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

Please Click here to login / register to post your comments.