அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது நம்பிக்கையில்லா பிரேரணையே

ஆக்கம்: MSM ஐயூப்
அமெரிக்கா இறுதியில் இலங்கை விடயத்திலான பிரேரணையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிதித்துவிட்டது. அமெரிக்கா அதனை சமர்ப்பிக்கு முன் ஏதோ வானம் சரிந்து விழப் போவதைப் போல் பெரும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் செய்த ஆளுங்கட்சி, அது சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னனர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருக்கிறது.

இந்தப் பிரேரணையில் மூன்று விடயங்கள் தான் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல்தான் இதில் முக்கியமான விடயமாக இருக்கிறது.

அடுத்த மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது அரசாங்கம் ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறது, மேலும் என்னென்ன செய்ய திடடமிடப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய அறிக்கையொன்று அக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பது மற்றொறு விடயமாகும். இந்த விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கௌ;ள வேண்டும் என்பது முண்றாவது விடயமாகும்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறியதைப் போல் அமெரிக்கா நாட்டை ஆக்கிரமிக்கும் நிலைமையோ அல்லது ஜனாதிபதியை மின்சார கதிரையில் வைத்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றோ, குறைந்தபட்சம் இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை.

பிரேரணையின் முதலாவதும் முக்கியமானதுமான விடயம், அதாவது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் ஆக்கப்பூர்வமான சிபார்சுகளை நிறைவேற்றல் என்பது அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் பிரச்சினையாக இருக்க முடியாது. ஏனெனில் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நிறைவேற்றுவற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவே அரசாங்கமும் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆனால் தாம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளில் எந்தளவு நிறை வேற்றியிருக்கிறோம், மேலும் என்னென்ன செய்ய போகிறோம் என்பதைப் பற்றிய அறிக்கையொன்றை அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் தான் அரசாங்கத்திற்கு தலையிடியாக தெரிகிறது.

ஏனெனில் எமது நாட்டில் எமது பிரச்சினையொன்றை தீர்த்துக் கொள்ள நாம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி நாம் எங்கோ உள்ள சர்வதேச நிறுவனம் உன்றுக்கு என் வகைச் சொல்ல வேண்டும் என்பதே அரசாங்கத்தின் ஒரு கேள்வியாக இருக்கிறது. மறுபுறத்தில் இந்த விடயத்தில் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முற்பட்டால் அது இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்திற்கு வழங்கும் அனுமதிப் பத்திரமனக அமையும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

உண்மையிலேயே அரசாங்கத்தின் இந்த வாதம் தவறானது அல்ல. மேற்கண்டவாறு அடுத்த மனித உரிமை பேரவைக்; கூட்டத்தின் போது அறிக்கை சமர்ப்பிப்பதன் மூலமும் ஐ.நா. மனித உரிமை ஸ்தானிகராலயத்தின் உதவியையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதன் மூலமும் ஐ.நா. அதிகாரிகளுக்கு இலங்கை விடயத்தில் தலையிட கூடுதலான சந்தர்ப்பம் கிடைத்து விடும்.

அமெரிக்கா அதனை மிக சூசகமாகவும் பண்பான முறையிலும் இராஜத்நதிர ரீதியாகவும் வசனமாக்கி பிரேரணையில் உள்ளடக்கியுள்ளது. இது இலங்கையர்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்ற விடயங்களில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகிறது. அதனால் தான் அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதனையும் சர்வதேச நிறுவனம் ஒன்று மேற்பார்வை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா அந்தப் பிரேரணை மூலம் கூறுகிறது.

இதற்கு சர்வதேச ரீதியில் பலர் காரணம் கூறியிருக்கிறார்கள். பிரஜைகள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க துணைச் செயளாலர் மரியோ ஒட்டேரோ கடந்த 3ஆம் திகதி மனித உரிமை பேரவைக்; கூட்டத்தில் பேசும் போது மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சர்வதேச சமூகம் மூன்று வருடங்கள் காத்திருந்தது என்று கூறினார்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சர்வதேச நெருக்குதல் அதிகரிக்கவே இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கடந்த மாதம் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றி விசாரிப்பதற்கென விசாரணை நீதி மன்றமொன்றை நியமித்தார். அப்போது 'இலங்கை நெருக்குதல் வரும் போதெல்லாம் தமக்கு ஆதரவான ஆணையாளர்களை உள்ளடக்கிய ஆணைக் குழுக்களை நியமிக்கும் நீன்ட வரலாற்றைக் கொண்ட நாடாகும்' என ஹியூமன் ரைட்ஸ் வொச் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியிருந்தார்.

'பொறுப்புக் கூறல் சம்பந்தமாக சர்வதேச சமூகம் பிரச்சினை எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கம் ஆணைக் குழுவொன்றை நியமிக்கும். அந்த ஆணைக் குழு நீன்ட காலத்தை செலவளித்து விட்டு வெறுமையில் முடிந்து விடும்'; என்று அவரே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்த போது கூறியிருந்தார். ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் நிறுவனமானது சர்வதேச அபிப்பிராயங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தான் அரசாங்கம் இன்று எதிர் நோக்கியிருக்கும் பிரச்சினையாகும். சர்வதேச சமூகம் என தம்மை அழைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகள் மனித உரிமை விடயத்தில் சில நாடுகளுக்கு வேற்றுமை காட்டுவதாக அரசாங்கம் கூறுவது உண்மையே. அதே போல் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதி கட்டத்தின் போது போரை நிறுத்துமாறு மேற்கத்திய நாடுகள் கூறியதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாததன் காரணமாகவே தற்போது அந் நாடுகள் இலங்கைக்கு நெருக்குதலை கொடுத்து வருகின்றன என்றும் அரசாங்கம் கூறி வருகிறது.

அதுவும் உண்மையாக இருக்கலாம். ஏனெனில் மனித உரிமைகள் தான் பிரச்சினை எனறால் இஸ்ரேலிய படையினரும் அமெரிக்க படையினரும் முள்ளிவாய்க்காலில் இடம் பெற்றதாகக் கூறப் படும் சம்பவங்களைவிட படு பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் மேற்கு நாடுகளில் எவரும் அந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதில்லை.

இவை எவ்வளவு தான் உண்மையாக இருப்பினும் இப்போது அரசாங்கம் நம்பிக்கைப் பற்றிய பிரச்சினையையே எதிர்நோக்கியிருக்கிறது. எனவே அப் பிரச்சினை தற்போதைய ஜெனீவா மாநாட்டுக்கு அப்பாலும் நீன்ட காலத்திற்கு அரசாங்கத்தை மிரட்டிக் கொண்டே இருக்கும் போல் தான் தெரிகிறது. அதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி தான் அரசாங்கத்திற்கு இருக்கிறது. தாமே தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை அமுலாக்குவதே அந்த வழியாகும்.

ஆனால் 'தேசப்பற்றை' முன்நிறுத்தி செயற்பட்டுக் கொண்டு இருக்கும் அரசாங்கத்திற்கு இது இலேசான விடயம் அல்ல. மேலும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டி வரும். யோகி, எழிலன் ஆகியோர் காணாமற் போனதையிட்டு இராணுவ வீரர்கள் சிலரை விசாரணை செய்ய வேண்டி வரும்.

புலிகளும் நம்பிக்கையைப் பற்றிய இந்தப் பிரச்சினையையே எதிர் நோக்கியிருந்தார்கள். அது அவர்களது வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அவர்கள் கிராமங்களில் சாதாரண மக்களை நுற்றுக் கணக்கில் கொன்றார்கள், சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார்கள், போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களையும் கடத்தினார்கள். பின்னர் குற்றச்சாட்டுக்கள் வரும் போது ஒன்றில் அவற்றை மறுத்தார்கள், அல்லது நியாயப் படுத்தினார்கள்.

அது அவ்வப்போது குற்றஞ்சாட்டுவோரை வாயடைக்கச் செய்த போதிலும் அக்குற்றச்சாட்டுக்கள் புலிகளின் 'பிரத்தியேகக் கோவையில்'; சேர்க்கப்பட்டுக் கொண்டே வந்தன. அவற்றின் கூட்டு மொத்தம் புலிகளை 32 நாடுகளில் தடை செய்யக் காரணமாக அமைந்தது. இறுதியில் அது உலக நாடுகளின் ஆதரவை குறைத்து அவர்களின் தோல்விக்கும் ஒரு காரணமாகியது. சிறிய நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் உலக அரசியலில் நம்பகத் தன்மை அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.

Please Click here to login / register to post your comments.