முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா? - கொதிக்கும் இன உணர்வாளர்கள்

ஆக்கம்: சி.சுரேஷ்
'நடராஜன் மீது வழக்கு போடு​வதற்குக் காரணம் பழிவாங்கும் நட​வடிக்கையா அல்லது தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா?’ என்று பொங்குகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள். காரணம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மையமாகக்கொண்டே அடுத்தடுத்து நடராஜன் மீது வழக்குகள் தொடரப்படுவதுதான்.

தஞ்சாவூர் விளார் சாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்ட​ளையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தாய்த் தமிழர்களுக்காகவும் நினைவகம் கட்டி வரு கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த மே 18-ம் தேதி, நினைவகத்தைத் திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நடராஜன் மீது திட்டமிட்டு வழக்குகள் பாய்ச்சப்படுவதாகக் குற்றம் சாட்டு​கிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளரும் வழக்கறிஞருமான நல்லதுரை. ''அறக்கட்டளையின் சார்பாக, உலகத் தமிழர்களின் நன்கொடைகளால் நினைவகம் அமைக்கப்​படுகிறது. விளார் பஞ்சாயத்​திலும், நெடுஞ்சாலைத் துறையிடமும் முறையாக அனுமதி வாங்கி உள்ளோம். நடராஜன் உள்ளிட்டோர் மீது, 'நினை​வகத்தின் அருகே கட்டுமானப் பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டு இருந்த இடத்தை அபகரித்ததாக’ முதல் வழக்கு போடப்பட்டது. ஆனால், அந்த இடம் முறையாக குத்தகை ஒப்பந்தம் போட்டுத்தான் பயன்படுத்தப்பட்டது. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் நடராஜன் மீது, நினைவகத்தின் மறுபக்கம் உள்ள இடத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

வின்சென்ட் ஆல்பர்ட் என்பவரின் மனைவி லில்லியன் ஏஞ்சலுக்குச் சொந்தமான 3,315 சதுர அடி இடத்தை முறையான பத்திரப்பதிவுடன், அதிகபட்சத் தொகை கொடுத்து அறக்கட்டளை வாங்கியது. அந்த இடத்துக்குப் பக்கத்துக் கடைகளை இடித்து விட்டதாக வழக்குத் தொடர்ந்தார்கள். உண்மையில் மேம்பாலம் கட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர்தான் பல வருடங்களுக்கு முன், அந்தக் கடைகளை இடித்தனர்.

அதுபோலவே, நினைவகம் அமைக்கும் இடத்தில் வாய்க்கால் இருந்தது என்றும் சொல்கிறார்கள். வாய்க்கால் போகும் பாதையில் அரசு அனுமதியோடு ஒரு கல்லூரி, பல வீட்டு மனைகள் உள்ளன. இதற்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது? இப்படி நினைவகத்தின் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்தும் வகையிலேயே அதிகாரிகள் திட்ட​மிட்டு செயல்படுகின்றனர். தமிழ் இன எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, நினைவகம் கட்ட முதலமைச்சர் ஆதரவு அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

ஈழத் தமிழர்களுக்காக நினைவகம் அமைப்பதிலும் இத்தனை சோதனைகளா..?

படங்கள்: கே.குணசீலன்

Please Click here to login / register to post your comments.