ஜெனிவா தீர்மானம்: அமெரிக்காவின் சதியா?

ஆக்கம்: கே. சஞ்சயன்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம்.

அதேவேளை, இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவோ, ஆதரித்த நாடுகளோ அல்லது சரத் பொன்சேகாவோ ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற எதிர்க்கட்சிகளோ இது இலங்கைக்கு எதிரானது அல்ல என்கின்றன.

இந்தத் தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 24 நாடுகள் தான் ஆதரித்துள்ளன கிட்டத்தட்ட அதற்குச் சமமான (23) நாடுகள் இதனை எதிர்த்துள்ளன என்று நடுநிலை வகித்த நாடுகளையும் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்கிறது.

இது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது. என்ன தான் நியாயம் சொன்னாலும் இலங்கை அரசினால் ஜீரணிக்க முடியாத தீர்மானம் ஒன்று சர்வதேச அமைப்பு ஒன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம். சர்வதேச கண்காணிப்பு வளையத்துக்குள் முதல்முறையாக இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இதற்கு இந்தத் தீர்மானம் வழிசெய்துள்ளது.

அமெரிக்கா சமர்ப்பித்த இந்தத் தீர்மானத்துக்கு 40 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன. அதில் 13 நாடுகள் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள்.

ஏனைய 27 நாடுகளும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் இருப்பவை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பார்வையாளர் நிலையில் உள்ள நாடுகளாலும் இணை அனுசரணை வழங்க முடியும்.

இவை தவிர, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காமல்- ஆதரித்து வாக்களித்த மேலும் 11 நாடுகளையும் சேர்த்தால் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 51 ஆகி விட்டது. இது நடுநிலை வகித்த நாடுகளையும் சேர்த்து எடுக்கப்பட்ட கணக்கல்ல.

எவ்வாறாயினும் உலகில் உள்ள மொத்த நாடுகளில் நான்கில் ஒரு பங்கு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளன என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

இந்தநிலையிலும் கூட, அரசாங்கம் பெரும்பாலான நாடுகள் தம்முடன் இருப்பதாக கூறிக் கொண்டிருப்பது விந்தை தான். சர்வதேச அரங்கில் இலங்கை தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறியுள்ளது என்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆதரவுத் தளத்தை இழந்து போயுள்ளது என்பதற்கும் இந்தத் தீர்மானம் தெளிவான ஆதாரமாகியுள்ளது.

போர் முடிவுக்கு வந்த சில நாட்களில், 2009 மே 26-27ம் திகதிகளில் கூட்டப்பட்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன.

அப்போது அந்தத் தீர்மானத்தை நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

ஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்டது, போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குற்றங்களை விசாரிக்கக் கோரும் வகையிலான ஒரு கண்டனத் தீர்மானம்.

ஆனால் அதனைத் தோற்கடித்து விட்டு, இந்தியா, ரஸ்யா, சீனாவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அரசுக்குப் பாராட்டு வழங்கும் விதத்தில் அமைந்திருந்தது.

அப்போது அந்தத் தீர்மானத்தை- அதாவது இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் மொத்த எண்ணிக்கை 29. அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், பங்களாதேஸ், பொலிவியா, பிரேசில், புர்கினா பாஸோ, கமரூன், சீனா, கியூபா, டிஜிபோட்டி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்டான், மடகஸ்கார், மலேசியா, நிக்கரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, செனகல், சவுதி அரேபியா, தென்ஆபிரிக்கா, உருகுவே,சாம்பியா ஆகியனவே அவை.

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக,அதாவது இலங்கைக்கு எதிராக பொஸ்னியா ஹெர்சிகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிக்கோ, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவிற்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 12 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.

ஆர்ஜென்ரீனா, காபோன், ஜப்பான், மொரிசியஸ், தென்கொரியா, உக்ரைன் ஆகிய 6 நாடுகள் நடுநிலை வகித்தன.

இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த அல்லது இலங்கைக்கு எதிராக நின்ற நாடுகளின் எண்ணிக்கை 24.

இந்தியா, சிலி, கோஸ்ராரிக்கா, கௌதமாலா, மெக்சிக்கோ, பெரு, உருகுவே, ஒஸ்ரியா, பெல்ஜியம், இத்தாலி, நோர்வே, ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, கிறீஸ், ஹங்கேரி, போலந்து, மோல்டோவா, ருமேனியா, பெனின், கமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா ஆகியனவே அவை.

அதேவேளை, கொங்கோ, மொரிட்டானியா, உகண்டா, பங்களாதேஸ், சீனா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்வடோர், ரஸ்யா ஆகிய 15 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

அங்கோலா, பொற்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது கட்சி மாறிவிட்டன. இவை ஒன்றில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன அல்லது நடுநிலை வகித்தன.

2009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற எந்தவொரு நாடுமே இம்முறை தீர்மானத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கை தனது நன்மதிப்பையும் நம்பகத்தையும் இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது.

இம்முறை நடுநிலை வகித்த நாடுகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டு அரசாங்கம் தனது பக்கத்தில் 23 நாடுகள் இருப்பதாக கூறிக் கொள்கிறது.

ஆனால், அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது உறுதியானால்- ஏன் நடுநிலை வகிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.

இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தினால் தான் பல நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் கருத்து முற்றிலும் தவறானது.

அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அது ஒவ்வொரு நாட்டினதும் தனிப்பட்ட இறைமையை மீறுகின்ற அளவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில் தான், இஸ்ரேல் தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க அமெரிக்கா விரும்பினாலும், அதற்காக அமெரிக்காவினால் ஒரு வாக்கைக் கூடத் திரட்ட முடியவில்லை.

இஸ்ரேல் விடயத்தில் அமெரிக்காவுக்காக எந்தவொரு நாடும் வாக்களிக்கவில்லை. தனியே அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது.

36 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 10 நாடுகள் நடுநிலை வகித்தன.

இந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களினால் தான் தோல்வியடைய நேரிட்டதாகவும், இந்தியாவே கவிழ்த்து விட்டது என்றும் அரசாங்கத் தரப்பினால் கூறப்படும் நியாயங்கள் வலுவிழந்து போகின்றன.

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது உள்ள நியாயத்தன்மைக்கு ஒருவிதமாகவும், இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதுள்ள நியாயத்தன்மைக்கு இன்னொரு விதமாகவும் கற்பிதம் செய்ய முடியாது.

எவ்வாறாயினும் இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடியதொன்றாகவே இருந்தாலும், உண்மையில் இது ஒன்றும் நாட்டின் இறைமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.

அத்துடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் இது அமையவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானமே இது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவே இந்தத் தீர்மானம்.

இந்த அறிக்கை கையளிக்கப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன, காலஅவகாசம் தேவை என்றெல்லாம் அரசாங்கம் ஜெனிவாவில் காரணங்களை அடுக்கியது.

ஆனால், கொழும்பில் வைத்து அதே அரச பிரதிநிதிகள், எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்றார்கள்.

இந்த இரட்டைவேடம் தான் ஜெனிவா தீர்மானத்துக்கான அடிப்படை. இந்தத் தீர்மானம் தொடர்பாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டது அரசாங்கம் தான்.

நாட்டுக்கு எதிரான மிகப்பெரிய சர்வதேச சதியாகவும் இறைமையைப் பறிக்கின்ற செயலாகவும் பயங்கரவாதத்துக்கு மீளவும் உயிர் கொடுக்கின்ற முயற்சியாகவும், இனநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற நடவடிக்கையாகவும் காண்பித்து பிரச்சினையை பூதாகாரப்படுத்தியது அரசாங்கமே.

அதேவேளை இந்தத் தீர்மானத்தினால் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிளவுகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இன்னமும் போரின் காயங்கள் ஆற்றப்படவில்லை அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது என்பதை இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

வெறுமனே மீளக்குடியமர்வும், நிவாரணங்களை வழங்கலும், பொருளாதார அபிவிருத்தியும் மட்டும் தான் நல்லிணக்கம் என்று அரசாங்கம் தவறாகக் கருதிக் கொள்கிறது.

அதற்கும் அப்பால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குதலும், பொறுப்புக் கூறுதலும் நல்லிணக்கத்துக்கு முக்கியமானவை.

இதனைப் பழிதீர்க்கும் முயற்சி என்று கூறுவது, அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்ற அரசாங்கம் தவறிவிட்டது. அதனை ஆற்றமுடியும் என்று நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டது.

இந்த ஆறாவடு நீண்டகால நோக்கில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலேயே, அதற்கு சர்வதேச சமூகம் ஆதரிக்கிறதே தவிர, பிரச்சினையைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வதற்காக அல்ல.

நல்லிணக்கத்துக்கு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஆனால், தான் எதையும் மறந்து விடத் தயாரில்லை. இப்போதும், போர்க்காலத்தில் புலிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் பற்றியே பேசுகின்ற அரசாங்கம், அரச படைகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிப் பேசத் தயாரில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தை உருவாக்குவது இப்படியல்ல.

தமிழர்கள் மட்டும் தான் எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்ற அரசினதும் அரசுக்குச் சார்பாக குரல் கொடுப்போரினதும் விருப்பம் நல்லிணக்கத்தைத் தராது.

எல்லாவற்றையும் மறந்து விட்டு நல்லிணக்கத்தைத் தேடும் வழிமுறை நடைமுறைக்கு ஒத்துவராது. அதற்கான மனப்பக்குவம் சாதாரண மக்களிடம் இருக்கிறதோ இல்லையோ மக்களை வழிநடத்தும் அரசியல் தலைமைகளிடம் இல்லை.

அதேவேளை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் உள்ள சர்வதேச அழுத்தங்களை நிராகரித்துள்ள அரசாங்கத்தினால் நீண்டகாலத்துக்கு இதே நிலைப்பாட்டில் பயணிக்க முடியாது.

இப்போதைக்கு ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்தாலும் விரும்பியோ விரும்பாமலோ அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் ஒன்று உள்ளது.

அவ்வாறு செய்யாது போனால் அது இன்னொரு தீர்மானத்தை தேடிப் பிடித்து தலையில் கொட்டிக் கொள்வதற்கு காரணமாகி விடலாம்.

Please Click here to login / register to post your comments.