முஸ்லிம் சகோதரர்களை அரவணைத்து தந்தை செல்வா வழியாக ஒற்றுமையாகச் செல்வோம்

ஆக்கம்: சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன்
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவதரித்தார். இன்று அவரது 114 ஆவது பிறந்த நாள். தந்தை செல்வா நடந்து வந்த பாதையினை திரும்பி பார்க்கின்றோம். வாகனத்தில் அமர்ந்திருக்கும் தந்தை செல்வா இந்த ஈழத்தைப் பார்க்கின்றார். அகிம்சை வழி வந்தவருக்கு இரத்த ஆறு கண்டு மயக்கம் வந்தது. கண் கலங்கி நிற்கின்றார். தான் அரவணைத்து ஒருங்கிணைத்த முஸ்லிம் சகோதரர்களைப் பார்க்கின்றார். அவர்கள் பட்ட துன்பம் கண்டு பதை பதைக்கின்றார். தந்தை செல்வா வந்த வரலாற்றுப் படியை மறந்து விட்டோம். வழியும் தெரியாதவரானோம். வெளிச்சம் ஏற்றினாலும் புரியாதவராக நிற்கின்றோம்.

தந்தை செல்வா பிறந்த தினமான இன்று அவர் முஸ்லிம் சகோதரர்களை ஒருங்கிணைத்து அணைத்து வந்த வரலாற்றைப் பார்த்திடுவோம்.

தமிழ்மொழி பேசும் மக்களில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தமிழ்மொழிக்கு அளப்பரிய சேவை செய்கின்றார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பெரும் தலைவர்கள் இருந்தார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் தலைவராகவும் தந்தை செல்வா தமிழரசுக் கட்சித் தலைவராகவும் பேராசிரியர் சுந்தரலிங்கம் அடங்காத் தமிழ்க் கட்சிக்கு தலைவராகவும் இருந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் திருகோணமலைத் தொகுதியுடன் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டார்.

1952 ஆம் ஆண்டு வரையும் மட்டக்களப்பு மாவட்டம், தற்பொழுது இருக்கும் அம்பாறை மாவட்டத்தையும் உள்வாங்கி இருந்தது. அம்மாவட்டத்திலிருந்த எத்தொகுதிகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் போட்டியிடவேயில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்களை தமிழ் காங்கிரஸ் இணைத்துக்கொள்ளவே இல்லை.

பேராசிரியர் சுந்தரலிங்கத்தின் அரசியல் செல்வாக்கு வவுனியாவுடன் நிறைவு பெற்றது. தந்தை செல்வாதான் முஸ்லிம் சகோதரர்களை தமிழ் மக்களுடன் இணைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார். 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. எம்.எஸ்.காரியப்பர் தமிழரசுக் கட்சியின் பெயரில் கல்முனைத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவ்வாறே பொத்துவில் தொகுதிக்கு எம்.எம்.முஸ்தப்பா 1956 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். சி.ஏ.அஹமது, எம்.ஈ.எச்.முஹம்மது அலி அவர்களையும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்.

கல்முனை தந்தை பெரும் மகன் மசூர் மௌலானாவை தமிழரசுக் கட்சி மேடைகளில் ஏற்றி அவர் மூலம் பல ஆண்டுகளாக கிழக்கின் முஸ்லிம் சகோதரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் இணைத்த பெருமை தந்தை செல்வாவிற்கே சேரும். மசூர் மௌலானாவை சேனேட்டராக நியமித்து கிழக்கின் முஸ்லிம் மக்களுக்கு பெருமை கொடுத்தவர் தந்தை செல்வாவே ஆவார்.

மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். ஒரு தமிழ் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யும் தொகுதியாகும். மட்டக்களப்பு தொகுதியில் முஸ்லிம் சகோதரர்களுக்கு கொடுத்த உரிமையை பறிப்பதற்கோ எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கோ துணை போக ஒரு காலமும் முயற்சிக்கவே இல்லை தந்தை செல்வா.

ஆனால், 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்த கதை கேளீர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் இராஜதுரை மட்டக்களப்பு தொகுதிக்கு தேர்தலில் நிற்கின்றார். அன்றைய கூட்டணி தலைமைக்கு இராசதுரையைப் பிடிக்காது. அதனால், கவிஞர் காசி ஆனந்தன் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் நிற்பாட்டப்பட்டார். முதலாவதாக இராசதுரை 26,648 வாக்குகளைப் பெற்றார். இரண்டாவதாக ஐ.தே.கட்சியின் அஹமட் பறீத் 25,345 வாக்குகளைப் பெற்றார். மூன்றாவதாக காசி ஆனந்தன் 22,443 வாக்குகளைப் பெற்றார். சிறுதொகை வாக்குகளினால் மூன்றாவது இடத்திற்கு காசி ஆனந்தன் தள்ளப்பட்டார். காசி ஆனந்தன் இரண்டாவதாக வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம் மக்களின் இடம் பறி போயிருக்கும். இத்தவறை எக்காரணம் கொண்டும் தந்தை செல்வா செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினரான பின்பு தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சி மாறின. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அவ்வாறு மாறிய பொழுதும் அவர் மீதோ அல்லது முஸ்லிம் சமூகத்தின் மீதோ வசைபாடவில்லை.குற்றம் கூறவில்லை. குறை சொன்னதில்லை. ஒரு சுடு சொற்கூட கூறாத பெருந்தகை தந்தை செல்வா. எக்காலத்திலும் அவர்களை அரவணைத்தே சென்றார்.

நிந்தவூர் தொகுதி
1959 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற எல்லை நிர்ணயம் செய்ய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு 53ஃ4 வீதமும் முஸ்லிம்களுக்கு 41ஃ4 வீதமும் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் வழங்க வேண்டியிருந்தது. முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க நிந்தவூரை முஸ்லிம்களுக்கான தொகுதியாக உருவாக்குவதற்கு தந்தை செல்வா சம்மதித்தார்.

பண்டாசெல்வா உடன்படிக்கை
1956 ஆண்டு பண்டாசெல்வா உடன்படிக்கை கைச்சாத்தானது. அவ்வுடன்படிக்கையின் படி கிழக்கு மாகாணத்திற்கு குறைந்தது இரண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு மற்றொன்றாகும். இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம்களுக்கு ஒரு தேசிய இனமாகக் கணிக்கப்பட்டு அவர்களுக்கென ஒரு தனியான பிரதேச சபையும் வழங்கப்பட்டது. அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் தந்தை செல்வாவை தனது பாவால் மலர் மாலை சூட்டுகின்றார்.

  "திருமலை தமிழரசு மாநாட்டில் வடகிழக்கில் ஈரரசு, ஓரரசில் தமிழ் மணக்கும்,
  மறு அரசில் இஸ்லாம் இனிக்கும், என நாங்கள் ஒருங்கிணைய,
  வழி சமைத்த பெருந்தலைவா!
  நீ நடந்த அந்தப் பாதையிலே நாம் நடந்தால் தான் விடிவு உண்டு,
  எம் கரங்கள் இறுகினனே, எம் கால்கள் விரைந்தனவே
  உன் பாதை அது எம்பாதை ஒருங்கிணைந்தே இங்கு வந்துள்ளோம்"

தந்தை செல்வா நடந்து வந்த பாதையிலே மீண்டும் நடந்திடுவோம். முஸ்லிம் சகோதரர்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையாகவே சென்றிடுவோம். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை களைத்திடுவோம். தமிழ் பேசும் மக்கள் ஒருங்கிணைய வழி சமைத்திடுவோம்.

Please Click here to login / register to post your comments.