மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம்

அகில உலக மனித உரிமை நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது.

மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார்.

கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், நாட்டின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிவிடும்" என்று எச்சரித்தார்.

தமிழகத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து திரு. தோழர் தியாகு அவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபாண்மை மக்களும் சந்திக்கிற மனித உரிமை மீறல்களும் குறித்து தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலர் திரு. தமீம் அன்சாரி அவர்கள் விரிவாய் எடுத்துரைத்தனர்.

மலைவாழ் மக்களிடத்தில் அரசும் அதன் அமைப்புகளும் நடத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து மலைவாழ் மக்கள் உரிமை இயக்கத் நிறுவுனர் திருமதி. முத்துலட்சுமி வீரப்பன் அவர்களும் உரையாற்றினர். தன் தனிப்பட்ட வாழ்வில் தான் சந்தித்த துயரங்களை விவரித்த அவர், கொடுமை கண்டும் அடக்குமுறை கண்டும் அஞ்சாது போராடினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் மீட்படையும் என்றும், தற்பொழுது டெல்லி நாடாளுமன்றத்தில் மலைவாழ் மசோதாவை உடனடியாய் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

அடிப்படைவாத ஊடகங்கள் தமிழகத்தில் செய்கிற மனித உரிமை மீறல்களே வன்முறையின் நாற்றாங்கால் என்று தமிழர்களத்தின் தலைவர் திரு. அரிமாவளவன் கூறினார்.

இறுதியில் உரையாற்றிய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழீழ மக்களுக்கு நிகழம் வரலாறு காணாத கொடுமைகளும், மனித வதைகளும் தடுக்கப்பட தமிழகமும், இந்தியாவும் குரல் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முன்தாக பேச்சாளர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. உலக தமிழ் பேரவையின் தலைவர் திரு. ஜனாத்தனம், இக்கூட்டத்தின் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.

மனிதம் அமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேசு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Please Click here to login / register to post your comments.