தடை இல்லாமல் வரும் பொருளாதார நெருக்கடி

ஆக்கம்: இதயச்சந்திரன்
வடக்கிற்கான சந்திரஹாசனின் வசந்த வருகையோடு, கிழக்கு சந்திரகாந்தனின் அஸ்தமனமும் ரவூப் ஹக்கீமின் உதயமும் தோன்றப் போவதாக செய்திகள் கூறுகின்றன. மேற்குலகின் ஜெனீவா அழுத்தங்களுக்கு மாற்று வழி முறைகளைத் தேடும் அரசின் புதிய தெரிவுகளாக இதனைப் பார்க்கலாம்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேடை, அடுத்த அரங்க நிகழ்விற்கு ஏற்ற வகையில் உருவாகாவிட்டால் மாகாண சபைத் தேர்தல் முன்னெடுக்கப்படும் சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றது. பொருளாதார நிலைவரம் குறித்தான, மத்திய வங்கியின் ஆண்டறிக்கை வெளியீட்டு நிகழ்வில், போரினால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மீள் கட்டுமானப் பணிக்கு இந்த வருடம் 89 பில்லியன் ரூபாய்களை செலவிடப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த செய்தி இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மத்திய வங்கி வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், அதிகரிக்கும் அரச செலவீனங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மேலதிகமாக பில்லியன் கணக்கான ரூபாய் நாணயத்தாள்களை இம்மாதம் அச்சிட வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசிற்கு ஏற்படுத்துமென குறிப்பிட்ட விவகாரத்தைக் கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டு வருவாய் குறைவடைந்து செல்லும் நிலையில், 2010இல் 4.88 பில்லியன் டொலர்களாகவிருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2011 இல் 10 பில்லியன்களாக அதிகரித்திருப்பது பொருளாதார நிலைமையில் பல சிக்கல்களை தோற்றுவிக்கின்றது.

ஜனவரி 2012இல் மட்டும் ஏற்றுமதி வருவாய்களுக்கும் இறக்குமதி செலவீனங்களுக்குமிடையிலான வேறுபாடு அல்லது பற்றாக்குறை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் களாகும். அத்தோடு வெளிநாட்டு கடன் வரம்பின் எல்லையைத் தொடும் சோக நிகழ்வு அண்மிப்பதால், சென்மதி நிலுவை (Balance of Payment) நெருக்கடியைத் தணிப்பதற்கு அரச வட்டி வீதத்தை உயர்த்த வேண்டிய அவசியமேற்படுகிறதென திறைசேரிச் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர கூறுவது அபாயகரமான சமிக்ஞையை காட்டுகிறது.

அரசின் முறிச்சந்தை 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பத்திரங்களை கொடுத்து நிதியைப் பெறும் உச்சக் கடன் எல்லை இதுவாகும். வங்கிகளிடமிருந்து அரசு பெறும் கடன் தொகை அதிகரிப்பு, திறைசேரியில் மேலும் பல நெருக்கடிகளை சென்மதி நிலுவையில் ஏற்படுத்துகிறது. இரண்டு மாதத்தில் இரு தடவைகள் வட்டி வீதத்தை உயர்த்திய அரசு, வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவடையாமல் தடுக்கவும் இதனூடாக முயற்சிக்கிறது.

வட்டி வீதத்தை உயர்த்துவதால் வங்கிகளிடமிருந்து பெறும் கடன் தொகையின் அளவு குறையும் என்பதோடு, இறக்குமதிக்கு தேவையான வெளிநாட்டு நாணயங்களை வாங்கும் திறன் வீழ்ச்சியடைவதால் திறைசேரியில் கையிருப்பு மிஞ்சும் என்பதுதான் இந்த அதிகரிப்பின் சூத்திரமாகும்.

இதனால் உடனடியாகப் பாதிக்கப்பட்டோர் வாகனங்களை இறக்குமதி செய்யும் தேசிய தரகு முதலாளிகளாவர். வாகனங்களின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பினால் இவர்களின் வர்த்தகம் பாதிப்படைவதாக கொதிப்படைந்துள்ளார்கள். ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தமூடாக வரும் வாகனங்களை, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குவதற்கு அரசு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை இத் தரகு முதலாளிகள் எதிர்க்கின்றார்கள்.

ஆகவே, தேசிய அளவில் வர்த்தகர்களுக்கும் அரசுக்குமிடையே முரண் நிலை உருவாகுவதையும் அது அதிகரிக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில், இறக்குமதியின் வளர்ச்சி குறைவடைந்து போகின்றது, அதனால் வெளிநாட்டு நாணய வரவினை சேமிக்கக் கூடியதாகவுள்ளதாக குறிப்பிட்டதோடு, டிசெம்பர் 2011 இல் 34 சதவீதமாக இருந்த இறக்குமதிகளுக்கான செலவீனம் ஜனவரி 2012 இல் 20 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு அடுத்து வரும் வாரங்களில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகள் உள் நுழையும் வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறது.

இவை தவிர, மார்ச் 30 வரை 164.2 மில்லியன் டொலர்கள் கொழும்பு பங்குச் சந்தையிலும், அரச முறிகள் மற்றும் பிணையங்கள் மூலம் இந்த ஆண்டில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வந்து சேர்ந்துள்ளதாக மத்திய வங்கி ஆறுதலடைகிறது.

அதேவேளை, ஏப்ரல் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட நிதிக்கொள்கை குறித்தான மீளாய்வு அறிக்கையில், ஏ.சி.யூ (A.C.U) இன் கணக்கினை உள்ளடக்காத உத்தியோகபூர்வ மொத்த சேமிப்பு நிதியமானது அண்ணளவாக ஏப்ரல் 4 ஆம் திகதியன்று 6 பில்லியன் டொலர்களாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்றரை மாத கால இறக்குமதிக்கு தேவையான அளவு நிதியென்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது அந்நிய செலாவணியின் வரவு அதிகரிக்காவிட்டால் நாட்டின் இறக்குமதிக்கான செலவு அடுத்த மூன்றரை மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்குமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

இம்மாதம் 2 ஆம் திகதி அனைத்துலக நாணய நிதியம் கடனாக வழங்கிய 426.8 மில்லியன் டொலர்களோடு, அரச பிணையச் சந்தையிலுள்ள 400 மில்லியன் டொலர்களும் கொழும்பு பங்குச்சந்தையிலுள்ள 164 மில்லியன் டொலர்களும் சென்மதி நிலுவை நெருக்கடியை தற்காலிகமாக தணிக்கும் என மத்திய வங்கி நம்புவதுபோல் தெரிகிறது.

அது மட்டுமல்லாது நாட்டில் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதாகவும், இச்சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலீடுகளோடு இலங்கைக்கு வர வேண்டும் என்கிற அழைப்பினை சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களை நோக்கி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்.

பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், 110 சத வீதமாகவிருந்த அரச மொத்த கடன் 80 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் மூன்றரை மாதத்திற்கு தேவையான 6.1 பில்லியன் டொலர்கள் திறைசேரிச் சேமிப்பில் இருப்பதாகவும், கடந்த வருடம் ஒரு பில்லியன் டொலர்களாகவிருந்த வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) இவ்வருடம் 2 பில்லியனை எட்டுமென நீட்டி முழக்கும் ஆளுநர், 2015 ஆம் ஆண்டளவில் தலைக்குரிய வருமானம் 4000 டொலர்களாக அதிகரிக்குமென சொல்வதுதான் கொஞ்சம் மிகையாகப்படுகிறது.

அத்தோடு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சென்றடையக்கூடிய சில துறைகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தொலைத் தொடர்பு, துறைமுக அபிவிருத்தி, உல்லாசப் பயணத்துறை போன்றவற்றை குறிப்பிடும் மத்திய வங்கியின் ஆளுநர், சங்கரி லா வந்து விட்டது, ஐ.ரி.சி ஷெரடன் (ITC Sheraton) வந்து கொண்டிருக்கிறது, தென்னாபிரிக்காவிலிருந்த சன் சிற்றியும் வருகிறது என்பதோடு, பிரபல்யமான சிங்கப்பூர் முஸ்தபாவும் 1000 அறைகள் கொண்ட மாபெரும் உல்லாச விடுதியை நிர்மாணிக்க வருகிறாரென பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இவை தவிர "எக்ஸ்போ 2012' கண்காட் சிக்கு சீனாவிலிருந்து வருகை தந்த முதலீட் டாளர் குழுவொன்று, தமது பங்கிற்கு சில நம்பிக்கைகளை ஊட்டிச் சென்றுள்ளது. அம்பாந்தோட்டை வணிக நகரத் திட்டத்திலும் சர்வதேச துறைமுக நகரத் நிர்மாணிப்பிலும், அடுத்து வரும் பத்தாண்டுகளில் 50 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இவையனைத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அரசு மேற்கொள்ளும் பரப்புரைகளாகக் கருதும் அதேவேளை, இந்தியாவுடனான அதிகரிக்கும் முரண் நிலை அந்நாட்டுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளள வர்த்தக உறவில் பாதிப்பை உருவாக்கும் சூழல் உருவாகுவது போல் தெரிகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்ற அழுத்தம் அரச உயர் மட்டத்தில் எழுந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இறக்குமதியாகும் வாகனங்களிற்கான தீர்வை அதிகரிப்பினால், இந்திய வாகன ஏற்றுமதியாளர்கள் அதிகம் பாதிப்புறுவதாக மதிப்பிடப்படுகிறது. அத்தோடு செப்டெம்பரில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவரமைப்பு (IAEA) மாநாட்டில், தென்னிந்திய அணு உலைகளால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பேசப்போவதாக எரி சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட செய்தி இந்தியாவுடனான முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புண்டு.

இதில் இந்திய எண்ணெய் நிறுவனத் தோடு அரசு மேற்கொள்ளப் போகும் உராய்வுப்போக்கு, ஈரானால் வந்த பாதிப்பை விட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது.

அதேவேளை, அரச நிறுவனங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப னத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரிப்பினைக் கவனிக்க வேண்டும்.

இலங்கை ரயில்வே திணைக்களம் 3.4 பில்லியன் ரூபாவையும், இலங்கை கடற்படை 7 பில்லியனும், இலங்கை இராணுவம் 2 பில்லியனும் அத்தோடு அரச நிறுவனங்கள், தனியார் சக்தி உற்பத்தி மையங்கள் மற்றும் விமான போக்குவரத்து சபைகள் போன்றவை 63.6 பில்லியன் ரூபாய்களை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு கடன்பட்ட நிலையில் இருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கூறுகின்றார்.

இச்சிக்கல்களை வேறொரு கோணத்தில் அணுகுகின்றார் அரச நிறுவனங்களிற்கான (COPE) நாடாளுமன்ற குழுவின் தலைவர் அமைச்சர் டியூ.குணசேகரா. இந்நிறுவனங்களை திறைசேரியின் பிரநிதிதிகள் சரியாக மேற்பார்வை செய்வதில்லை என்பது தான் குணசேகராவின் குற்றச்சாட்டு.

திறைசேரிக்கும் மத்திய வங்கிக்குமிடையிலான பகைமையற்ற முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே அமைச்சரின் குற்றச்சாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவை தவிர, நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களால் அரசு எதிர்கொள்ளும் சிக்கல்களை நோக்கினால் மேலும் பல தகவல்கள் வெளிவரும்.

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸின் பயன்பாட்டிலுள்ள 21 விமானங்களிற்கான மாதாந்த வாடகைப் பணமாக 7.7 மில்லியன் டொலர்களையும், மிஹின் லங்கா நிறுவனத்தின் இரண்டு விமானங்களிற்கான வாடகையாக 475,000 அமெரிக்க டொலர்களையும் அரசு செல்லுத்துவதை காணலாம்.

இந்நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பு, அந்நிய செலாவணியின் வீழ்ச்சி, மூன்றரை மாதத்திற்கு மட்டும் தாக்குப் பிடிக்கும் திறைசேரிச் சேமிப்பு என்பன நாட்டின் பொருண்மிய வளர்ச்சியை 8 இலிருந்து 6 சதவீதமாக குறைத்து விடுமென்கிற உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான யூ.பி.எஸ்.செக்கியூ ரிட்ஸ் ஏசியா லிமிட்டட் (UBS Securities Asia Ltd) டின் எதிர்வு கூறல் நிஜமானது போல் தெரிகிறது.

Please Click here to login / register to post your comments.