தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்

தமிழீழ விடுதலைப் போரினை சர்வதேச அரங்குகளில் விவாதித்தும் - பேசியும் வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகரும், பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான திரு.பாலசிங்கம் அவர்கள் இன்று - 14.12.06 லண்டனில் காலமாகியுள்ளார். அவரது இறப்பு புலத்தமிழ் மக்களை ஆழந்த கவலைக்குள்ளும், வேதனைக்குள்ளும் தள்ளியுள்ளது. சிங்கள பெருந்தேசியவாதத்தின் கொடிய இனஅழிப்பு நோக்குக் கொண்ட அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போரில் தன்னை 30 வருடங்களாக இணைத்துப் பணியாற்றிய திரு.பாலசிங்கம் இன்றைய முக்கிய காலச்சந்தியில் எங்களை விட்டுச் சென்றது தாங்கொணா அதிர்ச்சியினைத் தந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராகவும் - பேச்சுவார்த்தைக் குழுத்தலைவராகவும் பாலசிங்கம் அவர்கள் இறுதிவரைப் பணியாற்றினார். 1985ல் இந்திய ஏற்பாட்டில் இடம்பெற்ற திம்புப் பேச்சுக்களின் வழிகாட்டியாக, 1989 - 1994 களில் சிறீலங்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்களில் பங்கேற்றவராக, 2002ற்குப் பிற்பட்ட நோர்வே மத்தியத்துவத்துடனான பேச்சுக்களிற்கான தமிழர் குழுவின் தலைவராக திரு.பாலசிங்கம் திகழ்ந்தார். சிங்கள அரசுகள் எவ்வாறு தமிழ் மக்களை திட்டமிட்ட முறையில் ஏமாற்றுகின்றது என்பதை தெளிவுபட அறிந்த - அனுபவம் வாய்ந்த அரசியல் - இராஐதந்திர நிபுணராக திகழ்ந்த பாலசிங்கம் அவர்கள் தமிழீழ மக்கள் சிங்கள அரசின் கொடிய இராணுவ முன்னெடுப்புக்களால் சொல்லாணா துன்புறும் இன்றைய வேளையில் எம்மை விட்டுப் பிரிந்தமை ஒரு துன்பகரமான நிகழ்வாகும்..
தமிழீழ விடுதலைப் போரின் நியாயமான தேவைகளுக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்களுக்குமிடையே நிலவிய இடைவெளியினை நிரப்பி, தமிழீழ விடுதலையை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற பெருநம்பிக்கையுடன் உழைத்த பாலசிங்கம் அவர்கள், தமிழர் விடுதலைப் போரின் மிக முக்கிய தத்துவார்த்த கொள்கை வகுப்பாளராகவும் விளங்கினார் என்பதை உலகம் அறியும்.
சிறந்த மனிதநேய சிந்தனையாளனாகவும், இலக்கிய ஈடுபாடு கொண்டவராகவும் வாழ்ந்து மறைந்த பாலசிங்கம் அவர்கள் புலத்தமிழ் சமூகத்திலிருந்து தாயக விடுதலைக்காக தன்னை இணைத்துச் செயற்பட்ட பெருமனிதர் என்கின்ற உண்மை இந்த வேளையில் நினைக்கப்படுகின்றது. அவரது பாதையையொட்டி பல்லாயிரம் புலத்தமிழர்கள் இகன்று தமிழீழ விடுதலையைக்காக உழைக்கின்றனர்.
இலங்கைத் தீவில் ஒடுக்கப்படும் தமிழீழ மக்களின் அரசியல் விடுதலையும், பாதுகாப்பும் தமிழீழ மக்களின் இறைமையை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்விலேயே தங்கியுள்ளது என்கின்ற பட்டறிவுடன் இறுதிவரை வாழ்ந்து மரணித்த பாலசிங்கம் அவர்களை ஐரோப்பிய, வடஅமெரிக்க, அவுஸ்ரலேசிய, ஆபிரிக்க நாடுகளில் வாழும் புலத்தமிழ் மக்கள் என்றும் நினைவில் நிறுத்துவதுடன் - அவரது கனவு நிறைவேற தொடர்ந்தும் உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கம் என்று நம்புகின்றனர்.
பாலசிங்கம் அவர்களின் துன்பத்தில் துயறுரும் அவரது மனைவி அடேல் பாலசிங்கம் அவர்களுடன் நாங்களும் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
For Further Contacts: ift@bluewin.ch
(IFT is a confederation of Tamil Diaspora Organisations)
பிரசுரித்த நாள்: Dec 15, 2006 11:57:43 GMT