'டெசோ' முழக்கம் அர்த்தம் உள்ளதா? - வரவேற்கும் கொளத்தூர் மணி

ஆக்கம்: இரா. தமிழ்க்கனல்

'தமிழ் ஈழ இனப்படுகொலையை நினைவில் ஏந்துவோம்!' எனக்கோரி, சென்னை மெரினாவில் மே 20-ம் தேதி தமிழர் ஒன்றுகூடல் நடக்க இருக்கிறது. 'மே பதினேழு இயக்க’த்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

'இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்த விசாரணை முடிவதற்குள், இனப்படுகொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்பது ஏன்?'

''அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது, கொலையாளி ராஜபக்சேவிடமே நீதி கேட்பது என்பதாகவே இருக்கிறது. ஆனாலும் ஈழப் பிரச்னையை சர்வதேச அளவில் விவாதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறது என்ற அளவில் அதை வரவேற்கலாம். கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைப்படி போர்க்குற்றவாளி​ களை விசாரித்துத் தண்டனை வழங்​கினால்கூட, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு எந்தத்தீர்வும் கிடைக்கப்​போவது இல்லை.

ஒன்றரை லட்சம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த இனப்படு​கொலை பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், ஈழத் தமிழர்​களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அந்த மக்களுக்​கான அரசியல் தீர்வைத் தரவேண்டும் என்பதுதான் சரியானது. இது, அனைத்துலக சட்டங்களுக்கு உட்பட்ட​தும்கூட. ஐ.நா-வின் சிவில் அரசியல் உரிமை சாசனத்​தி​லேயே இந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

1915-ம் ஆண்டு நடந்த முதல் உலகப் போரில், ஆர்மீனிய இன மக்களை இன்றைய துருக்கிப் பகுதியில் இருந்த அரசு இனப்படுகொலை செய்ததை ஒப்புக்கொள்ளக் கோரி, இன்று வரை போராட்​டம் நடந்து வருகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன், மனித உரிமைகளுக்காக ஐ.நா-வில் அமைக்கப்பட்டு இருந்த துணைக் குழு, ஆர்மீனிய இனப்படுகொலையை ஒப்புக்கொண்டு உள்ளது.

அமெரிக்​காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 48 மாகாணங்கள் ஆர்மீனிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

போர் ஏற்படுத்திய பேரழிவை, இனப்படுகொலையை மறுப்பதே குற்றம் என ஃப்ரான்ஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி, ருமேனியா, ஜெர்மனி போன்ற பல நாடுகள் சட்டமே இயற்றி உள்ளன. அந்த அளவுக்கு இனப்படுகொலை என்பது பன்னாட்டு அளவில் கொடும்குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்ல, இனப்​படுகொலை நடந்த நாடுகளில்தான் பாதிக்கப்பட்ட மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.

அதாவது, ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை உலக நாடுகள் உண்மை என்று அங்கீகரித்தால்தான், அங்கு ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த சாதகமாக இருக்கும். இதனால்​தான், இனப்படு​கொலைக்கான பன்னாட்டு விசாரணை, பொது வாக்கெடுப்பு என்று இரண்டுக்காகவும், மெரினாவில் ஒன்றுகூடல் நடத்துகிறோம். ம.தி.மு.க,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன்னும் ஏராளமான தமிழ், தமிழர் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன.''

'தமிழ் ஈழத்துக்காக கருணாநிதி மீண்டும் டெ​சோவைப் புதுப்பித்து உள்​ளார். உங்​களைப் போன்ற தமிழின அமைப்​புகள், கருத்து வேறு​பாடுகளைத் தவிர்த்து, டெசோவில் ஒன்றாக நிற்பதுதானே ஈழக் கோரிக்​கைக்கு வலு சேர்ப்பதாக இருக்கும்?'

''தமிழ் ஈழம் எனும் கோரிக்கை உருப்பெற்று, கடந்த 14-ம் தேதியோடு 36 வருடங்கள் ஆகிவிட்டன. 1976-ல் உருவான 'தமிழ் ஈழம்’ முழக்கத்தை முன்வைத்துதான், 77-ல் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிட்டது. 18 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. அடுத்து, 2006-ல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட 24 இடங்களில் 23-ல் வெற்றி பெற்றது. ஈழ மக்கள் புலிகளின் முடிவை ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.

அப்போதெல்லாம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கலைஞர் ஆதரித்தாரா? அதன் பிறகும் ஈழ மக்களை அழித்த மத்திய அரசுக்குத்தானே துணையாக நின்றார். உண்மை​களை மறைத்து, இனப்படுகொ​லையில் மன்மோகன் அரசின் துரோகத்தனமான ஆதரவைத் திசை திருப்பத்தான் கலைஞர் முயன்றார். போரை நிறுத்தி விட்டார்கள் எனத் தன் உண்ணாவிரதத்தை கலைஞர் நிறுத்தினார். அதை நம்பி, தப்புவதற்காக ஓடிய 120 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் மறுக்க முடியுமா?

இனப்படுகொலை பற்றிய கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தாமல், அதற்காக செயல்அளவில் எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், பொதுவாக்கெடுப்பு என அவர் கூறுவது, தானும் சேர்ந்து இழைத்த குற்றத்தை மறைக்கத்தானோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும், இது வரை பல்வேறு இயக்கங்கள், பல கட்டங்களாக ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்த தனி ஈழக் கோரிக்கையை அவர் ஆதரிப்பது, கூடுதல் வலு சேர்க்கும் என்பதால் அந்த அளவில் வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம், ஈழத்தமிழ் இனப்படுகொலை விசாரணைக் கோரிக்கையையும் சேர்த்தால்தான், அது அர்த்தம் உள்ளதாக இருக்கும்!''

Please Click here to login / register to post your comments.