மதியுரைஞர் பாலா காலமானார்

கொழும்பு, டிசெம்பர் 15

கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மதியுரைஞரும், தத்துவாசிரியருமான மார்க்கண்டு ஸ்ரனிஸ்லஸ் அன் ரன் பாலசிங்கம் (வயது 68) லண்டனில் நியூமோடனில் உள்ள தனது இல்லத் தில் நேற்று லண்டன் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் (இலங்கை நேரப் படி முன்னிரவு 7.15 மணியளவில்) காலமானார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அதன் அரசியல் மதியுரைஞராக செயற்பட்டு வந்த அவர் சிங்கள அரசுடன் நடைபெற்ற பேச்சுக்களில் இறுதியாக நடைபெற்ற ஜெனிவாப் பேச்சு தவிர்ந்த அனைத்து பேச்சுகளிலும் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வருடங்களாக நீரிழிவு நோயினாலும், பின்னர் சிறுநீரகக் கோளாறினாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார். கடும்நோய்ப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கான தனது அறிவுசார் பங்களிப்பை வழங்கிவந்த பாலசிங்கம் கடுமையான புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பே வெளியாகியிருந்த நிலையில் அவர் நேற்று சாவை அணைத்துக்கொண்டுள்ளார். அன்டன் பாலசிங்கம் அவர்களின் சாவுச் செய்தியை அடுத்து புலம்பெயர் தமிழர்கள் துக்கத்தில் மூழ்கியுள்ளனர். தமிழர் தாயகத்திலும் அச்செய்தி நேற்று முன்னிரவு மெல்லமெல்லப் பரவி தமிழர் தாயகம் துக்கத்தில் மூழ்கியது.

மதியுரைஞர் பாலசிங்கத்தின் மறைவு தொடர்பாக அவரது இல்லத்திலிருந்து ஓர் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இதயத்தில் விடுதலைக் கனலை சுமந்து, இறுதிவரை ஓயாது உழைத்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான மதிப்புக்குரிய அன்டன் பாலசிங்கம் இன்று வியாழனன்று காலமாகியுள்ளார்.

தமிழினத்தின் அடிநாதமாக, தமிழீழத் தேசியத் தலைவரின் குரலாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூச்சாக நின்ற, மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் இன்று எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இன்று பிற்பகல் 1.45 மணிக்கு, மதியுரைஞரின் உயிர் மண்ணுலகில் இருந்து பிரிந்தது.

தனது சொல் வன்மையாலும், ராஜதந்திர மதியூகத்தாலும், அணையாத விடுதலை வேட்கையாலும், தமிழீழ மக்களையும், உலகத் தமிழர்களையும், ஆட்கொண்ட மதியுரைஞர், இன்று எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். எல்லோரது இதயத்திலும் இடியாக விழுந்துள்ள மதியுரைஞரின் பிரிவால் தமிழினம் துடித்து நிற்கின்றது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து, தணியாத விடுதலை வேட்கையுடன் வாழ்ந்து வீறுகொண்ட விடுதலைப் போராட்டத்தை அடிநாதமாகக் கொண்டு தமிழ் மக்களை ஆழமாக நேசித்து, தமிழீழத்தின் ராஜகுருவாகத் திகழ்ந்த மதியுரைஞரைப் பிரிந்து, தமிழினம் ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது. உயரிய சத்தியத்திற்காக வாழ்ந்து, விடுதலைக்கு விதையாகி வீழ்ந்த மதியுரைஞர் கலாநிதி அன்டன் பாலசிங்கம் என்றென்றும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

அன்டன் பாலசிங்கத்தின் தந்தையார் மட்டக்களப்பு மண்டூரைச் சேர்ந்த குழந்தைவேலு மார்க்கண்டு. அவர் அங்குள்ள பிரபல முருகன் ஆலய பூசகர்களின் வழித்தோன்றல்.

தமது பணி நிமித்தம் யாழ்.குடாநாட்டிற்கு வந்திருந்தவேளை கிறிஸ்தவப் பெண்ணான பாலசிங்கத்தின் தாயாரை அவர் சந்தித்து காதல் மணம் புரிந்தார்.

பாலா 1938ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி பிறந்தார். தாயின் விருப்பப்படி ஸ்ரனிஸ்லஸ் என்றும் தந்தையின் ஆசைப்படி பாலசிங்கம் என்றும் இரண்டையும் சேர்த்து ஸ்டனிஸ்லஸ் பாலசிங்கம் என அவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

பிற்காலத்தில் கல்விக்காக யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டபோது அவரது தந்தையாரின் பெயருக்கு கிறிஸ்தவ நாமம் சூட்டப்பட்டது. அதுவே அன்டன் ஆகும். அதன்படி அவரது நாமம் அன்டன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் என்றாயிற்று.

ஆரம்பத்தில் பத்திரிகைத்துறையில் ஈடுபாடுகொண்ட ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் சில ஆண்டுகள் வீரகேசரியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர்.

சிரித்திரன் சுந்தர் முதல்கொண்டு தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஜாம்பவான்களான அமரர் எஸ்.டி.சிவநாயகம் மற்றும் கே.கே.இரத்தினசிங்கம், எஸ்.நடராஜா, டேவிட் ராஜு போன்றவர்களோடு அவ்வேளையில் நெருங்கிப் பழகியவர்.

"பிரம்மஞானி" என்பது உட்பட பல்வேறு புனைபெயர்களில் ஆழமான தத்துவக் கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதினார். பின்னர் சில ஆண்டுகள் கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் அவர் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார். அக்காலத்தில் அங்கு பணியாற்றிய தமிழ்ப் பெண் ஒருவரை காதலித்து ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் திருமணம் செய்தார். இருவரும் பின்னர் லண்டனில் வாழ்க்கையைத் தொடங்கினர்.

அங்கு லண்டனில் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கத்தின் முதல் மனைவி சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு இலக்கானார். அவரது சிறுநீரகங்கள் செயலிழந்தன. செயற்கை முறையில் சிறுநீரைப் பிரித்தெடுக்கும் கருவியுடன் மனைவியார் வாழவேண்டியவரானார். அப்போது அந்தக் கருவியை இயக்கும் மருத்துவ முறைப் பயிற்சியைப் பெற்றுத்தேர்ந்து, தாமே தமது முதல் மனைவிக்கு நீண்டகாலம் வருடக் கணக்கில் மருத்துவ சிகிச்சை உதவிகளைச் செய்துவந்தார்.

பின்னர் தமது முதல் மனைவி மறைய லண்டனில் தத்துவவியல் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பித்த காலத்தில் அடேல் அம்மையாரை அவர் சந்தித்து திருமணம் செய்துகொண்டார். இருவரது திருமண வாழ்வும் கடந்த 28 ஆண்டுகளாக இணைபிரியாத பந்தமாக நேற்றுவரை வளர்ந்தது.

70களின் பிற்பகுதியில் சுதந்திரத் தமிழீழம் குறித்தும் சோஸலிசப் பாதை பற்றியும் அவர் வெளிப்படுத்திவந்த கருத்துகள் அவரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவர் பிரபாகரனையும் சங்கமிக்கவைத்தன.

அப்போதுமுதல் இறக்கும்வரை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆன்மாவாக அவரது குரல் ஒலித்தமை உலகறிந்த விடயம்.

நன்றி: உதயன், Dec 15, 2006

Please Click here to login / register to post your comments.