டெசோ மாநாடு; யாருக்கு யார் வைக்கும் 'செக்'?.

ஆக்கம்: கே. சஞ்சயன்
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

அடுத்தமாதம் 12ஆம் திகதி சென்னையில் திமுக சார்பில் நடத்தப்படவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு மாநாட்டுடன் (டெசோ) இது இன்னும் உச்சத்தை தொடப்போகிறது.

ஒரு பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்துவதற்கான முனைப்பில் இறங்கியிருக்க, இன்னொரு பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சு புதிய 'குண்டு' ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளது.

இதன்காரணமாக டெசோ மாநாடு நடக்குமா? - அதை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

டெசோ உருவாக்கம்

ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு என்ற டெசோ அமைப்பு 1980களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது, இலங்கையில் தமிழ் இயக்கங்களின் தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக - தமிழீழத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டில் துணை நிற்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

கருணாநிதி, நெடுமாறன், வீரமணி உள்ளிட்ட பல தமிழக அரசியல் தலைவர்களும் இதில் அங்கம் வகித்தனர். ஆனால் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எம்ஜிஆர் அதில் பங்கேற்கவில்லை.

எனினும், அவர் விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்தார். கருணாநிதியோ ரெலோவை தன் கைக்குள் வைத்திருந்தார்.

ரெலோவை தடை செய்த விடுதலைப் புலிகள் அதன் தலைவரான சிறிசபாரத்தினத்தைச் சுட்டுக் கொன்றதை அடுத்து, கருணாநிதி திடீரென டெசோ அமைப்பையும் கலைத்து விட்டார்.

அண்மையில் கருணாநிதியின் குடும்பத்துக்குள் கலகம் தீவிரமான போது, அவர்கள் மீண்டும் டெசோவை உருவாக்கி, அதன்மூலம் தனது பிரச்சினைகளைச் சமாளிக்கத் திட்டமிட்டார்.

அத்துடன், அவருக்கு வயதாகி விட்டதால், இறுதிக்காலத்தில் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்ற ஆவலும் இருப்பதாகத் தெரிகிறது.

மீ்ண்டும் துளிர்த்த கனவு

அதனால் தான் அவர் இப்போது தமீழீழத்தைப் பார்த்து விட்டே கண் மூடுவேன் என்கிறார். அவர் காண விரும்பும் தமிழீழத்தை உருவாக்குவதற்காக கருணாநிதி நடத்தப் போகும் மாநாடு தான் டெசோ மாநாடு.

முன்னர் இந்த மாநாடு வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி விழுப்புரத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், திடீரெனச் சென்னைக்கு மாற்றப்பட்டது. காரணம் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு தங்குவதற்கும், பயணம் செய்வதற்கும் விழுப்புரம் ஏற்ற இடமில்லையாம்.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் பிரநிதிநிகளையும், இலங்கையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருணாநிதி நேரடியாகவே அழைப்புக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

எனினும், ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் கருணாநிதி நடத்தப் போகும் டெசோ மாநாடு இரண்டு தரப்பினருக்குப் பிடிக்கவில்லை.

முதலாவது ஜெயலலிதா தரப்பு. இரண்டாவது இந்திய மத்திய அரசு. ஜெயலலிதாவின் அச்சம்

டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலம் கருணாநிதி மீண்டும் தனது செல்வாக்கை வளர்த்து விடுவோரோ என்ற பயம் ஜெயலலிதாவுக்கு இருப்பதில் நியாயம் உள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரும், போருக்குப் பிந்திய சூழலும் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் விவகாரத்தைச் சூடுபிடிக்க வைத்துள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரப்போகும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே, கருணாநிதி தனது கை ஓங்குவதற்கு இந்த டேசோ மாநாட்டைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா அக்கறையோடு இருப்பார்.

அதனால் தான், தாம்பரம் விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெற்ற இலங்கைப் படையினர் அங்கிருந்து மட்டுமன்றி, இந்தியாவில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ஆனால், டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்தி விட்டால், அதை வைத்து அவர் அரசியல் இலாபம் தேட முனைவார் என்பது ஜெயலலிதாவின் பயம்.

மாநாட்டை ரசிக்காத மத்திய அரசு

அதேவேளை, கருணாநிதி மீண்டும் டெசோவைத் தொடங்கியுள்ளதையோ, அவர் தமீழீழத்தை உருவாக்கப் போகிறேன் என்று கூறுவதையோ இந்திய மத்திய அரசும் ரசிக்கப் போவதில்லை.

இந்த விவகாரம் கருணாநிதிக்குத் தான் அரசியல் ஆதாயத்தைத் தேடிக் கொடுக்கும் என்பதாலும், தனிநாட்டுக் கோரிக்கை மீதான அதன் அடிப்படை வெறுப்பினாலும் இந்திய அரசு இதை ஒரு போதும் ஏற்கப் போவதில்லை.

இலங்கையில் தமீழீழத்தை அமைவதை இந்தியா தனக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. அதுவும் தமிழ்நாட்டின் துணையுடன் தனிநாடு ஒன்று அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

இருந்தாலும் கருணாநிதி டெசோவை மீண்டும் கையில் எடுத்துள்ளதை, காங்கிரஸ் அரசு வெளிப்படையாக எதிர்க்கவில்லை.

காரணம், முன்னரை விட திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவுகள் இப்போது நல்ல நிலையில் இருப்பதுதான். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, இருதரப்பு உறவுகள் மோசமான கட்டத்தில் இருந்தன.

அப்போது திமுகவை மத்திய அரசு கிள்ளுக்கீரையாகவே பார்த்தது. இல்லாவிட்டால், ராசாவோ, கனிமொழியே மாதக்கணக்கில் கம்பி எண்ண வேண்டிய நிலை வந்திருக்காது.

இப்போது காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால், திமுகவின் ஊழல் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

ஜெயலலிதாவின் அடுத்த குறி

காங்கிரசைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுகவின் முதுகில் சவாரி செய்வது தான் அதன் வழக்கம். இல்லையேல் காங்கிரசால் தனித்து ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாது.

அதிமுகவைப் பொறுத்தவரையில், இப்போதைக்கு காங்கிரஸின் பக்கம் வர வாய்ப்பில்லை. ஜெயலலிதாவின் அடுத்தகுறி காங்கிரசுடன் இணைவதல்ல. புதுடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுவது தான்.

அதாவது, அவர் குறிவைப்பது பிரதமர் பதவியை. தனது செங்கோட்டைக் கனவு பற்றி வெளிப்படையாகவே அவர் கூறியும் உள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சங்மாவை நிறுத்தியது கூட, தான் கிங் மேக்கராக உருவெடுக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்குத் தான்.

காங்கிரசுடன் இணைந்தால், ஒருபோதும் செங்கோட்டைக் கனவு நனவாக வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. எனவே காங்கிரஸ் பக்கம் அவர் வரமாட்டார்.

காங்கிரசுக்கு வேறு கதி இல்லை. எனவே, காங்கிரசுக்கு இப்போது ஒரே கதி திமுக தான். அதையும் விட்டால் வேறு வழியே இல்லை.

எனவே, காங்கிரஸ் – திமுக உறவுகள் மீண்டும் பலமடைந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

கூடவே இருக்கும் நண்பனாக இருந்தாலும், கருணாநிதியின் டெசோ மாநாட்டையோ, அதன் இலட்சியத்தையோ மத்திய அரசினால் ஏற்க முடியாது. தமிழீழம் என்பது இந்தியாவின் முதல் எதிரியாகவே பார்க்கப்படுகிறது.

ஒருவேளை தமிழீழம் உருவாகி விட்டது என்று வைத்துக் கொண்டால் கூட, பாகிஸ்தானை விடவும் அதன் மீதே இந்தியா அதிக வன்மத்தைக் கொண்டிருக்கும்.

அதேவேளை, டெசோ மாநாட்டை நடத்தக் கூடாது என்று கருணாநிதியிடம் துணிச்சலோடு கூறும் தைரியமும் மத்திய அரசுக்கு இல்லை.

உள்துறை அமைச்சின் அதிரடி

இந்தக் கட்டத்தில்தான், கடந்தவாரம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தமிழக பொலிஸ் ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி பொலிஸ் ஆணையர்கள், கியூ பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சின் இணைச்செயலர் தர்மேந்திர சர்மா ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

'தமிழருக்கு என தனிநாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்டவிரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், சிதறிக் கிடக்கின்ற அதன் தலைவர்கள் அல்லது போராளிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாதப் போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.

அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, விடுதலைப் புலிகளை சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, 1967ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும். ' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புலிகள் மீதான தடை

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியா 1992ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தடைவிதித்தது.

ராஜிவ்காந்தி கொலையை அடுத்து, சரியாக அவர் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு முடிவில் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதமே இந்த தடைநீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுபற்றிய தகவல் ஜுன் தொடக்கத்தில் வெளியானது.

ஆனால் அதை நடைமுறைப்படுத்தக் கோரும் உத்தரவு, கடந்தவாரம் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டதும், இரண்டு நாட்கள் கழித்து அதுபற்றி உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் எதேச்சையான சம்பவங்களல்ல.

இந்த அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கான நியாயங்களை மட்டும் மத்திய அரசு குறிப்பிடவில்லை.

அதற்கும் அப்பால் தமிழீழம் என்பது இந்தியாவின் இறைமைக்கு ஆபத்தானது - அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது என்ற கருத்து துலாம்பரமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'தமிழருக்கு என தனிநாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது கருணாநிதி நடத்தப் போகும் டெசோ மாநாடு சட்டவிரோதமானது, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்பதே அது.

டெசோவைத் தடுக்கும் உத்தி

அதுமட்டுன்றி மத்திய உள்துறை அமைச்சு தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி நடத்தப் போகும் டெசோ மாநாடு ஒரு போதும் விடுதலைப் புலிகளைத் துதிபாடும் ஒன்றாக இருக்காது. ஏனென்றால், அவருக்குப் புலிகளை அவ்வளவாகப் பிடிக்காது. ஆனாலும், அவரது தமிழீழ ஆதரவு மாநாடு மத்திய அரசினால் சகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்காது.

கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்துவதே மத்திய அரசை பயமுறுத்துவதற்குத் தான் என்று சில தமிழ்நாட்டுக் கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்தக் கட்டத்தில், மத்திய அரசு தான் நேரடியாக கருணாநிதி மீது கைவைக்காமல் தவிர்க்க முனைகிறது. அதனால் தான் ஜெயலலிதாவை தூண்டிவிட்டு, கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வைக்க முனைகிறது.

அதேவேளை, கருணாநிதியின் டெசோ மாநாட்டை ஜெயலலிதா தடுத்து விட்டால், விவகாரம் வேறுபக்கம் திரும்பும். ஈழத்தமிழரை ஆதரிப்பது குற்றமா, ஈழத்தமிழருக்கு தனிநாடு கேட்பது குற்றமா என்று கருணாநிதி குரல் எழுப்புவார்.

அது இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விடும். இதனால் கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டாலும், டெசோ மாநாட்டின் மீது கைவைக்க முயற்சிக்கமாட்டார்.

அப்படி கை வைப்பதானால் கூட அதற்கு அவர் ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், இந்த மாநாட்டைக் குழப்புவதற்கு, மத்திய அரசு ஜெயலலிதாவைத் தூண்டிவிடத் தயங்காது.

டெசோ மாநாடு இலங்கைத் தமிழருக்கு விடிவைத் தருமா இல்லையா என்பதல்ல விவகாரம். இதை வைத்து தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசியல் தான் இன்றைய சூடான விவகாரம்.

இந்தியாவை மீறி தனிநாடு அமையுமா?

விடுதலைப் புலிகள் மீதான தடையை காரணம் காட்டி, தனிநாட்டுக் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது என்பதை மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.

தமிழருக்கென தனிநாடு ஒன்றை நிறுவ இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

அதேவேளை, இந்தியாவின் உதவி அல்லது அங்கீகாரம் இல்லாமல் தனிநாடு ஒன்றையும் இலங்கையில் அமைக்க முடியாது. எனவே, டெசோ மாநாட்டை கருணாநிதி வெற்றிகரமாக நடத்தி முடித்தாலும் கூட, அவரால் தமிழீழத்தை உருவாக்கி விடமுடியாது.

அதற்கு மத்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாத விடயங்களல்ல. ஆனாலும் அவர் தமிழீழத்தை அமைக்க கனவு காண்பது வேடிக்கையானது.

Please Click here to login / register to post your comments.