அதிமுக்கியமான ஒரு காலகட்டத்தில் தேசத்தின் குரலின் இழப்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசிய இனத்தினுடைய அரசியல் போராட்டத்தில் அதிமுக்கியமான ஒரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை:

தமிழ்த் தேசிய இனத்தினுடைய அரசியல் போராட்டத்தில் அதிமுக்கியமான ஒரு காலகட்டத்தில் திருவாளர். அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்துகிறது.

பல தசாப்தங்களாக தமிழ்த் தேசியப் போராட்டம் வன்முறையின்றி அகிம்சை வழியில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியப் பிரச்சினை சமாதான முறையில் தீர்க்கப்படாமை, ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு தவிர்க்க முடியாத காரணமாக அமைந்தது. இந்த போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னணி வகித்தது.

திருவாளர். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியராகவும், அரசியல் நிபுணத்துவ ஆலோசகராகவும் திகழ்ந்தார். விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முக்கிய பங்காளராகவிருந்தார்.

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது முழுமையாகவும், தொடராகவும் விதிக்கப்பட்ட சமமின்மையையும், அநிதீகளையும் திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நன்றாக புரிந்திருந்தார். தமிழ் மக்கள் சாத்வீக ரீதியாக நடத்திய போராட்டங்களின் போது, அவர்கள் மீது ஒட்டு மொத்தமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் நன்கு அறிந்திருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், இலக்குகள் சம்பந்தமாக, அவருக்கு தெளிவான விளக்கம் இருந்தது. இலங்கை இனப் பிரச்சினை சம்பந்தமாக தமிழ் மக்கள் சார்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் கருத்துக்களை முன்வைக்கும் வல்லமையை திரு. பாலசிங்கம் அவர்கள் முழுமையாகப் பெற்றிருந்தார்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான, அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கு நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்களுக்கு திரு. பாலசிங்கம் அவர்கள் மிகப் பிரயோசனமும், பெறுமதிமிக்கதுமான பங்களிப்பை செய்தார் என்பதை அனைவரும் எற்றுக் கொள்வார்கள். அவருடைய இழப்பு இச்சந்தர்ப்பத்தில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு சேவை புரிந்திருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அன்னாரின் அன்புத் துணைவி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், ஒவ்வொரு விதத்திலும் அவருக்கு உதவும் சக்தியாகத் திகழ்ந்தார். திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கும், அன்னாரின் மறைவினால் துயரமுற்றிருக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Please Click here to login / register to post your comments.