எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்

ஆக்கம்: பானுபாரதி
"களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது"

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம். எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...?

ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் முடியாமல் பூட்டிய இரகசிய நிலஅறைக்குள் சக்குப் பிடித்து யூரோக்களாகக் கிடக்கும் மக்களின் இரத்தமும் வியர்வையுமான உழைப்பையும் வரலாறு கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது.

மண்மீட்புப் போராட்டத்துக்கென மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியில் பினாமி பெயர்களில் தொடங்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனங்களை யார் யார் பங்கு பிரித்துக் கொள்வதென நடக்கும் பங்காளிச் சண்டைகளையும், வரி கட்டாத ஸ்தபனமென கூட இருந்தவனையே நோர்வேச் சட்டத்துக்குக் காட்டிக் கொடுத்து நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த நிகழ்வுகளையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டே இருக்கின்றது.

2009இல் எதிரி புலிகளை வீழ்த்தியதற்குப் பின் வெளி நாடுகளிலிருந்து எதிரியின் வாசலுக்கு ஓடிச் சென்று உல்லாச விடுதிக்கும், சாராயக் கடைக்கும் சொகுசு பேரூந்துக்கும், தேயிலைத் தோட்டத்துக்கும், கொழும்பு13இல் தொடர்மாடிக் கட்டிடங்கள் வாங்கவும் அனுமதிப் பத்திரத்துக்கு கியூ வரிசையில் யார் யார், புலம்பெயர் எந்தெந்த புரட்சி முக்கியஸ்தர்கள் நின்றார்கள் என்பதையும் வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படி ஏகப்பட்டதை வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது, எதிரியால் கொல்லப்பட்ட தலைவனுக்கே இன்னமும் அஞ்சலி செலுத்த முடியாத தந்திர அரசியலையும்கூட இதே வரலாறுதான் கவனித்துக்கொண்டிருக்கிறது.

"வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது" என்று சொல்வதிலுள்ள (காசு தராதவர்களை நோக்கி "நாட்டுக்கு வருவியள்தானே...?" என்பது போன்ற மிரட்டலில் ஏகாதிகாரத் தொனி பொதிந்து கிடப்பதையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சமூகத்தையோ, அல்லதொரு அமைப்பையோ, அல்லது ஒரு குழுவையோ...., ஏன், ஒரு தனி மனிதனையோ "நீ இன்னதுதான் செய்யவேண்டும், இன்னது செய்யக்கூடாது" என்று சொல்வதற்கும், கட்டளையிடுவதற்கும், மிரட்டுவதற்கும், சண்டித்தனம் பண்ணுவதற்கும் எந்தக் கொம்பாதி கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதைத் தைரியமாகச் சொல்ல முடியாத புலம்பெயர் தமிழனத்தையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தேச விடுதலையின் பெயரால் நடக்கும் போராட்டத்தின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், மக்கள் விரோதச் செயல்கள்கூட இங்கே புனிதப் படுத்தப் படுகின்றன. அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்படி சனங்கள் வலு கட்டாயமாக வலியுறுத்தப் படுகிறார்கள். மாவீரர்களின் பெயரால் நடக்கும் நிகழ்வுகளிலும், விளையாட்டுக்களிலும் கொத்துரொட்டிக்கடை போட்டு வியாபாரம் செய்வதுகூட மண்ணின் பெயரால் புனிதமாக்கப் படுகின்றது. இவற்றையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டேதான் இருக்கிறது.

விடுதலைப் போராளிகளாயிருந்து இன்று அங்கவீனர்களாக்கப்பட்டும் வாழ வழியேதுமற்றும், சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்டு நடுத்தெருக்களில் அநாதரவாக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளின் எதிர்காலத்துக்கு நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் புலிச் சொத்தில் ஒரு சிறங்கை கிள்ளிப் போட்டாலே அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்குமே என்ற ஏக்கத்தோடும், ஆத்திரத்தோடும் இந்த வரலாறு உங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

2009ம் ஆண்டு புலிகளின் அழித்தொழிப்புக்குப்பின் புலம்பெயர் புலிகள் (அதிலும் விசேடமாக நோர்வேப் புலிகள்) யார் யார் எதிரியின் பின் கதவைத் தட்டி நிலவொளியில் விருந்துண்டார்கள் என்ற கதைகளையும் இந்த வரலாறு முச்சந்தியில் கொண்டுவந்து வைக்கத்தான் போகிறது.

தேசவிடுதலைப் போராட்டத்துக்காக புலம்பெயர் மக்களிடம் சேகரித்த பணத்தில் எந்தெந்த நோர்வேப் புலிகள் கோடம்பாக்கத்திற்குப் போய் சினிமா எடுக்கிறார்கள் என்பதையும், அதையே இங்கு மீண்டும் மண்ணின் பெயராலும், மக்களின் இரத்தத்தின், சிதறிப்போன சதைகளின் பெயராலும் விளம்பரம் செய்து காசு பார்க்கிறார்கள் என்பதையும் இந்த மொக்கு வரலாறு மவுனமாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் 80களிலிருந்து இயங்கிவந்த தமிழ்ச் சங்கங்கள், தமிழ்மொழிக் கல்வி நிலையங்கள், கோயில்கள், சிறு பத்திரிகைகள் என தனித்துவத்தோடு எதையும் இயங்க விடாமல் அதற்குள்ளும் வருவாய் காணும்பொருட்டு மிரட்டிக் கையகப் படுத்தியதையும் இந்த வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வெளி நாடுகளில் வாழும் மக்களிடம் மண்விடுதலையின் பெயரால், புலிகளின் பிரதிநிதிகளாய் சென்று கதவைத் தட்டிக் காசு வாங்கியவர்கள் தங்களது சுய வருமானம் என்ன என்பதையும், அவர்களிடம் இப்போ இருக்கும் சொத்து விபரங்களையும் பொதுவெளியில் முன்வைக்க துணிவு உண்டா என்பதையும் இதே வரலாறுதான் கேட்டு நிற்கிறது. (இவர்கள் இப்படியே தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்ட முடியாது, அம்பலத்துக்கு மிக மிக விரைவில் வரத்தான் போகிறார்கள் என்பது வேறு விடையம். ஏனென்றால் இங்கு உங்கள் வருட வருமானம் என்ன என்பதையும், உங்களுக்கு எங்கெங்கே சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் சும்மா சாதாரண மனிதராலேயே சட்டரீதியாகவே விபரங்கள் திரட்ட முடியும்)

களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை தம் கையகப்படுத்தும் நபர்களுடையது என்பதையும் இந்த கையாலாகா வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஸ்ரீ லங்கா இனவாத, ஏகாதிபத்திய அரசின் அடாவடித் தனங்களையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடவும், இல்லாதொழிக்கவும், அனைத்து இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை ஒன்றைக் கண்டடையவும் இன்று முதல் முக்கியமாக உள்ள பணி இலங்கைவாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையேயான புரிந்துணர்வும், ஒற்றுமையும். இந்த இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை ஸ்ரீ லங்கா அரசு காலகாலமாக எப்படித் தந்திரமாகக் கையாள்கிறதோ அதே வழியைத்தான் தங்களைத் தமிழ் உணர்ச்சியாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் விபச்சாரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாசமாய்ப்போன வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. ..............

இன்னும் இருக்கு..... இன்னும் வரும்....

Please Click here to login / register to post your comments.