வலைக் கிழிசல்களில் வழிகின்ற தேசியம்

ஆக்கம்: செந்தூரி
நின்றறுக்கும் தெய்வங்கள் தமிழனின் அழுகுரலுக்கு செவிசாய்க்கத் தொடங்கியுள்ளமை, போன்றொரு பிரேமை

கடந்த வாரத்தின் வயிற்றுக்கும் தொண்டைக்குமிடையில் உருவமில்லாமல் உருண்டு திரிந்தது. வாய்க்கால்களின் மரணவெளியில், வியாபித்துப் பெருகி விஸ்வரூபித்து, பிரபஞ்சக் கறுப்பினுள் ஒற்றைப் புள்ளியாய் அடங்கிப்போன, ஆதி இனமொன்றின் சோகம், மீண்டுமொரு முறை உலகின் விழித்திரையின் மேல் விழுந்து உறுத்துகின்றது.

சர்வதேசங்களின் அமைதிக் காவலனான ஐக்கிய நாடுகள் தன்னைத்தானே கேள்வியெழுப்புகின்ற சுயவிசாரணைகளைச் சுற்றியதாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளை பேசத் தொடங்கிய அதே சம இரவில், வைத்தியசாலை வீதியில் அடுத்த நாள் முன்னிரவு வரை "துப்பாக்கி''யின் விசேட காட்சிக்காக, "கற்பூரம்', "சிதறுதேங்காய்', "அபிஷேகப்பால்', "காவடிச்செண்டு', "கரகச்செம்புடன்' ஆரியக் கூத்தாடிய வலைத்தள நண்பனொருவனின் முகவேட்டுப் பதிவை நீங்களும் ஏன் படிக்கக் கூடாது?.....

"பேக்கரிக்கு முன்னால் கியூவில் நிண்டு, பாண் வாங்கிறதுக்கு பல மணித்தியாலம் காத்திருந்து, ஏ.ரி.எம் முன்னுக்கு தவம் கிடந்த எங்களின் வலி எங்களுக்கே! யாழ்ப்பாணத்தானை ஒரு படம் பார்க்க விடமாட்டீங்களோ நிம்மதியாய்? பிணங்களை வைத்து பிடுங்கித் தின்பதை எப்படா நிறுத்துவீர்கள்?''

இதுவொரு இருபத்தியாறு வயதுக்கு சற்று அண்ணளவான ""யாழ்ப்பாணத்தானின்'' வாக்குமூலம், "கட்டவுட்டுகளில் ஏறி நின்று ஊற்றும் பாலை கொடுத்தால் யாழ்ப்பாணத்தில் பசியோடு உறங்குபவர்களை, அடியோடு இல்லாமல் செய்வீர்களா?'' என்பதான எதிர் விதண்டாவாதத்துடன், தம் அடாவடிகளை நியாயப்படுத்தி வசனம் பேசும் பலர் இணையப் பக்கங்களில் இருக்கின்றார்கள்.

வயது பேதமின்றி என்பது எவருக்குமே ஆச்சரியமில்லை! மாவீரர்களை நினைவேந்துகின்ற மாவீரர் வாரம், வருகின்ற கார்த்திகை மாதத்தில், கனடாவில் நடத்தப்பட இருந்த இசைஞானி இளையராஜாவின் தனியிசை நிகழ்வுக்கான முதற் பதினையாயிரம் நுழைவுச் சீட்டுக்களில் பாதிக்கு மேல் வாங்கிய பெருமையை தமதாக்கியவர்கள் ஈழத்தமிழர்கள்.

மாவீரர் மாதத்தில் வேண்டாமே என்கின்ற விவாதங்களின் இழுபறியில் பலத்த எதிர்ப்புக்களின் பின் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டதைத் தாங்காமல், ஒரு நல்ல தமிழன் இணையத்தில் எழுதி வைத்தது இப்படி!.....

"மாவீரர் வாரம் கேள்விப்பட்டிருக்கின்றோம், அது என்ன மாவீரர் மாதம்?' 'சிக்கெனப் பிடித்துக் கொள்கின்றது சோகம். "மணித்தியால இன்பங்களுக்காய்'' எம் இளைஞர்கள் மறுதலித்துப் பேசுகின்ற விடயங்களின் வயது "வருடங்களில்' இருப்பதை ஏற்றுக்கொள்ள மனதளவிலேனும் அவர்களால் முடியாமல் இருப்பதை எப்படிச் சீரணிக்க? இலகுபடுத்திச் சொல்வதானால், 1989 இல் தொடங்கப்பட்ட மாவீரர் வாரம் என்கின்ற அனுஷ்டானத்தை விமர்சிக்க வைத்த இசைநிகழ்ச்சியின் ஆகக்கூடிய நீட்சி மூன்று தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் மட்டும்.

இணையத் தளங்களோடு அவ்வளவு பரிச்சியமில்லாத நண்பர்களுக்காய், சில தொழில்நுட்ப உலகின் வேதனைகளைப் பகிர்வதன் முக்கியத்துவம், எம்மவர்கள் சிலரின் எண்ணங்களின் காட்டில் வீழ்ந்துள்ள "மறத் தேசிய அக்கினிக்குஞ்சு' பற்றிய தெளிவை ஊட்டும் என்பதன் நம்பிக்கையையும் சேர்த்துப் பின்னியுள்ளது.

குறிப்பாக 20 தொடக்கம் 50 வரையான வயதெல்லையுள்ள தீவுக்கு வெளியேயான புலத் தமிழர்களில் அங்கத்துவம் வகிக்கும் இணையப் பாவனையாளர்களின், பத்துப் பேரில் எழுவர் தமிழ்த்தேசிய வாதிகளாகவும், அனுதாபிகளாகவும் இருவர் மறத் தேசிய எண்பிகளாகவும், ஒருவர் வெற்றுத் தேசிய கருத்தாளராகவும் இருக்கும் அதே அண்மைப் புள்ளிவிவரம், 25 தொடக்கம் 40 வரையான வயதெல்லையுள் தீவுக்குள்ளான தமிழர்களில் அங்கத்துவம் வகிக்கும் இணையப் பாவனையாளர்களின் பத்துப் பேரில், எண்மர் வெற்றுத் தேசியக் கருத்தாளர்களாகவும், ஒருவர் மறத் தேசிய எண்பியாகவும், மீதியுள்ள ஒருவர் பெரும்பாலும் "தமிழ்த் தேசிய அனுதாபி'யாக மட்டும் தம்மைக் காட்டிக் கொள்வதாகவும் வெளிப்படுத்துகின்றது.

சமூக வலைத்தளங்களுக்கு வந்து போகின்ற பயனீட்டாளர்களின் (USERS) வயதுத் தொகையில் பார்க்கின்ற போதிலும் கூட புலத் தமிழர்களின் முப்பது என்கின்ற அகவைத் தொகுதி சரிபாதியாகப் பதினைந்தாகவே இலங்கைத் தமிழர்களினால் பயன்படுத்தப்படுகின்றமையும், மொத்தப் பயனீட்டு மணித்தியாலங்களின் வரிசையில் ஒப்பிடுகின்ற போது, தமிழ்த் தேசிய வாதிகள்எதிர்மறத்தேசிய மற்றும் வெற்றுத் தேசிய எண்ணவாளர்களின் விகிதம் சமவிகிதத்தில் பங்கிடப்படுகின்றமையும் புலப்படுகின்றன.

"அடிக்கடி ஐரோப்பிய தமிழர்களை முன்னிலைப்படுத்தி எழுதுவது ஏன்?' என்று நேரடியாகவே கேட்டுவிட்ட தோழிக்கும், கேட்க எண்ணிய ஆயிரமாயிரம் (?) அன்புள்ளங்களுக்குமான பதில், முதல் வாக்கிய முடிவுடனேயே பிறப்பிக்கப்பட்டு விட்டதாக ஆழ்ந்து நம்புவோம்!

இணையப் பாவனையாளர் ஒருவரை புவியியல் அமைவிடத்துடன் அடையாளம் காண்பதாயின், அவரினால் பயன்படுத்தப்படும் கணினியின் தனிப்பட்ட IP எண்ணின் பதிவெல்லையின் மூலம் பின்தொடர முடியும். அல்லது இணைய இணைப்புக்காக பயன்படுகின்ற தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடமிருந்து பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுப் பின்தொடர முடியும்.

பயனீட்டாளர் ஒருவரைச் சார்ந்திராமல் சுயாதீன வழியில் தேசமொன்றின் அரசோ, அரச பாதுகாப்பு துறையோ அல்லது முறைப்பாடொன்றின் பேரிலான விசாரணை ஒழுங்குகளோ மட்டுமே இவ்வகைக்குரிய வழிகளினால் இணையப் பாவனையாளர் ஒருவரை கிட்டநெருங்க முடியும்.

மறுதலையாக, பயனீட்டாளர் ஒருவரை சார்ந்து, அவரை கண்காணிக்க வேண்டுமாயின், அல்லது அவரது தகவல்களை கைப்பற்ற வேண்டுமாயின், சமூக வலைத்தளங்களில் குறித்த பயனீட்டாளரின் நண்பர்களில் ஒருவரை "கருணா'வாக ஆக்கினாலும், அது சுலபமாக சாத்தியமாகும்.

சமூக வலைத்தளப் பக்கங்களில் போதுமான மறுப்புத் தெரிவுகள் வசதிகளாக வழங்கப்பட்டுள்ள நிலையில், எமக்கு நன்கு தெரிந்தவர்களையே நண்பர்களாக அங்கீகரிப்பதும், சின்னதொரு சந்தேகப்புன்னகை தெரியும் "காம்பு' களை உடனே நீக்குவதும், தொல்லை கொடுப்பவர்களைப்பற்றி முறைப்பாடுகளைப் பதிவு செய்வதும் சாத்தியமே.

உதாரணமாக, ""சாம்பசிவம்'' என்கின்ற முதற்பெயரோடு, தன் கணக்குப் பயனீட்டு அடையாளத்தை கொண்டுள்ள நபர்கள் யாவரையும் ஒன்று சேர உங்களின் தளத்தை பார்வையிடுவதிலிருந்து தடுத்து வைக்க முடியும்.

ஆனால் பிரச்சினைகளின் மூன்றாம் தலைமுறை பேரப்பிள்ளைகளாக, சமூக வலைத்தளப் பயனாளர்கள் பெரும்பாலும் ஏமாற்று அடையாளக்கணக்குகளை (Fake Id) திறந்து வைத்திருப்பதன் காரணமாக, பல கீ போர்ட் புலிகள் "பசுத் தோல் போர்த்தி'' உலாவும் வசதி இலகுவாக்கப்பட்டது.

இவ்வகை எதிர்மறை விளைவுகளே, இலங்கைக்கு உள்ளான தமிழ் இணையப் பாவனையாளர்களின் சுமார் எண்பது வீதமான இளைஞர்களை எந்தப்பக்கமும் சாயாத வெற்றுத் தேசிய கருத்தாளர்களாக வைத்திருப்பதோடு, நல்லூர்க் கந்தனின் பெருவிழாவின் இருபத்தைந்து நாள் படங்கள் முதற்கொண்டு, "காஜல் அகர்வாலுக்கு'' கால்விரல் சுளுக்கியது வரை தரவேற்றவும் செய்கின்றது.

தத்தமது சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் சமூக வலைத்தளக் கொள்கையில் கருத்தமைதி பேணும் நண்பர்கள் தொடர்பில் குற்றம்சாட்டும் உரிமை எவருக்குமேயில்லை. காரணம் எதிர்ப்பதை விட மேலானது இயங்காமலிருப்பதனாலாகும்!

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் உயர் மதிப்பீட்டின் பின்னர், தமிழ்த் தேசியம் சார் பதிவுகளிலிருந்து விலகியிருக்கின்ற அத்துணைபேரும், இலங்கையில் "ஊடக சுதந்திரம்'' உண்மையாகின்ற அடுத்த இரவிலிருந்து, தமிழ் தேசிய வாதிகளாகவே "கிளிக்'குவார்கள் என்று நம்புவோமாக!

இணைய பக்கங்களின் பலம் என்பது என்னவென்று தெரிந்து கொள்ள அவாவும் நெஞ்சங்களோடு, கடந்த வாரத்தில் இடம்பெற்ற "பல்லூடக போர்க்காட்சியொன்றை'' பகிர்ந்து கொள்வது நலமே தரும்!

ஈழத்துக்குள்ளாக வருகைதரும், தென்னிந்திய வாரச் சஞ்சிகைகளில் அபிமானம் பெற்ற, "ஆனந்த விகடன்' தீபாவளி மலரில், "நேற்று நான் போராளி.....'' என்று தொடங்கும் பேட்டிக்கட்டுரையொன்று வெளியாகி அவர்களின் வியாபாரத்தை எகிற வைத்ததோடு, உலகத்தமிழ் நெஞ்சங்களைக் கிழித்துக் குதறியது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

"வித்யாராணி'' என சித்திரிக்கப்பட்ட முன்னாள் போராளித் தாயொருத்தியின் பேட்டியில் உள்ளடங்கியிருந்த விடயங்கள் தொடர்பாக, ஏற்கனவே இதே இடத்தில் ஆராய்ந்திருந்ததும் நினைவிருக்கலாம். பல்வேறு "மஹிந்தவின் எறும்பு' இணைய ஊடகங்களும் கூட அந்த பேட்டியென்ற பெயரிலான கற்பனைக் கதையில் தங்களுக்குத் தேவையான பகுதிகளைக் கத்தரித்து எடுத்து, ஈழத்தமிழ் கலாசாரச் சந்தையை அடித்துத் துவைத்து வெளுக்க முயன்று வெற்றி கண்டதாகத் தம்மைத்தாமே போற்றிக் கொண்டன.

ஆனால் சமூக வலைத்தளங்களில் உலாவும் உண்மையுணர்வாளர்களின் ஆராய்ச்சிக்குணம், பேட்டியின் ஒவ்வொரு வாசகத்தையும் நுணுக்கமாக அலசி, எழுதப்பட்டிருந்த வார்த்தைகளுக்குள் ஈழத்தமிழ்மொழி வாசனை சற்றுமே கலக்காத சொற்கள் முதற் கொண்டு தேடித்துளாவியதோடு, பேட்டியென்ற பெயரில் புனைகதை எழுதிய இன்றைய பெங்களூர் பல்கலைக்கழக வாசியின் பிறந்தகம் யாழ்ப்பாணத்தின், "குப்பிளான்'' என்பதையும் கண்டு, புட்டு வைத்தது.

அரச ஒட்டுக்குழுத் தலைவரொருவரின் முன்னாள் செயலாளரின், மகனான மேற்படி "கற்பனைப் பேனாக்காரரை'' ஆனந்த விகடன் நிர்வாகம் தூக்கியெறிய வேண்டுமென்று,ஆளுக்கு மேல் ஆளாக மடல்களும்,அறிக்கைகளும், வேண்டுகோள்களும் விடுக்குமளவுக்கு சூடாகிக் கிடந்த கணனித் திரைகள் எந்தவொரு போராளியும், தேசியத்தலைவரைப் "பிரபாகரன்'' என்ற பெயரினால் சுட்டி விளிப்பதில்லை என்கின்ற நுணுக்கமான நூல் பிடித்துப்போய், யாழ். ரயில் நிலையத்தில் தூங்கும் பெரும்பான்மை இனப் பெண்களின் வாக்குமூலத்தினுள், முன்னாள் போராளியின் வரலாற்றினை நிறமூட்டியாகக் கலந்து பயன்படுத்திய "சாயம்'' வெளுக்க வைத்த பின்னால், இணைய உலாவிகளின் ஒவ்வொரு விரலிடுக்கிலும் பூத்திருந்தவை கார்த்திகைப்பூக்கள்!!

"அறைகளுக்குள் இருந்தபடி தனியரசு கேட்பவர்கள்'' என்கின்ற கேலி அடைமொழிகளால் அடிக்கடி குத்திப் பேசப்படுகின்ற தமிழ்த்தேசிய வலைப்பதிவர்கள், இன்றைய விடுதலைப் பயணத்தின் பாலைவனச் சோலைகளின் "பூந்தோட்டக் காவற்காரர்கள்'' என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்தில்லை. லண்டனிலிருந்து கிரிதரன், தமிழகத்து இளம் இயக்குநர் ராஜீ முருகனுடன் பேசியவை அப்படியே.......

"எங்கட தீபாவளியெல்லாம் போச்சு முருகன்!...... ஒரு கிழமைக்கு முன்னமே, வெடியளை வாங்கி பனை ஓலையில காய வைச்சிடுவம். ஆர் வீட்டு வாசல்ல கனக்க வெடிப்பேப்பர் கிடக்குதெண்டு போட்டியே நடக்கும். பக்கத்து வீடுகளில் இருந்து பொறுக்கி எடுத்து எங்கட வாசலில, போட்டு வைப்பம்.

கற்குளம் கற்பகப் பிள்ளையார் கோயிலுக்குப் போட்டு வந்து, அம்மா தாற அரியதரமும், பயித்தமுருண்டையும் தான் தீபாவளி! எல்லாம் போச்சு. நான் லண்டனில கிடக்கிறன். தம்பியும் குடும்பமும் வல்வெட்டித்துறையில. அங்க எங்கட பிள்ளையள், ஆரும் வெடியே கேக்குறேல்ல. தினமும் வெடியள பாத்ததுகள்! சொந்தங்கள் தானே பண்டிகை? ஊரே இல்லாதவனுக்கு தீபாவளி என்ன கேடு?''

வைக்கப்பட்ட தொலைபேசியின் "சொந் தங்கள் தானே பண்டிகை......?'' என்கின்ற வார்த்தைகளின் வாசம், ஆஸ்பத்திரி வீதியில் ஆடித்திரிந்த எத்தனை பேரைச் சென்றடையும்! எந்த நினைவுமே இல்லாமல், யாதும் மறந்து, தத்தமது சம்பாத்தியத்தின் உயர்ச்சிக்கேற்ப உச்சப் பிரவாகத்தோடு பண்டிகை கொண்டாடுகின்ற தகவிருந்தும், புலத்தமிழர்களின் பக்குவம், ஏன் எங்களிடத்தில் இல்லாமல் போனது?

ஆங்காங்கே மின் விளக்குகளை அகாலத்தில் எரிய விட்டபடி, வாழ்த்து மடல்களை வலிந்து திணித்த படி திரிந்த ஆமிக்காரர்களுக்கு மட்டுமல்லாது, நம்மவர்களில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை, "தீபாவளி' தமிழனின் பண்டிகை இல்லை என்பது. கிரிதரன் கேட்ட ""நாடே இல்லாதவனுக்கு........?'' நாக்கைப் பிடுங்குகின்றது!!

Please Click here to login / register to post your comments.