ஆண்டன்: பிரபாகரன் உருக்கம், கருணாநிதி அஞ்சலி

டிசம்பர் 15, 2006

கிளிநொச்சி: ஆண்டன் பாலசிங்கம் மறைவின் மூலம் ஈழத்தின் ஒளி அணைந்து விட்டது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

பாலசிங்கம் மறைவு குறித்து பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வலிமையில் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது. நமது மூத்த உறுப்பினர் அவர். சிறந்த சிந்தனையாளர். தத்துவஞானி. எல்லாவற்றையும் விட எனக்கு உற்ற தோழராக விளங்கியவர். எனக்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுத்தவர்.

எனது துயரங்கள், வேதனைகளை பகிர்ந்து கொண்டவர். புலிகள் அமைப்புக்காக அரசியல் மற்றும் தூதரக ரீதியில் பலம் வாய்ந்த குரலாக ஒலித்தவர். யாரிடமிருந்து நான் அறிவுரைகள், ஆதரவுகளைப் பெற்றேனோ அவர் இப்போது நம்மிடம் இல்லை. அவரது இழப்பு எனக்கும், எனது மக்களுக்கும் ஈடு கட்ட முடியாத இழப்பாகும்.

அவரது வாழ்க்கை மிகவும் குறைந்த ஆயுளைக் கொண்டதாக இருக்கலாம். நமக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் மறைந்துள்ளார். இந்த துயரத்தை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

புலிகள் அமைப்பின் போராட்டம் தொடங்கியபோது முதல் முறையாக நான் அவரை சந்தித்தபோது அவருக்கும் எனக்கும் இடையே பரஸ்பர புரிதல் உணர்வு இருந்தது. அது பின்னர் நல்ல நட்பாக மாறியது. இருவரும் இணைந்தே சிந்தித்தோம், செயல்பட்டோம்.

தினசரி அனுபவங்கள் எங்களை நல்ல நண்பர்களாக மாற்றின. சாதாரண மனித உறவுகளுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்புறவு. நான் பாலசிங்கம் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தேன். ஒரே குடும்பமாக நமது இயக்கத்தினரோடு சேர்ந்து வாழ்ந்தவர் பாலசிங்கம்.

அவர் சாதாரண மனிதர் அல்ல. மிகப் பெ>ய துயரம் சூழ்ந்தாலும் கலங்காத சித்தத்தை உடையவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதும் கூட அவர் கலங்காமல் இருந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வந்தபோதும் பயப்படாமல் இருந்தார். அவரது ஆன்மாவின் பலம்தான் எனக்கு மிகுந்த உந்து சக்தியாக இருந்தது.

விடுதலைப் புலிகள் வரலாற்றில் பாலா அண்ணனுக்கு முக்கிய இடம் உண்டு. நமது தூதரக ரீதியிலான முயற்சிகளுக்கு துணையாக நின்றவர். அவரது சேவைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். உலக அரங்கில் நமது தாயக மக்களை கௌவரத்துடன் நடமாட வைத்தவர் பாலா.

பாலசிங்கத்திற்கு 'நாட்டின் குரல்' என்ற பட்டத்தை நான் அளிக்கிறேன். பாலசிங்கம் மறைந்து விட்டாலும் நமது சிந்தனையில் அவர் என்றும் வாழ்வார் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.

இந் நிலையில் பாலசிங்கம் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் 3 நாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள புலிகள் இயக்க அலுவலகங்களில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

கருணாநிதி இரங்கல்:

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதியை விரும்பியவரும், நார்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும், ஆற்றலாளரும், அன்பின் உருவமாகத் திகழ்ந்தவரும், இறுதியாக இமைக் கதவுகள் மூடும் வரையில் ஈழத்தின் சுயமரியாதை சுடரொளியை அணையாமல் பாதுகாத்தவர் என் இனிய நண்பர் பாலசிங்கம்.

அவரது மறைவுச் செய்தியை பல காலம் அவருடன் பழகிய என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும் அவரது அன்புத் துணைவியாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நெடுமாறன், வீரமணி இரங்கல்:

ஆண்டன் மறைவு குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கம் முதல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தன்னலமற்ற பணிபுரிந்தவர். விடுதலைப் புலிகளின் சார்பில் அனைத்து சமரசப் பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக வாதாடியவர். அவரின் மறைவு மூலம் உருவான வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த காலத்திலும் கொஞ்சமும் கலங்காது இறுதி மூச்சு வரை கடமையாற்றியவர் அவர். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய துணைவியார் ஏடேல் அம்மையார் அவர்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி இரங்கல்:

இதுதொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், ஈழப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு நெருங்கிக் கொண்டுள்ள நிலையில் பாலசிங்கத்தின் மறைவு நிகழ்ந்திருப்பது, ஈழத் தமிழர்களின் துயரத்தை மேலும் இரு மடங்காக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

வைகோ இரங்கல்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் பயணத்தின் மிக முக்கிய காலகட்டத்தில் விடுதலைக் குயிலை மரணக் கழுகு கொத்திப் பறித்து விட்டது. தமிழினம் தனது பொக்கிழத்தை இழந்து விட்டது. தமிழீழம் தனது வீரமகனை இழந்து விட்டது என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் இரங்கல்:

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மனித நேய அடிப்படையிலான ஜனநாயக பாதுகாப்புக்கானது என்று சர்வதேச அரங்கில் நிலை நாட்டிய வல்லமை வாய்ந்த பாலசிங்கத்தின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கு எமது வீர வணக்கம் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த் இரங்கல்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண நீண்ட காலமாக உழைத்த ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். பாலசிங்கத்தை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெ>வித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி: Thats Tamil

Please Click here to login / register to post your comments.