விஸ்வரூபம் - கவிஞர் வாலி

ஆக்கம்: கவிஞர் வாலி

தமிழனின் விஸ்வரூபம் திருவள்ளுவர்;
தமிழரின் விஸ்வரூபம் தந்தை பெரியார்!

...

ஈழத்தின் விஸ்வரூபம் பிரபாகரன்;
ஈகத்தின் விஸ்வரூபம்
திலீபன்!...
சோற்று வயிறின் விஸ்வரூபம்
தோழர் ஜீவானந்தம்;
ஆற்று மணலின் விஸ்வரூபம்
தோழர் நல்லகண்ணு!


...

தரையுலகம் விடுத்து
திரையுலகம் பார்ப்போமாயின்…

கொடையின் விஸ்வரூபம்
கண்டி;
கொள்கையின் விஸ்வரூபம்
காஞ்சி;நடிப்பின் விஸ்வரூபம்
விழுப்புரம்;
வசனத்தின் விஸ்வரூபம்
திருவாரூர்;


...


இசையின் விஸ்வரூபம்
பண்ணைப்புரம்;
இயக்கத்தின் விஸ்வரூபம்
அல்லி நகரம்;
பாடலின் விஸ்வரூபம்
சிறுகூடல்பட்டி;
தேடலின் விஸ்வரூபம்
பரமக்குடி;


....


ஆம்;
ஆழிசூழ் உலக நாயகனாம் -
கமல் எனும்
கலைஞன்…


பரமக்குடியில்; ஒரு
பார்ப்பனக் குடியில் -
கதர்ச்சட்டை பெற்றெடுத்த
கறுப்புச்சட்டை;
ஆத்திக விதையில் விளைந்த
நாத்திக விருட்சம்!....

ராஜலட்சுமி மணாளனைவிட
'ராஜ்கமல்' அதிபனுக்கு –
மணியம்மை மணாளரிடம்தான்
மட்டற்ற மதிப்பு;
அதற்கு காரணம்
அவரது பேச்சுதான் -
அவனுக்கு
அறிவு நூல்களின் பதிப்பு!


...

அவன் இருப்பது
ஆழ்வார் பேட்டை; ஆனால்
அவன் இசைத்ததில்லை
ஆழ்வார் பாட்டை!அவனது
ஆக்கை –
என்புதோல் போர்த்தியதல்ல;
அன்பு தோல் போர்த்தியது;

ஆதலால்தான்
அதை –
மயானத்திற்கு தராமல்
மருத்துவத்திற்கு தந்திருக்கிறான்!


...


பணம் பண்ண வேண்டிப்
படம் பண்ணும் நடிகனல்ல;
படவுல வரலாற்றில் -
தனக்கொரு
தடம் பண்ணும் நடிகனவன்;


தாழக் கிடக்கும்
தமிழ் சினிமாவை –
உலகத் தரத்தின்
உயரத்திற்கு –
ஏற்றிவிடும்
எஸ்கலேட்டர் அவன்;


ஹாலிவுட்டின்
ஹார்மோனைக் கொண்டுவந்து
கோலிவுட்டிற்குக்
கொடுத்து – அதற்கு
வலிவும் பொலிவும் - ஊட்ட
வல்லான் அவனென்றி எவன்?
....

மாவலியைக் கோராமல் - தன்
மனவலியைக் கொண்டே –
மண்ணுக்கும் விண்ணுக்குமாய் -
அந்த
மஹாக் கலைஞன் எடுத்திருக்கும்
'விஸ்வரூபம்' - கூன் பிறைக்கு
விளைத்திருக்கிறது கோபம்!

.....
இறை;
மறை;
இவ்

இரண்டைப் பற்றி குறை – என
இயம்புகிறத பிறை!
...
யான்படும் கவலையெலாம்
யாதெனில்…
திரைச்சண்டை
தரைச் சண்டை ஆகக் கூடாது;
அருந்தமிழ் நாட்டின்
அமைதிகெட்டுப் போகக்கூடாது! ....
தொழுவோம்; தொழுது
எழுவோம்…

அளவற்ற
அருளாளனான –
அவ் -
ஆண்டவனை;
'எல்லாப் புகழும் இறைவனுக்கே'
என –
எல்லோரும் ஏத்திடும் பெருமை பூண்டவனை!

Please Click here to login / register to post your comments.