மாணவர் போராட்டத்திற்கு வித்திட்ட பாலச்சந்திரனின் படுகொலை

ஆக்கம்: இதயச்சந்திரன்

26 வயது நிரம்பிய முகமட் பௌசிசியின் தற்கொடை, டுனீசியாவில் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதிபர் பென் அலியின் அதிகார மையத்தை அழித்தது. இன்று தமிழ் நாட்டில் வெடித்தெழுந்துள்ள மாணவர் போராட்டங்கள், டுனீசியாவை நினைவூட்டுகிறது.

இத்தனை காலம் அடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக மாணவர்களின் உணர்வுகள் , தன்னியல்பான எழுச்சியாக உருவெடுத்ததில் , தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை பெரும் பங்கு வகிப்பதை காண்கிறோம். அடக்கப்பட்ட கூட்டுமன உணர்வுகளின் வெளிப்பாடுதான் இது.

நிர்வாணமாக தெருவில் ஓடும் சிறுமியின் புகைப்படம், எவ்வாறு வியட்நாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு உலகளவில் எதிர்ப்புணர்வுகளைக் கிளம்பியதோ, அவ்வாறானதொரு நிலையை பாலச்சந்திரனின் கொலையுண்ட படங்கள் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாணவர்களின் போராட்டத்தில் எந்தச் சதியும் இல்லை. எழுதப்பட்ட விதிகளும் இல்லை.

சட்டசபைத் தீர்மானங்களும், நாற்காலிகளைத் தக்க வைக்கும் உண்ணாவிரதங்களும், டெல்லியோடு பேசுகிறோம் என்கிற மகுடி வித்தை சாகசங்களும் , கடிதம் எழுதும் கயமைத்தனங்களுமே ,இளையோர்களிடையே மாற்று சிந்தனையை உருவாக்கியுள்ளது.

சில இடங்களில் அமெரிக்கத் தீர்மானத்தை மாணவர்கள் எரித்தார்கள் என்பதற்காக, அவர்களின் போராட்டம் நியாயமற்றது, சிறுபிள்ளைத்தனமானது என்று நிராகரித்துவிடமுடியாது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இருக்கும் 47 நாடுகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ இலங்கை மீது தீர்மானங்கள் கொண்டு வரலாம்.

அமெரிக்கா கொண்டு வரக்கூடாது என்று யாரும் தடுக்கவில்லை. நாங்கள் கேட்பதால் அவர்கள் கொண்டுவருவதில்லை. அப்படிக் கேட்டாலும் கொண்டு வர வேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை.

ஒரு நாட்டிற்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டு வருபவர்களுக்கு ,தேவையொன்று உண்டு. தமது நாட்டிற்கான தேசிய நலன் எது என்பதன் அடிப்படையில், பிராந்திய நலனைத் தீர்மானிக்கும் போது இத் தேவை ஏற்படலாம்.

இந்தியாவிற்குத் தேவைப்படாததொன்று, அமெரிக்காவிற்கு அவசியமாகிறது.

தீர்மானம் என்கிற விவகாரத்திற்கு அப்பால்,இலங்கை குறித்தான இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து நோக்க வேண்டும்.

இந்தியாவின் பெரும் வர்த்தகர்கள் , இலங்கையில் பல முதலீடுகளை செய்கின்றார்கள். விரைவில் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் [Spice Jet ] என்கிற விமானப் போக்குவரத்து நிறுவனம் இலங்கையில் பாரிய முதலீடுகளை குவிக்கப்போகிறது. 'கருணாநிதி டெல்லியை அசைக்கப்போகிறார்' என்பவர்கள் கவனிக்க வேண்டிய விவகாரம்.

மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் 100-150 மில்லியன் டொலர் வரையான நிதியினைப் பெறுவதற்கு இந்நிறுவனம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையும் புளூம்பேர்க்கும் [Bloomberg] இணைந்து அண்மையில் மும்பை மாநகரில் முதலீட்டாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியது குறிப்பிடத்தக்கது .

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் , 2009-2010 காலப்பகுதியில் இலங்கை-இந்தியாவிற்கு இடையிலான $3 பில்லியன் இருதரப்பு வர்த்தகம் ,2011-12 இல் $5.1 பில்லியனாக உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கான இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பு $4.3 பில்லியனாகும்.

இது போன்ற ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இந்நிலையில் இலங்கை மீது பொருளாதாரத்தடையினைக் கொண்டுவர, இம்முதலாளிகள் அனுமதிப்பார்களா என்கிற கேள்வி எழுகிறது.

ஆகவே,இலங்கை மீது சீனா செலுத்தும் முதலீட்டு ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு முயலும் இந்திய அரசு, இலங்கை மீது ஐ.நா.சபையில் தீர்மானத்தைக் கொண்டுவருமென கற்பிதம் கொள்ள முடியாது.

அமெரிக்காவின் நகர்வுகள் வேறு விதமாக அமைகிறது. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை, தமிழ் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு என்பது போன்ற , சிங்களத்திற்கு அறவே பிடிக்காத கோரிக்கைளை முன்வைத்து, இலங்கையோடு முரண்படாமல், அவர்களின் வழியில் சென்று அழுத்தம் கொடுக்கும் புதிய உத்தியைக் கையாள்கிறது.

சிங்கள தேசம் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்று அவர்களிடமே கூறுகிறது அமெரிக்கா . இது பாரிய அழுத்தமெனக் கூறுவோரும் உண்டு. படிப்படியாகத்தான் அமெரிக்கா அழுத்தத்தைக்கொடுக்கும் . அதுவரை பொறுத்திருப்பதுதான் சரியான இராஜதந்திரம் என்றும் வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகின்றன.

அமெரிக்கா படிப்படியாக அடி எடுத்து வைக்கும் போது , மீதமுள்ள தமிழ் மக்களின் நிலங்களையும், வளங்களையும் , பௌத்த சிங்களப் பேரினவாதம் சூறையாடிவிடும்.

இதனை தமிழக மாணவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள் போல் தெரிகிறது. அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தால் உலகமே அழிந்துவிடுமென அவர்கள் எண்ணவில்லை.

மாறாக, அதனை கொள்கை அளவில் எதிர்க்கும் மாணவர்கள், அதற்கு மாற்றீடாக தமது கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள். அத்தீர்மானங்கள் ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைக்கு விரோதமாக அமையவில்லை. சுயாதீன சர்வதேச விசாரணை, மக்கள் மத்தியில் பொதுஜன வாக்கெடுப்பு என்பவைதான் மாணவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

அமெரிக்காவின் பிராந்திய நலனையும், இந்தியாவின் இயலாத தன்மையையும் மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள். நீதி கிடைக்கும் முன்னரே, தமிழினம் அழிக்கப்பட்டு விடும் என்கிற பேருண்மை தெரிந்ததால், மக்கள் போராட்டம் ஒன்றே வழி என்று களத்தில் இறங்கி விட்டார்கள் தமிழக மாணவர்கள்.

முள்ளி வாய்க்காலில் எமது மக்கள் எழுப்பிய அவலக் குரல் இவர்களின் காதுகளில் விழுகின்றது. அந்தப் பேரழிவு நிகழ்ந்த போது , இப்போது தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவும் வரவில்லை, 50,000 வீடுகள் கட்டித்தரும் [?] இந்தியாவும் வரவில்லை.

சீனாவைப்பற்றிக் கவலை கொள்ளத்தேவையில்லை. அவர்கள் எப்போதும் வரமாட்டார்கள். அந்நாடு தீர்மானங்களும் கொண்டுவராது, வீடும் கட்டித்தராது. சீனாவை அகற்ற முயல்பவர்களுக்கே இவையெல்லாம் அவசியம்.

இன்னமும் தொடரும் இன அழிப்பினை நிறுத்தும் வகையில் காட்டமான தீர்மானங்களை முன் வையுங்கள் என்பதுதான் மாணவர்களின் வேண்டுதல்.

இன அழிப்பிற்கு கால அவகாசம் கொடுக்கும் தீர்மானங்கள் அவர்கள் வெறுக்கின்றார்கள்.

பாதுகாப்பாக வாழ்பவர்கள், காலை ஆட்டிக் கொண்டு கால அவகாசத்தை ஏற்றுக்கொள்ளலாம்.

6வது திருத்தச் சட்டத்தால் வாய் மூடப்பட்டவர்கள் எதையுமே பேச முடியாது.

இந்நிலையில் அம்மக்களுக்காக யார் பேசுவது?.

தமிழக மாணவர்கள் எமது கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள். . வரவேற்போம்.ஆதரவளிப்போம். அவர்கள் எமக்காகப் போராடுகிறார்கள். அவர்களின் நேர்மையை கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.

Please Click here to login / register to post your comments.