வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு

ஆக்கம்: இதயச்சந்திரன்
மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது.

கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

ஆனாலும் கலாசார இன அழிப்பின் பல பரிமாணங்கள் , வட- கிழக்கு எங்கணும் 2009 இற்குப் பின்னர் தீவிரமடைவதையிட்டு மனித உரிமை குறித்து ஐ.நா வில் தீர்மானங்கள் கொண்டுவரும் மேற்குலகிற்குப் புரிவதில்லை.

கால அவகாசம் வழங்குவதால் தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோவது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.

இந்த வாரம் வடக்கிற்கு வசந்தப் பயணம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதிகாரிகள் ,யாழ் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ,கிளிநொச்சியில் சிறிதரனையும் சந்தித்துப் பேசியுள்ளனர். வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர் நிலமும், மண்டைதீவில் 600 ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உத்திர வேங்கை ஆலயக் காணியும் படையினரால் சுவீகரிக்கப்பட்ட விடயம் அமெரிக்க அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. இவைதவிர இரணைதீவு, பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் படையினருக்கு ஒதுக்கப்பட்ட விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.

சாந்தபுரத்திலிருந்து தெல்லிப்பளை வரை ,' எமது நிலம் எமக்கு வேண்டும் ' என்கிற முழக்கத்தோடு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் இராணுவ பிரதேசமாக மாற்றமடைவதற்கு எதிராக, கடந்த பெப்ரவரியில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடாத்திய வேளை, மக்கள் விரோதக் கும்பலொன்று தாக்குதலில் ஈடுபட்டது. அதில் பொதுமக்களோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி , இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொண்டது.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை பொதுசனமும் கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும்போது ,படைப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களைப்புகைப்படம் எடுப்பது, ஒன்றுகூடும் இடத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது, ஆர்ர்ப்பாட்டம் முடிந்து வாகனங்களில் செல்வோர் மீது தாக்குதல் தொடுப்பது போன்ற பல ஒடுக்குமுறை வடிவங்கள் மக்களை நோக்கி பிரயோகிக்கப்படுகிறது.

இருப்பினும் நிலமிழந்த மக்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்வதற்காகப் போராடும் முயற்சியினைக் கைவிடவில்லை. அவர்களை ஒன்றிணைத்து வெகுஜனப்போராடங்களை முன்னெடுக்கும் வகையில் பலமான அரசியல் தளம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவையாக அமைகிறது.

மக்களிடையே சாதிய ,மத ரீதியான உள் முரண்பாடுகள் இருந்தாலும் , பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அணி திரளவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே எவ்வாறு பகைமையுள்ள முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது குறித்து ' தராக்கி' சிவராம் அவர்கள் முன்வைத்த ஆய்வுகளை, வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். 'உயர் பாதுகாப்பு வலயம்' சட்டபூர்வமானதாக மாற்றப்படுகிறது என்பதுதான் இப்போதுள்ள தலையாய பிரச்சினை.

காணி சுவீகரிப்பு சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ், வலிகாமம் வடக்கு ( தெல்லிப்பழை), வலி.கிழக்கு ( கோப்பாய்) என்கிற இரு பிரதேசப்பிரிவிலுள்ள , மொத்தமாக 11 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது மக்களின் 6381 ஏக்கர் 38.91 பேர்ச் காணி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.

காணிக்கு உரிமை கோருவோரை அடையாளம் காண இயலாமல் இருப்பதால், இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியை யும் ( காங்கேசன் துறையும், பலாலியும்) ,யாழ்.பாதுகாப்பு பட்டாலியன் தலைமையகத்தையும் உத்தியோகபூர்மாகக் கையளிப்பதாகக் கூறும் அறிவித்தல் ஒன்றினை ,யாழ் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த காணி சுவீகரிப்பு அதிகாரி எ. சிவசுவாமி விடுத்துள்ளார். தமது வாழ்விடங்களில் இருந்து 23 வருடங்களுக்கு முன்பாக ,வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்தான் இந்த இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள். பயிர் செய்கைக்கு உகந்த அற்புதமான செம்பாட்டு மண் இங்கு பரவிக் கிடக்கிறது. தாம் வாழ்ந்த மண்ணைக்கூட இம்மக்களால் தரிசிக்க முடியவில்லை.

அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சனநாயக நாடுகளுக்கு , முகவரியிழந்த மக்களின் குரல் கேட்காதா?. மீள்குடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறுகிறதென இன்னமும் பொய்யுரைக்கப் போகிறார்களா?. தீர்மானத்தால் விடியலின் வாசல்கள் திறக்கப்படுமென்று ,மர நிழல்களில் வாழும் துன்ப்பப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களா ?. காணாமல் போகடிக்கப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மார்களை,சகோதர சகோதரிகளை தேடியலையும் உறவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது இந்த சர்வதேசம்!

முடிவின்றித் தொடரும் துயரங்களுக்கு மத்தியில், குடியிருந்த நிலமாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், சிறுதுளி நம்பிக்கையோடு வாழும் தமிழ் மக்களுக்கு ,அடுத்தடுத்துவரும் காணி அபகரிப்பு சுவரொட்டிகள் அச்சத்தை ஊட்டுகின்றன.

ஒருவருக்கு 5 படையினர் என்கிற வகையில் ஏறத்தாள 31,000 இராணுவத்தினர் பூநகரியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதில் பூநகரியைச் சூழவுள்ள பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், மற்றும் முழங்காவில் உட்பட 800 ஏக்கரில் படையினர் நிலை கொண்டுள்ளனர். சுவீகரிக்கப்பட்ட நிலத்தில், சீன தேசத்தின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை நிர்மாணிக்கும் திட்டம் அரசிற்கு இருக்கிறது.

காற்றாலை உடன் , சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையங்களை , மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் நிறுவிட, சீனத் தொடர்புடைய மலேசிய கார்பரேட் ஒன்றிக்கு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாதகல்லில் இருந்து வெளியேறிய 279 குடும்பங்களின் நிலை குறித்து மனித உரிமைவாதிகள் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை.

'கண்ணி வெடி அபாயம்' என்கிற பதாகைகள் , திருவடிநிலை மக்களை குடியேற விடாமல் தடுக்கிறது. ஆனால் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இவைதவிர, உயர் பாதுகாப்பு வலயம் என்று குறிப்பிடப்பட்ட மயிலிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளில் ,இரண்டு விடுமுறை விடுதிகள் (Holiday Resort) படையினரின் பயன்பாட்டிற்காக சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு குடாநாட்டைத் துண்டாடும் வகையில், நீண்ட அணைகள் (BUND) வலி வடக்கில் கட்டப்படும் விசித்திரங்களையும் காணலாம். தொண்டமாணாறு செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அணை , ஓட்டகப்புலத்தை ஊடறுத்து பலாலி படைத்தளத்தை அண்டிய வசாவிளான் வரை நீண்டு செல்கிறது. குரும்பசிட்டியில் ஆரம்பித்து கட்டுவன் மற்றும் தெல்லிப்பளையை கடந்து செல்லும் மற்றுமொரு அணை காங்கேசன்துறையில் சங்கமிப்பதாக வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார். இந்த அணை கட்டும் வேலைத்திட்டத்தின் ஊடாக 26 கிராம சேவைகள் பிரிவிற்கு உட்பட்ட நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் நில அபகரிப்பிற்கு எதிரான கனதியான போராட்டங்கள் ,தேர்தல் அரசியலைக் குறிவைக்காமல் ,குடாநாட்டில் முன்னெடுக்கப்படும் நிலை தோன்றுவதைக் காணலாம்.

தினசரி கூலியை 550 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்கிற போராட்டங்களும் மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு மனோ கணேசன் தாக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் வரவழைப்பதற்கு, தொம்சன் மதியுரைக் குழு என்கிற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ள அரசு, மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கிறதென நாட்டிற்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பொய்யான நம்பிக்கைகளைக் கொடுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால், மின்சாரக் கட்டண உயர்விற்கான காரணத்தை ஏன் கூறமுடியாமல் தவிக்கிறார் என்று ஐ.தே. கட்சியின் எம்பியும் பொருளியல் நிபுணருமாகிய கலாநிதி.ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.

ஆட்சி அதிகார மையத்தில் பொருளாதாரச் சுனாமி அலை மேலெழும் அதேவேளை, வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசு முன் வருகிறது. செப்டெம்பர் தேர்தலுக்கு முன்பாக காணிச் சுவீகரிப்புகள் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.

Please Click here to login / register to post your comments.