"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு இதயத்தில் வேலாகப் பாய்ந்தது: வைகோ

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுச் செய்தி இதயத்தில் வேலாகப் பாய்ந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தி:

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி இதயத்தில் வேலாகப் பாய்ந்தது.

துன்பமும், துயரமும் நிறைந்த ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் பாலசிங்கம் அவர்கள் ஆற்றியுள்ள சேவை இமயம் நிகர்த்தது.

மார்க்சீய சிந்தனையும், மனிதகுல வரலாற்றில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் ஞானமும்-

தொலைநோக்கோடு பிரச்சனைகளை ஆராய்ந்து அணுகும் மதிநுட்பமும்-

ஆங்கிலத்திலும் தமிழிலும் பெற்றிருந்த அற்புதமான எழுத்து ஆற்றலும் எவரும் எதிர்கொள்ள முடியாத வாதத்திறமையும்-

தமிழ் ஈழத் தாயக விடுதலைக்கான அர்ப்பணிப்பும்-

மலையளவு துன்பங்களையும்-

சலிக்காது தாங்கும் மனவலிமையும்-

ஒருங்கே நிறைந்த காலக்கருவூலமாக தமிழ் ஈழத்தின் அருட்கொடையாக திகழ்ந்த மாமனிதர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குப் பெருந்துணையாக விளங்கிய பாலசிங்கம் தமிழ் இனப் படுகொலை நடத்தும் சிங்கள இனவாத அரசு உலகெங்கும் மேற்கொண்ட பொய்ப்பிரசாரத்தை முறியடித்த சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியை விழிக்கச்செய்தார்.

85 இல் திம்பு முதல் 2006 ஜெனீவா வரை 21 ஆண்டுகள் தமிழீழத்தின் உரிமைக்குரலாக விளங்கினார்.

மரணம் பலமுறை அவரை முற்றுகையிட்டது. 85 இல் சென்னையிலேயே அவரைக் கொலை செய்ய சிங்களக் கைக்கூலிகள் முயன்றனர். 87-88 களில் ஈழத்தில் இராணுவத் தாக்குதலில் பலமுறை மயிரிழையில் உயிர் தப்பினார்.

இரு சிறுநீரகங்களும்- முற்றிலும் பழுதான நிலையில் நோர்வே அரசு அவரைப் பாதுகாத்து சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இலட்சிய வீராங்கனையான அடேல் அவர்கள் பாலசிங்கத்தின் துணைவி ஆனார். மார்க்- ஜென்னியைப்போல் இருவரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். எண்பதுகள் முதல் பாலசிங்கம் அவர்களிடம் நான் கொண்ட நட்பும்- பாசமும் எத்தனையோ முறை நாள் கணக்கில் உரையாடி மகிழ்ந்ததும்- அதிலும் குறிப்பாக 2000 ஆம் ஆண்டு ஜூனில் இரண்டு நாள் லண்டனில் அவரோடு தங்கியபோது பரிமாறிக்கொண்ட அவரது அனுபவச் செய்திகளும் என் நெஞ்சிருக்கும் வரை நிலைத்து இருக்கும்.

ஈழத்தின் துயர் குறித்து கவலை மோதும் போதெல்லாம் அவரிடம் நான் பகிர்ந்து கொள்ளும் பேற்றினையும் காலன் பறித்து விட்டானே!

போர் மேகங்கள் ஈழத்தில் சூழ்ந்துவிட்ட நிலையில் தமிழ் ஈழ விடுதலைப் பயணத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் எங்கள் விடுதலைக் குயிலை மரணக்கழுகு கொத்திப் பறித்து விட்டதே!

இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் தமிழ் ஈழத்துக்காகவே துடித்துக் கொண்டு இருந்த நல்லுயிர் அடங்கிவிட்டதே!

நோயின் கொடுமையால் துன்புற்று நலிந்த அந்த வீரச்சகோதரன் அமைதியாக இனி தூங்கட்டும்.

தமிழ் இனம் தன் பொக்கிசத்தை இழந்தது.

தமிழ் ஈழம் தன் வீரமகனை இழந்தது!

ஈழத் தமிழ் மக்களுக்கும்- விடுதலைப் புலிகளுக்கும் சகோதரி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எங்கள் இதயத்து விம்மல்களையும், பொங்கிவரும் கண்ணீரையும் காணிக்கை ஆக்குவதுடன்- பாலசிங்கத்தின் இதய தாகமான தமிழ் ஈழம் மலர பாடுபடச் சூளுரைக்கிறோம் என்பதைத் தெரிவிக்கிறேன்.

Please Click here to login / register to post your comments.