கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை

ஆக்கம்: இதயச்சந்திரன்

2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது.

மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.

கடந்த திங்களன்று திறைசேரி வெளியிட்ட ஆண்டறிக்கையில், கடன் பற்றியதான பல புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. 2012 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி வரையான வெளிநாட்டுக்கடன் $20.3 பில்லியன். மொத்த உள்ளூர் உற்பத்தியின் (GDP) மூன்றிலொரு பங்கு இதுவாகும்.

அதுமட்டுமல்லாது, 10 வருடங்களில் பத்து சதவீதமாக அதிகரித்துள்ள வெளிநாட்டுக்கடனில், $13.6 பில்லியன் (68%) சலுகை அடிப்படையிலமைந்த கடனாகவும், மிகுதி $6.7பில்லியன் (32%) சலுகைகளை உள்ளடக்காத கடனாகவும், அதேவேளை அடுத்த 15 வருடங்களில் முழுமையாகச் செலுத்தவேண்டிய கடனாகவும் இது இருக்கிறது.

அபிவிருத்திப் பங்காளர்களும் கடன் வழங்கும் நிறுவனங்களும் இணைந்து , 2012 இல் , $2,789 மில்லியனை ,திட்டங்களுக்கான கடனாகவும், $363 மில்லியனை உதவித் தொகையாகவும் இலங்கைக்கு வழங்கியுள்ளன.

இதில் சீனா 33%, இந்தியா 22%, யப்பான் 17% மற்றும் உலக வங்கி 11% பங்களித்துள்ளன. குறிப்பாக இத்தொகையில் $2,226 மில்லியன் (71%) பொருளாதார உட்கட்டுமான திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திரைக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் 'தேசியக்கடன்கள்' எவை என்பது குறித்து மக்களுக்கு மறைக்கப்பட்டாலும், மின்சாரக்கட்டண உயர்வு ஓரளவிற்காவது அதனைக் காட்டிக் கொடுத்துவிடும். 8 வருடங்களிற்கு முன் 55 அரச திணைக்களங்கள் 32 பில்லியன் ரூபாவை இலாபமாகப்பெற்றன. இப்போது அவை மொத்தமாக 107 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றன என்கிற தகவலை, நிதி திட்டமிடல் அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அரச வங்கிகளில் இருந்து பெறும் கடன்களில் பெரிதும் தங்கியுள்ள இலங்கை மின்சார சபையும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நாட்டில் சமச்சீரற்ற பொருளாதார நிலையைத் தோற்றுவிப்பதாக கணிப்பிடப்படுகிறது. 9.8 பில்லியன் ரூபாய்களை, 2005 இல் இலாபமீட்டிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 2012 இல் 89.6 பில்லியன் ரூபாய் நட்டம் என்கிறது. 6.8 பில்லியனில் இருந்து 61.1 பில்லியனாக நட்டத்தின் அளவு உயர்ந்து செல்லும் பரிதாப நிலையில் மின்சாரசபை இருக்கிறது.

இதுபோல, இலங்கை போக்குவரத்து சபையின் நிதி நிலைமையும் சேடமிழுத்துக் கொண்டிருக்கிறது. 2005 இல் 1.1 பில்லியன் ரூபாவாகவிருந்த நட்டக்கணக்கு 2012 இல் 4.66 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் விவசாய காப்புறுதி சபை என்பவற்றின் இழப்பு வீதமும் கடந்த 8 ஆண்டுகளில் அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.

'மகிந்த பேர்சி ராஜபக்சவின் வெள்ளை யானைகள்' என்று தலைப்பிட்டு, ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளிவந்த கட்டுரை இது குறித்தான பல செய்திகளை சொல்கிறது. சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி கடந்த வாரக் கட்டுரையில் சுருக்கமாகப்பார்த்தோம். ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட வெள்ளையானைகளைக் கட்டி மேய்க்க முடியாமல் எவ்வாறு அரசு திண்டாடுகிறது என்பது குறித்து விரிவாகப்பார்க்கலாம்.

றுகுண மகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகம் (அம்பாந்தோட்டை துறைமுகம்) என்பதன் கட்டுமானப்பணி, ஜனவரி 2008 இல் ஆரம்பமானது. சீன அரசின் எக்ஸ்சிம் (EXIM) வங்கியானது இந்த அபிவிருத்திப் பணிக்கான முழுத்தொகையினையும் ($1.3 பில்லியன்) கடனாக வழங்க, சீன ஹாபர் எஞ்சினியரிங் கம்பனியும் சைநோஹைட்ரோ கூட்டுத்தாபனமும் இணைந்து நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தன.

துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணி பூர்த்தியானவுடன் 650மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்து குவியுமென்று அரசு எதிர்பார்த்தது.

ஆனால் அதைவிட அதிகமான $700 மில்லியன் முதலீட்டிற்கான உத்தரவாதங்களைத் தாம் பெற்றுள்ளோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி.பிரியத் பந்து விக்கிரம அவர்கள், சீன வங்கியிடமிருந்து வாங்கிய கடனிற்கான வட்டியும் தவணைப்பணமும், துறைமுக அதிகாரசபை பெறும் 5.3 பில்லியன் ரூபாய் (2012) இலாபத்தின் ஊடாகவே செலுத்தப்படுகிறது என்கிற உண்மையைச் சொல்வதில்லை.

கடந்த வருட ஹம்பாந்தோட்டை துறைமுக வருமானம், 500-600 மில்லியன் ரூபாவென, இலங்கை துறைமுக அதிகார சபையால் குறிக்கப்பட்ட இலக்கினை அடையமுடியவில்லை. மிகக்குறைவான 132 மில்லியன் ரூபாவையே அச்சபை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வருட இறுதிக்குள் 3.5 பில்லியன் ரூபாவை வருமானமாக எட்ட முடியுமென்று தலைவர் விக்ரம நம்பிக்கை கொண்டுள்ளார்.

ஏற்கனவே $200 மில்லியன் முதலீடு செய்ய, இந்தியாவின் மிகப்பெரிய சீனி உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ ரேணுகா சுகர் லிமிட்டெட் முன்வந்திருப்பதாகக்கூறும் கலாநிதி விக்கிரம, மேலதிகமாக $1 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீடு ஹம்பாந்தோட்டைக்கு வருமென்கிறார்.

இந்த துறைமுக வெள்ளையானை குறித்து பல சர்ச்சைகளும், சந்தேகங்களும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுவதை பரவலாகக்காணலாம்.

அத்துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்துவதற்கான காப்புறுதிகளை பெறுவதில், தடைகள் இருப்பதாக கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு துறைமுகம் குறித்தான தெளிவான வரைபடங்கள் இல்லையென்று சொல்லப்படுகின்றது.

இவைதவிர, துறைமுகத்தின் தலைவாசலில், அகற்ற முடியாத அளவிற்கு பெரிய பாறையொன்று நந்தி போல் குந்தியிருப்பதாகவும், அதனை அகற்ற பல மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும், அதனால் பாரிய கப்பல்கள் உள்நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அகற்றுவதற்கு செலவாகும் நிதியைக் கடனாக் கொடுக்குமாறு சீனாவிடம் கேட்டும், சாதகமான பதில் கிடைக்கவில்லை என்கிற செய்தியும் உண்டு.

இதைவிட கடலின் ஆழம் குறித்த பிரச்சினை ஒன்று பெரிதாகப் பேசப்படுகிறது.

அதாவது 17 மீட்டர் ஆழம் கொண்ட ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது சிக்கலான விடயம் என்கிற விவாதம் எழுப்பப்படுகிறது. ஆனால், கொழும்புத் துறைமுகம் 15 மீட்டர் ஆழம் கொண்டதெனக் கூறும் துறைமுக பிரதான பொறியியலாளர், 35 மீட்டர் ஆழமுடைய துறைமுகம் உலகில் எங்கே உள்ளதென்று வாதிடுகின்றார். இத்துறைமுகத்தை நிராகரிப்பதற்கான பொருத்தமான காரணி இதுவல்ல என்பதுதான் அவருடைய வாதம்.

இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அரசு, சிட்னிக்கு அடுத்ததாக, இயற்கை வளமிக்க ஆழ்கடல் துறைமுகமாக விளங்கும் 24 மீட்டர் ஆழம் கொண்ட திருகோணமலைத் துறைமுகத்தை ஏன் அபிவிருத்தி செய்ய முன்வரவில்லை என்கிற கேள்வி எழுகின்றது.

கொழும்புத் துறைமுகத்தைவிட, நீர் மற்றும் நிலப்பரப்பளவை பத்து மடங்காகக் கொண்ட திருமலைத்துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில், பிரித்தானியர் நிர்மாணித்த 100 இற்கும் மேற்பட்ட எண்ணெய் சேமிப்புக் குதங்கள் இருக்கின்றன.

சீரற்றகாலநிலையிலும் எல்லா வகையான கப்பல்களும் வந்து செல்லக்கூடிய வசதிகள் அங்கு உண்டு.

மிகக்குறைவான வெளிநாட்டுக்கடனில், துரிதமாக அபிவிருத்தி செய்யக்கூடிய இடமே இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகம்.

அங்கு சீனாவை நேரடியாக இறக்கினால், தம் மீதான இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்கள் முழு வீச்சுடன் பிரயோகிக்கப்படலாம் என்பதை உணர்ந்து, அதனைத் தவிர்க்கும்வகையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது கவனத்தை அரசு செலுத்துகிறது என்கிற பார்வையும் உண்டு. வாக்கு வங்கியைப் பலப்படுத்தவும் இது பயன்படும்.

அடுத்ததாக, $1.35 பில்லியன் செலவில் எக்ஸ்சிம் வங்கியின் உதவியோடு நிறுவப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் நிலைமை குறித்து பார்க்க வேண்டும். 19 தடவையாக, ஆரம்பிப்பதும் இடைநிறுத்துவதுமாக இருக்கிறது அம்மின் நிலையத்தின் பரிதாபநிலை. இதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல், அதனை நிர்மாணித்த சீனாவிடமே திருப்பிக் கொடுக்கலாமா என்கிற சிந்தனையும் அரசிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Debt- Equity swap என்பார்கள்.

இதேபோன்று, சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட குவடோர் துறைமுகத்தின் நிர்வாகத்தை, சிங்கப்பூர் கம்பனியிடமிருந்து பறித்தெடுத்து, சீனாவிடமே அந்த நிர்வாகத்தை கையளிக்க பாகிஸ்தான் அரசு முயற்சிப்பதாக அண்மையில் ஒரு செய்தி வெளிவந்தது. அங்கும், வாங்கிய கடனிற்கான தவணைப் பணத்தைச் செலுத்தமுடியாமல் பாகிஸ்தான் திண்டாடுவதாக் கூறப்படுகிறது. அதனால் இந்த கைமாற்றங்கள் நடைபெறுவதாக நம்பப்படுகிறது.

இவைதவிர, ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் வந்திறங்கிய சீனாவின் முதலீடு , அந்த மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பரவுவதைக் காண்கிறோம்.

ஹம்பாந்தோட்டை நகரிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாத்தல என்னுமிடத்தில், 26 பில்லியன் ரூபா கடனில், சர்வதேச விமான நிலையமொன்று கட்டப்பட்டுள்ளது. 2000 ஹெக்டர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட 'மாத்தல ராஜபக்ச சர்வதேச நிலையம்', முதலீட்டிற்கேற்ற வருவாயை இதுவரை தரவில்லை. இங்கு பயணங்களை மேற்கொண்ட ஒரேஒரு விமானிகள் பயண சேவை நிறுவனமான எயார் அரேபியாவும் (Air Arabia), தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, அங்கு விமானங்கள் வந்து போவது போல் காண்பிப்பதற்காக, தினமும் கட்டுநாயக்காவிலிருந்து மாத்தல வரை உள்ளூர் விமானப்பயணங்களை அரசு மேற்கொள்கிறது.

பிழையான நேரத்தில், தவறான இடத்தில் இவ் விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது என்கிற விமர்சனம் பரவலாக இருக்கிறது. முதற்கட்டமாக, வருடமொன்றிக்கு ஒரு மில்லியன் பயணிகளை, 45,000 மெற்றிக் தொன் சரக்குகளை ஏற்றி இறக்கக்கூடிய வகையில் வர்த்தக வியூகங்கள் வகுக்கப்படுமென பெரிதாகப்பேசினாலும், நடைமுறையில் அவை சாத்தியப்படாத விடயமாகவே தென்படுகிறது. வந்திறங்கும் விமானங்களிற்கான தரிப்பிடங்களை 10 இலிருந்து 25 ஆக அதிகரிக்கப்போவதாகவும் அதன் நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.

இவைதவிர, 15பில்லியன் ரூபா செலவில் ஹம்பாந்தோட்டை விளையாட்டு வலயம் மற்றும் சூரியவேவாவில் 700 மில்லியன் ரூபா சீனக் கடனில் மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கட் மைதானம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

47 ஏக்கரில் உருவாக்கப்பட்ட 32,000 இருக்கைகள் கொண்ட இந்த கிரிக்கட் மைதானத்தில், இதுவரை இரண்டு சர்வதேச கிண்ணத்திற்கான போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை விளையாட்டு வலயத்தின் நிர்மாணப்பணிகள் 2016 இல் முடிவடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ,2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. அதுவரை, வாங்கிய கடனிற்கு வட்டி கட்ட வேண்டும்.

கதிர்காமம் மலைத் தொடர்கள், யால தேசிய பூங்கா, கிரிந்த கடற்கரை மற்றும் வனப்புமிக்க நீர்வீழ்ச்சிகள் நாற்புறமும் சூழ, 235 ஏக்கரில் டெலி-சினிமா (Tele-Cinema) பூங்கா ஒன்று 2 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

2010 மார்ச் இல் திறக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தேசிய டெலி-சினிமா பூங்காவில், இதுவரை எந்தப் படப்பிடிப்புக்களும் நிகழ்த்தப்படவில்லை. வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நாடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வரிகளே இங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவைதவிர, பாரிய நட்டத்தில் இயங்கும் இன்னுமொரு வெள்ளையானை குறித்து சொல்லியாக வேண்டும். வடக்கிலும் இந்த யானை குட்டிபோடப்போவதாக , அண்மைய சீனப் பயணங்கள் உணர்த்துகின்றன.

776 மில்லியன் ரூபா சீனக்கடனில் அமைக்கப்பட்ட , கொட்டாவையிலிருந்து காலிவரையான 95 கிலோ மீட்டர் தூர அதிவேக நெடுஞ்சாலை, ஆண்டொன்றிக்கு தரும் வருவாய் 1 பில்லியன் ரூபாய். நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களிடமிருந்தே இது வசூலிக்கப்படுகிறது. இதன், கடன் மற்றும் நிர்வாகச் செலவு ஏறத்தாள 6.5 பில்லியன் ரூபாய். நிகர நட்டம் 5.5 பில்லியன். வடக்கில் சீனக் கடனில் நிர்மாணிக்கப்படப்போகும் நெடுஞ்சாலைக்கும் இந்தக் கதியே ஏற்படுமென்று நம்பலாம்.

ஆகவே, வருமானமற்ற முதலீடுகள், மக்கள் மேல் வரிச் சுமைகளையும், பன்னாட்டுக் கம்பனிகளுக்கு இலாபத்தையும் மட்டுமே கொடுக்கும் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல. இந்த வெள்ளை யானைகளுக்கு தீனி போட இயலாவிட்டால், மக்களின் நிலங்களும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு தாரை வார்க்கப்படும். வட -கிழக்கில் தீவிரப்படுத்தப்படும் நில அபகரிப்பு இதனைப் புரிய வைக்கிறது. இவ்வாறான கையறுநிலை ஏற்படும்போது, சிறுபான்மைத் தேசிய இனங்களின் நிலங்களின் மீதுதான், ஆட்சியில் இருக்கும் பெருந்தேசியவாதம் கை வைக்கும்.

Please Click here to login / register to post your comments.