சகாப்தம் படைத்த பாலா

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றிற்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும் தமது அன்புரிமைச் செல்வாக்கைத் செலுத்தக் கூடிய ராஜகுருவாக விளங்கிய அன்டன் பாலசிங்கம் சாவை அணைத்துக் கொண்டு விட்டார்.

"சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும். அந்தத் துணிவிலும், தெளிவிலும், விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும்" என்று தாம் முன்னர் உரைத்தபடி சாவை வரவேற்று அதனுள் சாந்தி அடைந்திருக்கின்றார் சாவின் தத்துவம் புரிந்த தத்துவாசிரியர். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியிலும், அதன் இன்றைய விரிவாக்கத்திலும் மதியுரைஞர் பாலாவுக்கு நிரந்தரமான இடம் உள்ளது என்பதைத் தலைவர் பிரபாகரனே தமது வார்த் தைகள் கொப்பளிக்க வெளிப்படுத்தியுள்ளார்.

"எமது விடுதலை இயக்கம் தோற்றம் பெற்ற ஆரம்ப காலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளை யும், வேதனை களையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர். எமது அரசியல், இராஜதந்திர முன் னெடுப்புகளுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற் பட்டவர்" என்று தலைவர் பிரபாகரன் விதந்துரைக்கின்றார்.

அத்தகைய தமிழ்த் "தேசத்தின் குரல்" பாலசிங்கம், தமிழினத்தின் தேசிய அரசியலுக்குள் நுழைந்த அல்லது அவரை அந்த அரங்குக்கு இழுத்து வந்த பின்னணியை இச்சந்தர்ப்பத்தில் மேலோட்டமாக நோக்குவது தம் மக்களுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய அரசியல் பணியை நாம் எடை போட ஓரளவுக்கு உதவக் கூடும்.

பௌத்த சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின் குரூர நிலைப்பாட்டின் வரலாற்றுப் பெறுபேறாக ஐம்பதுகளின் நடுப்பகுதியில் தமிழ்த் தேசியப் பற்றுணர்வு பிறப்பெடுத்தது. ஒடுக்கப்பட்ட ஓரின மக்களின் ஒன்றுபட்ட கூட்டுணர்வாக, அவர்களின் தேசிய விழிப்புணர்வின் எழுச்சிக் கோலமாக அது பிரவாகம் எடுத்த சமயத்தில் அந்தப் புரட்சிப் போக்கை வழிப்படுத்தும் தலையாய பொறுப்பு அவ்வேளை யில் மிதவாதத் தமிழ்த் தலைவர்களின் கைகளில் வீழ்ந்தது.

சுதந்திரம், தர்மம், நியாயமான உரிமைகள், கௌரவமான வாழ்வு போன்ற ஆழமான அரசியல் அபிலாஷைகளை வேண்டி நின்ற அந்தத் தேசிய எழுச்சி, அவ்வேளையில் சாதி, சமயம், வர்க்கம், பிரதேசம், அதிகாரம் என்று பிரிவு பட்டு பிளவுபட்டு நின்ற தமிழினத்தின் சகல வகுப்பாரையும், தரப்பாரையும் ஒன்று திரளச் செய்து, தேச விடுதலை என்ற ஒரே லட்சியத்தில் ஒருமுகப்படுத்தியது. தமிழரின் அரசியல் களத்தில் ஒரு வெகுஜனப் போருக்கான புரட்சிப் புறநிலையை அது தோற்றுவித்தது.

அந்தச் சூழலிலும், பின்னணியிலுமே மதியுரைஞர் பாலாவின் அரசியல் அரங்கப் பிரவேசமும், அவ்வேளை உருக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அவரின் ஒன்றுபடுகையும் இடம்பெறுகின்றன.

ஒருபுறம் ஈழத் தமிழரின் தேசப்பற்றுணர்வை தேசிய எழுச்சியை வெறும் இனவாதமாக அடக்குமுறையாளர்கள் சித்திரித்துக் கொண்டிருக்க மறுபுறம், பொங்கிப் பிரவாகம் எடுத்த தமிழ்த் தேசிய எழுச்சியின் இலக்கை அடைவதற்கு, நடைமுறைச் சாத்திய மான ஒரு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்று பட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்த தமிழர்களின் அப்போதைய மிதவாதத் தலைமைகள், அந்நிலையில் நகர்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளையோ, நடவடிக்கைகளையோ எடுக்கத் தவறி வரலாற்றுத் தவறிழைத்தன.

"தெளிவான அரசியல் தரிசனமும், உருப்படியான செயற்திட்ட மும் இல்லாத காரணத்தினால் தமிழ்த் தலைவர்கள் மீது தீவிரவாத இளம் சமுதாயம் நம்பிக்கை இழந்தது. எவ்வித பயனுமின்றி, முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தலைவர்கள் கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகு முறை மீது, அரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை இழந்தது. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணும் வகையில் நடைமுறைச் செயற்திட்டங்களைக் கொண்ட புரட்சிகரமான அரசியல் அணுகுமுறையையே இளைய தலைமுறை விரும்பியது. ஒருபுறம் ஆயுதப் படைகளின் அடக்கு முறையையும், மறு புறம் அரச இனவாத ஒடுக்குமுறையுமாக ஒரு புரட்சிகரமான புறநிலையை எதிர்கொண்டு நின்ற இளைஞர் சமூகம், காந்தியத் தத்துவத்தில் நெறிக்கப்பட்ட சாத்வீக அரசியல் வழிமுறையைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டது" என்று பாலசிங்கமே சுட்டிக் காட்டுகின்றார்.

எழுபதிகளின் முற்பகுதியில் தமிழ் அரசியல் அரங்கில் வெடித்த தமிழ் இளைஞர்களின் இந்த அரசியல் வன்முறைப் போக்கே புரட்சிச் சிந்தனையே பின்னர் ஒழுங்கமைவான எதிர்ப்பு இயக்கமாக வடிவெடுத்தது.

இந்த எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்திய பிதாமகராகவே இராஜகுருவாகவே தமிழ்த் தேசிய அரசியலுக்குள் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்தின் வருகையும், எழுச்சியும் இடம்பெற்றிருக் கின்றன.

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான வன்முறைப் போராட்டத்துக்கு நியாயமான அரசியல் வடிவம் கொடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் எழுந்த வேளை அந்த வராலற்றுப் பணியைத் தம் தோள் மீது சுமக்க முன்வந்த அறிவுசார் ஆர்வலராக ஈழத் தமிழர்களின் அரசியலில் என்றும் முன்னிலைப் படுத்தப்படுவார் பாலா.

அப்பணியை மற்றெவரும் இயற்ற முடியாத அளவுக்கு ஒப்புயர்வாகத் தேசிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் பலமாகவும், வலுவாகவும் ஆற்றிய ஆத்ம திருப்தியுடன் இப்போது மீளாத்துயில் கொண்டிருக்கிறார் புதிய சகாப்தம் படைத்த அன்டன் பாலசிங்கம்.

நன்றி: உதயன், Dec 16, 2006

Please Click here to login / register to post your comments.