பாலாவின் பேரிழப்பால் ஆறாத்துயரில் தமிழ் மக்கள்

ஈழத் தமிழர் வாழும் இடங்களில் 3 தினங்கள் துக்கம் அனுஷ்டிக்க அழைப்பு.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவையொட்டி தமிழர்களின் தாயகப் பகுதிகளிலும் உலககெங்கும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் மூன்றுநாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இருதயக் கோளாறு, பழுதடைந்த இரு சிறுநீரகங்களுக்குப் பதிலாக போராளி ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற சிறு நீரகங்கள், 35 வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கம், நேற்று முன்தினம் வியாழக்கிழமை லண்டன் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் (இலங்கை நேரம் இரவு 7.15 மணி) புற்றுநோயால் மரணமானார்.

அன்னாரது மறைவுச் செய்தி வெளியானதும் தாயகத் தமிழர்களும் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் பெரும்சோகத்தில் மூழ்கினர்.

அன்னாரின் ஈடுசெய்ய முடியாத இழப்பையொட்டி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் மனமுருகி தனது மிகப்பெரும் துயரத்தை வெளிப்படுத்தியதுடன் `தேசத்தின் குரல்' என்ற கௌரவப் பட்டத்தையும் சூட்டியிருந்தார்.

அத்துடன், கலாநிதி பாலசிங்கத்தின் மறைவையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை தமிழர்களின் தாயகப் பகுதியிலும் புலம்பெயர்ந்து ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் மூன்று நாட்கள் துக்கதினமாகவும் அறிவிக்கப்பட்டது.

பாலசிங்கத்தின் மறைவையொட்டி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி உட்பட தமிழகத் தலைவர் பலர் தங்கள் அஞ்சலிச் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.

கலாநிதி பாலசிங்கத்தின் மறைவு தமிழர் தாயகம், புலம்பெயர் நாடுகள் மட்டுமல்லாது தமிழகத்திலும் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செய்தி ஸ்தாபனங்களும் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்தும் அதனால், ஏற்பட்டுள்ள பெரும் வெற்றிடம் குறித்த செய்திகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

உலக நாடுகள் எங்கும் வாழும் தமிழர்கள் பாலசிங்கத்தின் மறைவையொட்டி மூன்றுநாள் துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு உலகத் தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பாலசிங்கத்தின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை லண்டனிலுள்ள அலெக்ஸாண்ரா மண்டபத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படுமென இறுதிக் கிரியைக்கான ஏற்பாட்டுக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைமையோடும் பாலசிங்கத்தின் துணைவியாரோடும் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்படி பாலசிங்கத்தின் பூதவுடல் 20 ஆம் திகதி காலை, லண்டன் நேரப்படி 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை அலெக்ஸாண்ரா மண்டபத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்

அதேநாளில் தாயக நேரம் மாலை 4 மணிக்கு தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அன்னாருக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினத்தன்று லண்டன் அலக்ஸாண்ரா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கூடுவரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இதேநேரம், பாலசிங்கத்தின் மறைவால் தமிழர் தாயகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

வன்னியில் அனைத்துப் பகுதிகளிலும் கறுப்புக் கொடிகளும் சிவப்பு- மஞ்சள் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

முக்கிய சந்திகள், முக்கிய இடங்களிலெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் சோக கீதங்கள் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்ததுடன் பாலசிங்கம் முன்னர் ஆற்றிய உரைகளும் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.

வீதிகள், முக்கிய சந்திகள், புலிகளின் அலுவலகங்கள், பொது இடங்களிலெல்லாம் பாலசிங்கத்தின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டும் வருகிறது.

கிழக்கு மாகாணத்திலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எங்கும் பெரும் சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

யாழ். குடாநாடு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளிலும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள், காரியாலயங்களிலும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. வன்னியில் மிகப்பெரும் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினக்குரல், Dec 16, 2006

Please Click here to login / register to post your comments.