கலாநிதி அன்ரன் பாலசிங்கம்

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக அளப்பரிய பங்காற்றிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கத்தின் மறைவினால் தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகிற்கு எடுத்தியம்பும் பணியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாது முன்னெடுத்து வந்த கலாநிதி பாலசிங்கத்தின் மரணம், இலங்கை இன நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னென்றுமில்லாத வகையில் இடரார்ந்த சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் இடம் பெற்றிருப்பது இரட்டிப்பு வேதனையைத் தருகிறது.

ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற விடுதலைப் புலிகளின் ஆலோசகராகவும் பிரதம பேச்சாளராகவும் கலாநிதி பாலசிங்கம் விளங்கி வந்திருக்கின்ற அதேவேளை, அவரை ஒப்பீட்டளவில் மிதவாதப் போக்குடையவராக இராஜதந்திரிகளும் பெரும்பாலான அரசியல் அவதானிகளும் வர்ணிப்பதை நோக்கும் போது ஆயுதப் போராட்டத்தை அரசியல் களரிக்கு கொண்டு வருவதற்கு, ஆயுதப் போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்கு அவர் ஆற்றிய பணியின் கனதியை தெளிவாக உணரக் கூடியதாக இருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் முன்னெடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற தற்போதைய சூழ்நிலையில், ஆயுதப் போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச அரங்கில் ஆதிக்கம் பெற்றிருக்கக் காணப்படும் எதிர் நிலைப்பாடுகளுக்கு மத்தியில் விடுதலைப் புலிகளின் ஆலோசகராக இருந்து கொண்டு அவர்களினால் தமிழ் மக்கள் சார்பில் முனைப்புறுத்தப்படுகின்ற அரசியல் நியாயப்பாடுகளுக்காக உலக அரங்கில் குரல் கொடுக்கின்ற ஒரு சிக்கலான பணியை தனது அறிவாற்றலாலும் இராஜதந்திர சாதுரியத்தாலும் இறுதிவரை சளைக்காமல் முன்னெடுத்தமையே கலாநிதி பாலசிங்கத்தின் பங்களிப்புகளின் உச்சம் என்று கூறலாம்.

தான் கலந்து கொண்ட சகல பேச்சுவார்த்தைகளிலும் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் அவர்களின் அரசியல் பிரச்சினைகளையும் இடர்பாடுகளையும் தெளிவாகவும் துணிச்சலுடனும் எடுத்தியம்பியதன் மூலமாக சர்வதேச சமூகம் இலங்கை நெருக்கடி மீது தீவிர கவனத்தைச் செலுத்துவதற்கு வழி வகுத்ததில் கலாநிதி பாலசிங்கத்தின் சேவை தமிழர் வரலாற்றில் என்றுமே நினைவு கூரப்படும்.

விடுதலைப் புலிகளின் வரலாற்றில் கலாநிதி பாலசிங்கம் வகித்து வந்த பாத்திரத்தை ஆராய்ந்த சில அவதானிகள் அவரின் மறைவு அந்த இயக்கத்தைப் பொறுத்தவரை நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை தோற்றுவித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

மேற்குலகில் அவரது செல்வாக்குடன் கூடிய பிரசன்னமும் வெளியுலக அரசியல் பற்றிய அவரது புலமையும் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை ஒருபெரும் சொத்தாகவே விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், இலங்கையின் சமாதான முயற்சிகளின் அனுசரணையாளர்களான நோர்வே தரப்பினருடனும் அம்முயற்சிகளில் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்ற ஏனைய முக்கிய சர்வதேச சக்திகளுடனும் வளமான தொடர்பாடலுக்கான பிரதான கருவியாகவும் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் விளங்கி வந்தார்.

தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் சரித்திரம் தன்னிடம் வேண்டிநின்ற பணியை அவர் துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் செய்தார். அத்தகைய ஒரு மனிதரின் இழப்பு எமக்கு பெரும் வேதனையைத் தருகிறது.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்த பின்னரும் கூட, தான் நேசித்த மக்களினதும் மண்ணினதும் மேம்பாட்டுக்காக உழைப்பதற்கு இறுதிவரை தன்னை அர்ப்பணித்தவர் கலாநிதி பாலசிங்கம்.

கடந்தமாதம் அவர் புற்றுநோயினாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நீண்ட நாட்கள் தான் வாழப்போவதில்லை என்பதை அவர் நன்குணர்ந்து கொண்டார்.

அவ்வேளையில் கூட, அவர் தனது மக்களுக்காக பாடுபட தன்னால் இயலாமல் இருக்கிறதே என்றுதான் வேதனைப்பட்டார்.

இறுதியாக அவர் தனது நோய் குறித்து பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துகள் இவை;

`இது ஒரு துரதிர்ஷ்டவசமான தனிப்பட்ட இடர். எனது மக்கள் கூட்டாக அனுபவிக்கின்ற கடலளவு அனர்த்தத்துடன் ஒப்பிடும் போது எனது நோய் வெறுமனே ஒரு கூழாங்கல். என்னை முடமாக்கியிருக்கும் இந்த நோய் காரணமாக, எனது மக்களின் கஷ்டங்களையும் அவர்கள் மீதான ஒடுக்கு முறையையும் போக்குவதற்கு பயனுடைய முறையில் எதையாவது செய்வதற்கு என்னால் இயலாமல் இருப்பது எனக்கு ஆழ்ந்த கவலை தருகிறது.'

Please Click here to login / register to post your comments.