ஜீ.ஜீ. இலங்கையின் ஆதிடிகள் தமிழர் கிளையே

இலங்கைத் தமிழரை ஏதோ அந்நியர்கள் போல் சுதந்திரத்தின் பின்னர் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் கருதி வந்துள்ளன. ஒரு சில தமிழ் அமைச்சர்களை அத் தமிழ் அமைச்சர்களின் சொந்தக் காரணங்களுக்காகவும் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் தம்மைத் தரமானவர்கள் என்று தரணியெங்கும் தம்பட்டம் அடித்து அடையாளம் காட்டலாம் என்ற காரணத்திற்காகவும் அமைச்சர் அவைகளில் சேர்த்துக் கொண்ட போதிலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்று ஆராய்ந்து அதற்குப் பரிகாரந் தேட வேண்டும் என்ற எண்ணம் மேற்படி அரசாங்கங்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல. தாம் விரும்பி ஏதாவது சலுகைகளைத் தந்தால் அவற்றை ஏற்று இவ்வளவு கிடைத்து விட்டதே என்று பெருந் தன்மையுடன் வாழாது முரண்டு பிடித்து சிங்களவரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறுஞ் சிங்கள அரசியல் வாதிகளும் உளர். அண்மைக் காலங்களில் பல தடவைகள் சிங்கள அரசியல் வாதிகள், முக்கியமாக பௌத்த பிக்கு அரசியல் வாதிகள், தமிழர்களுக்கு அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது. வடக்கு - கிழக்குக்கு வெளியே இருக்குந் தமிழ் மக்கள் சிங்களவருடன் ஒற்றுமையாக சமூகத்துடன் ஒன்று கூடி வாழ்கின்றார்களே, அப்படியிருக்க என்ன இந்த வேண்டாத கோஷங்களும் கிளர்ச்சிகளும் என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.

பிரச்சினைகள் இவை தான் என்று கூறத் தலைப்பட்டால் நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறி பேச்சை முடிவுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். இலங்கைத் தமிழர்களை பல விதங்களில் அரசாங்கங்களும் அரச அலுவலர்களும் வெகுவாக அவமானப்படுத்துகிறார்கள். படுத்தியும் வந்துள்ளார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. என் தந்தை தாயாருக்குரிய அவர்களின் சொந்த வீட்டுக்கு நான் வரும் போது என் சகோதரன் "உனக்கிங்கு என்ன வேலை?" என்று கேட்டால் எனக்கு எப்படி இருக்கும்? அவ்வாறு தான் இன்று நடக்கிறது. 1939 இல் ஜீ.ஜீ. பேசும் போது தமிழரின் மனத் தாக்கம் பற்றிக் குறிப்பிட்டார் பின்வருமாறு;

"நாங்கள் (தமிழர்கள்) இந்த நாட்டின் வாழுநர்கள். நாங்கள் இங்கு தான் தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம். எங்களின் ஒரு கிளை இந்த நாட்டில் சிங்களவர் காலத்துக்கு முன்பிருந்தே குடியிருந்து வருகிறது. இது தான் எங்கள் வாழ்விடம். அரசியல் ரீதியாகவும் வேறு வழிகளிலும் இந்த நாட்டில் எமக்கும் சிங்கள மக்கள் போல் நிரந்தர உரித்துகளும் நிலை பெற்ற உரித்துகளும் உண்டென்று கூற சகல உரிமைகளும் உண்டு. விரும்பத்தகாத விரோத அயலார் போல் எங்களைக் கையாள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தடுப்பு முகாம்களில் தனித்து வாழ வைத்து மத்திய ஐரோப்பாவில் யூதர்களை நாட்சி நாடுகள் நடத்துவது போல் எங்களை நடத்த நாம் அனுமதிக்கப் போவதில்லை"

இந்தக் கருத்துரையில் இரண்டு முக்கிய விடயங்களைக் கண்ணூறலாம். ஒன்று தமிழர்களின் ஒரு கிளையேனுஞ் சிங்களவர்கள் இந்நாட்டில் நிலைக்க முன்பிருந்தே இங்கு இருந்து வந்துள்ளார்கள் என்பது. இரண்டாவது அன்றிருந்த ஆங்கில ஆதிக்க சூழலில் அனைவரும் சமமே என்ற பொதுக் கருத்தொருமைப் பாட்டுப் பின்னணியில் வடக்கு- கிழக்கிற்கு மட்டும் விசேட சலுகைகள் தர வேண்டும். அங்கு தமிழர்களைச் செறிந்து தனித்து வாழ வைக்க வேண்டும் என்று கோர அவர் மனம் இடமளிக்கவில்லை. சுதந்திரமாக இலங்கை எங்குந் தமிழர்கள் போய்வர வேண்டும். இன அடிப்படையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்று கருதியே அவர் அவ்வாறு கூறினார்.

"நாங்கள் எல்லோரும் ஒரே தன்மைத்தாய ஓர் இன மக்கள் அல்ல. எங்களுள் வித்தியாசங்கள் வேற்றுமைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், வேற்றுமைகளைப் பிரதிபலிக்கும் சமூக அலகுகள் ஒவ்வொன்றினதும் உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டால் தான் இந்த நாடு உருப்படும். அப்பொழுது தான் நாட்டு மக்கள் அனைவரும் நன்மை அடைய முடியும்' என்றார் ஜீ.ஜீ. அவர்கள்.

இந்நாட்டுக்குத் தன்னாட்சி கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நாங்கள் எங்கள் சிங்களச் சகோதரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. ஆனால், தன்னாட்சி வேறு; ஒரு குழு ஆட்சி வேறு இங்கு ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஆட்சியைக் கைப்பற்ற எத்தனிக்கின்றார்கள் என்று கூறிக் குறைப்பட்டுக் கொண்டார் ஜீ.ஜீ. அவர்கள். நிறைவேற்றுக் குழு நடைமுறையின் கீழ் சிங்களவர் மட்டும் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்தே மேற்படி கருத்தை வெளியிட்டார். காரிருளில் காரியத்தைச் சாதிக்க அரவாமல் அறிவுரைகளை அந்நிய அரசாங்கத்திற்கு அனுப்பிவிட்டு அவை பற்றி இப்பொழுது அலசி ஆராய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர்கள் கூறியதை வெகுவாகக் கண்டித்தார் ஜீ.ஜீ. அவர்கள். ஆளுநருக்கு அவர்களாகவே அறிவுரைகள் அந்தரங்கத்தில் வங்கி பெரும்பான்மை இனத்தவர்க்கு வேண்டியவற்றைச் சாதிக்க விழைந்ததை இந்நாட்டின் அப்பாவிச் சிறுபான்மையோருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்ற வகையில் ஜீ.ஜீ. அவர்கள் அன்றைய அரசாங்கத்தைச் சாடினார்.

டொனமூர் ஆணையாளர்களின் சிபார்சுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையால் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிப் பேசினார் அவர். சிங்கள ஆதிக்கம் நிறைந்த அமைச்சர் அவை ஆளுநருக்கு அனுப்பிய அறிவுரைகளை அங்கத்தவர்களுடன் அளவளாவுவது ஆங்கிலேயே அரசாங்கத்துக்கு அனுப்பியமை எத்தகைய ஒரு அடாத செயல் என்பதைச் சுட்டிக் காட்டினார். அரசியல் யாப்பின் படி குடியேறிய நாடுகளின் செயலாளருக்கு ஆளுநர் ஏதாவது குடியேற்ற நாடுகள் சம்பந்தமான அறிவுரைகளை அனுப்புவதாகில் அவற்றை அமைச்சரவை தீர்மானித்து, அரசு சபை அங்கீகரித்து அதன் பின்னரே அவரால் அத்தகைய அறிவுரைகள் அனுப்பப்பட வேண்டும் என்று விபரிக்கப்பட்டிருந்தன. அதற்கு மாறாக அமைச்சர் சபை ஏன் கபடத்தனமாக ஆளுநருடன் அந்தரங்கப் பேச்சுகளை வைத்து அவர் மூலம் செயலாளரை ஏன் தமது கோரிக்கைக்கு இசைய வைக்கப் பார்த்தார்கள் என்று வினவினார்.

இத்தனை விபரமாக ஜீ.ஜீ. கூறிய மேற்கண்ட விடயங்களை வாசகர்களுடன் கவீரன் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க தமிழர்களின் நியாயமான உரித்துகளைக் கொடாதிருக்க, அவர்கள் அரசியல் அரங்கில் அதிகூடிய பதவிகளை வகிக்க இடங்கொடாதிருக்க சிங்கள மக்கட் தலைவர்கள் அப்பொழுதிருந்தே கங்கணங்கட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் கூறவே, ஜீ.ஜீ. அவர்கள் அன்று கூறிய விடயங்கள் இன்றும் எவ்வளவு உண்மையென்று சுட்டிக்காட்டவே இவ்வாறு எடுத்தியம்பியுள்ளேன்.

உண்மையான ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சிங்களத் தலைவர்கள் கருதியிருந்தால் தமிழர்களின் முதுகுக்குப் பின்னால் பல காரியங்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்பதை திட்டவட்டமாக எடுத்துக் காட்டினார். ஜீ.ஜீ. அவர்கள் தமது தொடர் ஓட்ட நீண்ட பேச்சில். இனங்களிடையே சந்தேகம் முளைக்காதிருந்தால் பல் இனங்களுக்கும் போதிய ஒப்புரவும் அடையாளங் காணலும் அரவணைப்பும் காட்டப்பட்டிருந்தால் மக்கள் இன ரீதியில் நாட்டின் பொருளாதார அரசியல் வளர்ச்சியில் கூடிய கரிசனை காட்டி இருப்பார்கள். ஆனால், நடந்ததென்ன? நல்ல பொருளாதார நிலையில் இருந்த இலங்கையைக் குட்டிச் சுவராக்க மேற்படி தனிச் சிங்கள இனத்துவ எண்ணங்கள் இடமளித்தன. செய்வதையும் செய்து விட்டு தமிழர்கள் தான் இனத்துவத்தைக் கிளப்பி விட்டார்கள் என்று இன்றும் சிங்கள அரசியல் வாதிகள் கூறுவது சிரிப்பைத் தருகிறது.

எதற்காகச் சிங்களவரிடையே தமிழர்கள் பேரில் அரசியல் ரீதியாக நியாயான மனப்பான்மை குன்றிக் கிடக்கின்றது என்று ஆராய்ந்தால் முதலாவது தென் இந்தியாவின் 6 கோடித் தமிழ் பேசும் மக்கள், இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து தென் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர வழி வகுத்து விடுவார்களோ என்ற பயம். இரண்டாவதாகச் சிங்களவர் தொகை உலகத்தில் மிகச் சொற்பமே என்றதால் கூடுமானவரை அதிகாரங்களைச் சிங்களவர் தமது கைவசம் வைத்திருந்தால் தான் இந்நாட்டின் கூடிய நில விஸ்தீரணத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அதிகாரம் இல்லையென்றால் தமிழர்கள் வடக்குக் கிழக்கில் இருக்கும் இடங்களையும் வேறு இடங்களையும் ஆக்கிரமித்து விடுவார்கள் என்றதுமான பயம். மூன்றாவதாக மகாவம்சச் சிந்தனை. நாடு எமக்கே சொந்தம், மற்றவர்கள் வந்தேறு குடிகள் என்ற இயற்றப்பட்ட இனத்துவவாதம். நான்காவதாக அதிகாரம் கையில் கிடைத்து விட்டால் அதனைப் பங்குபோட முன்வராத மனிதக் குறைபாடு. இப்படி பல காரணங்களைக் கூறலாம். ஆனால், அடிப்படையாக ஒரு விதப் பயமே அவர்களை ஆட்டிப் படைப்பதாகத் தெரிகிறது. பல விடயங்களில் தாராள மனப்பான்மை காட்டும் சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்த வரையில் மிகக் கடினமான மனதுடனேயே செயல்படுகின்றனர். சொல்லுவதொன்று; செயலோ இன்னொன்றாகவே ஜீ.ஜீ. காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவருகிறது. அதிகாரங்களைத் தம்முடனேயே வைத்திருக்க தகாத நடவடிக்கைகளிலும் ஈடுபடப் பின்நிற்க மாட்டார்கள் சிங்களத் தலைவர்கள் என்று தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் ஆசனங்கள் 60 க்கு மேல் செல்லக் கூடாது என்று அமைச்சரவைத் தலைவரும், ஆளுநர் கல்டேகொட் 10 ஆசனங்கள் மட்டும் மேலதிகமாகக் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டதில் இருந்து ஆளுநரைத் தம்வசம் ஆக்கிக் கொண்டார்களோ அமைச்சரவையினர் என்று அங்கலாய்த்தார் ஜீ.ஜீ. அதாவது முன்னைய அரசு சபையின் சிங்களப் பிரதிநிதிகளுக்கிருந்த மேலதிக வாக்குகளைக் குறைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். சிங்களப் பிரதிநிதிகள். அதற்கு ஆளுநர் துணை போனார். அதிகாரம் எப்படியோ கைக்குக் கிடைத்து விட்டது. இனி அதை நழுவவிடக் கூடாது என்ற விதத்திலேயே சிங்கள மக்கட் தலைவர்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்துவருகின்றனர்.

டொனமூர் அரசியல் யாப்பு ஏற்படுத்திய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளுநருக்கு ஏற்பட்டது. ஆனால், இரண்டாயிரம் உலக மகா யுத்தம் அப்பொழுது நடந்து கொண்டிருந்தது. அடுத்த கட்டமாக சோல்பெரி ஆணைக்குழு நியமிக்கப்படவிருந்தது. அது பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம்.

Please Click here to login / register to post your comments.