உலகம் வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் பெருமையையும் பெறுமதியையும் தேடித் தந்தவர் `பாலா'

    புயலின் மையமாய் புதுமைகள் படைத்தவர் மாமேதை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று யாழ். மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. அவர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் என்றும் எப்போதும் நீங்காத நினைவுகளாக காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள் என்று தமிழீழத் தேசியத் தலைவரின் அரசியல் சித்தாந்தத்தை நெஞ்சமதில் நிறுத்தி அந்த வாழ்க்கையின் வழிநின்று வாழ்ந்து, வழிகாட்டியவர் செந்தமிழ்ச் செம்மல், "தேசத்தின் குரல்" மானிடத்தின் மாமேதை அமரர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்.

தாயகத் தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வரித்துக் கொண்டு அந்த உயரிய இலட்சியத்திற்காக பெரும் பணியாற்றிய ஒரு உன்னதமான உயர்ந்த மனிதனை இயற்கை பலிகொண்ட செய்தி, தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஆழ்மனதில் ஒரு பூகம்ப அதிர்வாகவும் தமிழ்த் தேசிய ஆன்மாவை ஒரு உலுப்பு உலுப்பியிருக்கின்றது.

நித்தம் நித்தம் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சாவையும் சவால்களையும் சந்தித்து வாழும் எம் மக்களை இது மீளாத்துயரங்களுக்குள் தள்ளியுள்ளது. தேசத்தின் விடியலுக்கு கட்டியம் கூறிய கண்ணியமானவர். இவரது இழப்பானது நான்கு பேர் இலேசாகப் பேசுகின்ற அல்லது நான்கு பேர் இலகுவாகக் கூறுகின்ற இழப்பல்ல. மனித வரலாற்றின் ஈடு இணையற்ற இமாலய இழப்பாகும்.

கொண்ட கொள்கையில் தெளிவும், தளராத இலட்சிய உறுதியும் தீர்க்கதரிசனமான பார்வையும் சமூகவியல் கண்ணோட்டமும் ஆழமான மக்கள் நேயமும் அவரின் ஆளுமையை ஆட்கொண்டு புயலின் மையமாக நின்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆழமான ஆலோசனைகளை வழங்கியவர்.

அறிவும் ஆற்றலும் புலமையும் புதுமையும் ஆளுமையும் அஞ்சாமையும் கொண்ட அற்புதமான மாமேதை. எவரையும் கவரும் சக்தி, எந்த விடயத்தையும் புரிந்து கொள்ளும் புத்தி, எதையும் தாங்கும் இதயம். இதனாற்றான் இன்று உலக அறிஞர்களின் மூதறிஞராக சொல்வாக்கிலும் செல்வாக்கிலும் தமிழீழ மக்களுக்கு மட்டும் இன்றி, உலகவாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் பெருமையையும் பெறுமதியையும் தேடித் தந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.