பெறுமதி வாய்ந்த நண்பனை இழந்து விட்டது நோர்வே - பாலாவின் மறைவுக்கு பௌர் கவலை

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மறைந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் சமாதான முயற்சிகள் தொடர்பாக அவர் ஆற்றியிருக்கும் அளப்பரிய பங்களிப்பினைப் பராட்டியுள்ள நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஜோன் ஹன்சன் பௌர் நோர்வே நண்பனை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவின் தமிழ் வள மற்றும் ஆலோசனை நிலையம் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ள பௌர் அன்ரன் பாலசிங்கத்தின் மூலமாகவே இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் ஆளுமையும் பேச்சுவார்த்தை மேசையிலும் சமாதான முயற்சிகளிலும் அவர் வெளிப்படுத்திய பொதுவான புரிந்துணர்விற்கான யதார்த்த பூர்வமான அணுகு முறையும் நோர்வேயின் அனுசரணையாளர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்ததாகவும் பௌர் தெரிவித்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்திற்கு பல நண்பர்கள் இருந்தார்கள். அவரது மனவுறுதிக்காக அவரை மதிக்காத எவரையும் தமிழர்கள் மத்தியிலும் சிங்களவர்கள் மத்தியிலும் கண்டதில்லை எனவும் பௌர் தெரிவித்துள்ளார்.

ஹன்சன் பௌர் தான் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட முதலாவது விஜயத்தின் போது தத்துவாசிரியர் என்ற வகையில் அவரது சிந்தனைகளை செவிமடுத்ததாகவும் மத்திய ஐரோப்பிய வரலாற்றின் சமாதான முயற்சிகள் குறித்த அவரது அறிவினை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கம் ஒரு தத்துவாசிரியர். ஐரோப்பாவின் முக்கிய சிந்தனையாளர்கள் பற்றியும் அவர்களது தத்துவம் மற்றும் சமாதான முயற்சிக்கான அணுகுமுறை குறித்தும் அவருடன் ஆராய்வதில் மகிழ்ச்சியடைந்தோம் எனவும் பௌர் குறிப்பிட்டுள்ளார்.

1970, 80 கள் பற்றியும் பின்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் வெற்றியடையாத ஐந்து சுற்றுப் பேச்சு வார்த்தைகள் பற்றியும் அவரால் கருத்துரைக்க முடிந்தது. அதேவேளை, அவர் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான அணுகுமுறை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதையும் சொல்வார்.

அவர் அனுபவம் வாய்ந்த மனிதர் மாத்திரமல்ல, பேச்சுவார்த்தை பயிற்றுவிப்பாளர் என்றும் பௌர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் விடுதலைப் புலிகள் தமது தலைமை பேச்சுவார்த்தையாளரை இழந்து விட்டனர். தமிழ் மக்கள் தமது மிகவும் முக்கிய பேச்சாளரையும் தமிழ் மக்களின் உரிமைகளை வலுவாக முன்னிறுத்திய அவர்களுக்காக நின்று தோற்கடிக்க முடியாத ஒருவரையும் இழந்துள்ளார் என்றும் பௌர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பனையும் கட்டம் கட்டமாக மிகவும் சவால்களுடன் எழுப்பப்பட்ட சமாதான கட்டிடத்தின் முக்கியமான தூணையும் இழந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்ததாகவும் அவர் மிகவும் இரக்கமுள்ள மென்மையாகப் பேசும் மனிதன் என்பதைப் பின்னர் புரிந்து கொண்டதாகவும் ஒஸ்லோவின் அரச மருத்துவமனையின் தலைமை மருத்துவர் போ.போச்சலட் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்திற்கு சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்ட இவர் அவர் மிகவும் பொறுமை வாய்ந்த, முறைப்பாடு செய்யாத, சரியான கேள்விகளைக் கேட்டு சரியான முடிவிற்கு வந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் மிகவும் மதி நுட்பமான ஆய்வு செய்யும் மூளை தமிழ் மக்களுக்கு பொருத்தமான பேச்சாளராக்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமாதான முயற்சிகளுக்கான தமது தலைவிதியில் தமிழ் மக்கள் பாலசிங்கத்தினை நம்பினார்கள் என ஒஸ்லோவின் தொழிற் கட்சியின் பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கடும் போக்கு சிங்களவர்களால் சமாதான உடன்படிக்கை தோல்வியடைந்தது. பலவீனமான யுத்த நிறுத்த உடன்படிக்கை மாத்திரமே நீடிக்கின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் மகிந்த ராஜபக்ஷவும் தமிழர் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பதை நிராகரித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please Click here to login / register to post your comments.