பாலாவின் மறைவுக்கு விஜயகாந்த் அனுதாபம்

விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக திகழ்ந்தவரும் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொண்டவரும் சிறந்த அரசியல் அறிவு படைத்தவருமான அன்ரன் பாலசிங்கம் மரணமடைந்ததை அறிந்து மன வருத்தம் அடைகின்றேன்.

இலங்கை தமிழர் தீர்வுக்கான பேச்சுவார்த்தை பூட்டான் தலைநகர் திம்பு, ஜெனீவா ஆகிய இடங்களில் நடந்தபோது மறைந்த பாலசிங்கம் கலந்து கொண்டார். பின்பு உடல்நலக் குறைவு காரணமாக அப்பணியை தொடர்ந்து செய்ய இயலாத நிலையில் சிகிச்சைக்காக லண்டன் திரும்பினார். இலங்கை, நோர்வே தூதுக்குழுவினருடன் நல்ல உறவு வைத்திருந்தார். இந்நிலையில் அவரது மறைவு இலங்கை தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மனைவி, இயக்கத்தினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Please Click here to login / register to post your comments.