இன நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர் `பாலா'

ஆக்கம்: வேலணை வேணியன்
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் லண்டனில் மறைந்து விட்டார் எனும் செய்தி உலகெல்லாம் பரவிப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் உள்ளங்களை துன்பம் நெருடிப் பிழிந்து வாட்டிக் கொண்டே இருக்கிறது. இன்னும் மேலாக அவர் மறைவு இலங்கை வாழ் தமிழ் மக்களை ஆறாத் துயரில் மூழ்கடித்துவிட்டது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக மூன்று தசாப்தங்கள் உண்மையுடனும் உறுதியுடனும் மிக விசுவாசத்துடனும் கடமையாற்றி வந்த மாமலை சரிந்து விட்டதாகவே நாம் தமிழர்கள் கருதுகின்றோம். அவரது அருமைத் துணைவியார் அடேல் பாலசிங்கம் `அரசனுக்கு ஏற்ற அமைச்சராக விளங்கினார். சிறந்த தத்துவ ஆசிரியராக விளங்கி தத்துவரீதியாக உலகத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அனைவரும் தமிழ் மக்களின் துன்பகர நிலைகளையும் சுயாட்சி பெறவேண்டிய தேவைகளையும் தயங்காது பல்வேறு மேலை நாட்டு அரசியல் பிரமுகர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறிவந்த மிகத் துணிவான தலைவனே கலாநிதி அன்ரன் பாலசிங்கம் என்பதனை உலகெலாம் பரந்து வாழும் தலைவர்கள், இராஜதந்திரிகள் உணர்ந்துள்ளார்கள்.

அதே நேரத்தில், அவரின் மறைவின் பின்னர் தங்கள் அனுதாபச் செய்திகளில் தெரிவித்து வருகிறார்கள். நாம் வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழ் வாழ்ந்தால் நாம் வாழ்வவோம் எனும் அசையா நம்பிக்கை கொண்ட ஒரு பெருந்தலைவன் தான் பாலா.

இன்று அவர் தம் மறைவால் எம்முடன் தொப்புள் கொடியுறவு கொண்டுள்ள தமிழர் அரசியல் தலைவர்களே ஆறாத்துயரில் மூழ்கி நிற்கின்றார்கள். அவர்களோடு கூட தமிழ் நாட்டு மக்களுமே துன்பக் கடலில் ஆழ்ந்து நிற்கிறார்கள்.

முதலமைச்சர் டாக்டர் மு.கருணாநிதி, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சிக் கழகத் தலைவர் வை.கோ, டாக்டர் இரா. ஜனார்த்தனன் போன்ற பல்வேறு தமிழர்களும் இன்று தங்கள் அனுதாபச் செய்திகளை மிக உருக்கமாக வெளியிட்டு வருகிறார்கள். நோர்வே நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தனது ஆதங்கத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. உலகெலாம் இருந்து லண்டனுக்கும் இலங்கைக்கும் செய்திகள் குவிந்த வண்ணமே இருக்கிறன.

பாலா அவர்கள் 1960களில் `வீரகேசரி'யில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் நண்பர் பாலா அவர்களுடன் அந்த தாபனத்தில் எனக்கும் பணி புரியும் சந்தர்ப்பம் கிடைத்ததைப் பெரும் பேறாகக் கருதுகிறேன். அப்போது வீரகேசரியில் பிரதம ஆசிரியராக கே.வி.எஸ். வாஸ், செய்தி ஆசிரியராக வெங்கட்ராமன், பிரதம உதவி ஆசிரியராக டேவிட்ராஜ், உதவி ஆசிரியராக எஸ். நடராஜா கடமையாற்றினார்கள்.

தனது உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது பாலா அவர்கள் தமிழ் மக்களின் விடிவுக்காக இறுதி வரை உழைத்து வந்தார். பாலா சிங்களச் சகோதரர்களுக்கு எதிரானவரல்லர். இலங்கையின் இனப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார். வாழு, வாழ விடு என்ற சிந்தனைப் போக்குடையவர். `தேசத்தின் குரல்' பாலாவின் ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போமாக.

நன்றி: தினக்குரல், Dec 18, 2006

Please Click here to login / register to post your comments.