பேரிழப்பு!

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
உலகத் தமிழ் இனத்திற்கும், அதிலும் குறிப்பாக ஈழத் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பு அத்தகையதொன்று எனக் கூறுவது மிகையானதொன்றல்ல.

'எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளில் எமக்குப் பக்க பலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது" என்னும் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் வார்த்தைகளே அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தேசத்திற்காக ஆற்றிய காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தப் போதுமானதாகும்.

கடந்த நூற்றாண்டின் எழுபதுகளின் பிற்பகுதியில் லண்டனில் இருந்து தமிழகம் வந்து தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் இணைந்து செயற்படத்தொடங்கியதில் இருந்து லண்டனில் அவர் தனது இறுதி மூச்சைவிடும் வரையில், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் பற்றுறுதியோடு, தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பன்முகம் கொண்டவர். ஒரு இலக்கியவாதியாக, ஒரு தத்துவாசிரியராக, ஒரு இராஜதந்திரியாக, ஓர் ஆலோசகராகப் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர். தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வை வேண்டிநின்ற அவர் தனது பன்முகத் தன்மையையும் அதற்காகவே அர்ப்பணிப்புச் செய்தவராகும்.

தமிழ் மக்களின் மூன்று தசாப்த கால உரிமைக்கான போராட்டம் பல ஏற்ற இறக்கங்களையும், சவால்களையும் கொண்டது. பல நெருக்கடிகளையும், துன்ப துயரங்களையும் அது சந்தித்ததுண்டு. போராட்டம் மீண்டெழுந்து வருமா? என்ற கேள்வி எழுப்பப்பட்ட காலங்கள் கூட உண்டு. அத்தகைய கால கட்டங்களில் கூடத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்குப் பக்கபலமாக நின்று தனது மதிநுட்பத்தினாலும், அரசியல் இராஜதந்திர நகர்வுகளினாலும் விடுதலைப் போருக்குப் பெரும் பங்காற்றியவர்.

அரசியல் இராஜதந்திர ரீதியில் திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து ஜெனீவாப் பேச்சுவார்த்தை (2006) வரையில் முக்கிய பங்காற்றிய திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள், இராஜதந்திரிகளுக்கு தமிழ்மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தினை நிராகரிக்க முடியாத வகையில் நிலை நிறுத்தியவர்.

சிங்கள அரசியல் தலைவர்களும், இராஜதந்திரிகளும் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லும் முன்பாக கருத்தரங்குகளிலும், அரசியல் வகுப்புக்களிலும் பங்குபற்ற வேண்டும் என்ற நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் சிறந்த இராஜதந்திரியாகவும், மதிநுட்பம் மிக்கவராகவும் செயற்பட்டவராகும்.

இதற்கும் அப்பால், அவர் தனது இளம்பாராயத்தில் இருந்தே, ஒரு பத்திரிகையாளராக, இலக்கியவாதியாக இருந்தவர். அவர் பல இலக்கியக் கட்டுரைகளையும் தத்துவார்த்தக் கட்டுரைகளையும் எழுதியவர். இதேசமயம் அவர் விடுதலைப் போராட்டத்திற்கென ஆற்றிய பெரும் பங்களிப்பாக ~போரும் சமாதானமும்| எனும் நூல் உள்ளது. இதனைத் தவிர ~விடுதலை| உட்பட பல படைப்புக்கள் மேலும் உள்ளன.

அது மட்டுமன்றி திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மனிதநேயமும், மனிதாபிமானமும் மிக்கவர். பழகுவதற்கு இனிமையானவர். தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் அவரை வெகுவாகப் பாதித்தது. தமிழ் மக்களின் துயரம் போக்கப்படுதல் வேண்டும் என்பதற்காக தனது உடல் நிலைகளையும் பொருட்படுத்தாது அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராகும்.

இந்த வகையில், தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ் மக்களின் துயர் துடைப்பதற்காகவும் மூன்று தசாப்த கால அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தேசியத் தலைவர் ~தேசத்தின் குரல்| என்ற உயரிய விருது அளித்துக் கௌரவித்துள்ளமையானது மிகவும் பொருத்தப்பாடானதே. ஏனெனில் அவர் இறுதிவரை தமிழீழ மக்களின் குரலாக உலகெங்கும் ஒலித்தவராகும்.

இதேவேளை, தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமானது மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் நிற்கையில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பானது ஈடுசெய்ய முடியாததொரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதெனக் கூறுதல் மிகையாகமாட்டாது.

நன்றி: ஈழநாதம், Dec 16, 2006

Please Click here to login / register to post your comments.