தமிழருக்கு மட்டுமல்ல...!

ஆக்கம்: ஆசிரியர் தலையங்கம்
'சமாதான முனைப்புக்களில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சிகரம் போன்று செயற்பட்டவர்; அம் மனிதர் உண்மைக்காக வாழ்ந்தவர், எப்பொழுதும் உண்மையே பேசியவர் எந்தக் காரணத்திற்காகவும் அவர் பொய் கூறியது இல்லை" என்ற நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், தலைமை சமாதான செயற்பாட்டாளருமான எரிக் சூல் ஹெய்ம் அவர்களின் கூற்றுக்கள் இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகளில் ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய பாரிய பங்களிப்பை வெளிப்படுத்தும் பிரகடனம் எனக்கூறின் மிகையில்லை.

அதாவது, எரிக் சூல்ஹெய்மின் இக் கூற்றுக்கள் சமாதானத்தின்பால் அரசியல் ஆலோசகர் கொண்டிருந்த பற்றுறுதியையும், அவரின் உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்தும் அறிவிப்பு என்றே கூறலாம்.

அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இனப்பிரச்சினை விடயத்தில் தெளிவானதும், உறுதியானதுமான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தார். இனப்பிரச்சினைக்கு தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்வுகான முடியும் என்று உறுதியாக நம்பினார். அதேசமயம் இனப்பிரச்சினைக்கு மேற்கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இதில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான விடயத்தில் அவரின் நிலைப்பாட்டை எத்தகைய வாதத்தினாலும், எவராலும் வெற்றிகொள்ள முடியாது போயிருந்தது. நோர்வேயின் சிறப்புத் தூதுவரான ஹான்சன் பௌயர் ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள் இதனை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன. 'தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய, யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத சக்தியை இழந்துவிட்டோம்" என்ற அவரது கூற்றுக்களில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் அடித்தளத்தினை உறுதியாகவும், தெளிவாகவும் உலகின் முன்நிலை நிறுத்துவதில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கான தீர்விற்குத் தெளிவான எல்லைக்கோட்டை அவர் சிங்கள ஆட்சியாளருக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவாகவே கோடிட்டுக் காட்டியும் இருந்தார். அதனையே விட்டுச் சென்றுள்ளார் என்றும் கூறலாம்.

ஆனால், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் இதனைக் கருத்திற்கொள்வில்லை. அவர்களின் இனவாதச் சிந்தனை அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால், சர்வதேச சமூகத்திற்கு அதனைப் புரியவைப்பதில் ஷதேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்.

உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பு மீது தடை விதித்திருக்கலாம். அவர்களின் செயற்பாட்டிற்குக் காட்டுப்பாடுகளையும் விதித்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் நியாயப்பாடு அற்றதென்றோ, அது ஒரு பயங்கரவாதப் பிரச்சினை என்றோ எவருமே நிராகரிக்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பதையும், தமிழ் மக்களின் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதனை எவருமே மறுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களின் இனவாதப் போக்கையும் அவர்கள் முற்றாக ஆதரிக்கவில்லை.

இத்தகையதொரு நிலையை உருவாக்குவதில் ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பெரும் பங்காற்றியிருந்தார். இதேசமயம், அவர் சமாதானத்தின் பால் கொண்டிருந்த நம்பிக்கை, அவரின் அறிவு, மதிநுட்பம் என்பனவற்றின் துணையுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும் என்றே சர்வதேச சமூகமும்- குறிப்பாக நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்களும் கருதினர்.

ஆனால், சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களின் வரட்டுத்தனமான சிந்தனை, இனவாதப் போக்கு என்பன இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற வழிமுறைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருந்தது. நோர்வே தரப்பினரின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையைத் தோற்றிவித்தது. இதனால் ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஒத்துழைப்பு பயன்படுத்தப்பட முடியாத தொன்றாகப் போய்விட்டது.

ஆகையினால், இன்று ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவானது. ~சமாதான முயற்சிகளுக்குப் பாரிய பின்னடைவு| என்ற நோர்வே தரப்பின் எதிர்பார்ப்பு அர்த்தமுள்ளதொன்றாகவே கொள்ளத்தக்கது. ஆகையினால், ~தேசத்தின் குரல்| அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பானது தமிழ் மக்களுக்கானதென்பது மட்டுமல்ல, இலங்கைக்கானதும் கூட. அதாவது, இலங்கையில் அமைதியை விரும்பி நிற்போர் அனைவருக்குமானதே ஆகும்.

நன்றி: ஈழநாதம், Dec 17, 2006

Please Click here to login / register to post your comments.