பாலாஞ்சலி

ஆக்கம்: வ.ஐ.ச.ஜெயபாலன்

மேலை அணைகளிலே கிழிந்து
வரண்ட காவேரியாய்
ஈழத் தமிழர் மனம் அழிய
பாலா அண்ணா உன்னை
இயமன் சிறைப் பிடித்தானே

பகைவர் நடுவினிலே
எங்கள் பயணம் முடியவில்லை
காட்டு வழி முன்னே
இருள் பாம்பாய் நெளிகிறதே
அணைந்தது கைவிளக்கு
இனி நாம் ஆற்றுப் படுவதெங்கே.

ஒரேஒரு நெல்லோடும் கனவோடும்
விடுதலைப் பயிர் வளர்த்தாய் இன்று
மரகத வயலாகி உலகெல்லாம்
பொற்க்கதிர் சரிய வைத்தாய்
போய்வா எம் மண்ணின்
சமாதானப் பூங் குயிலே
நாம் உன் முட்டைகளை அடைகாப்போம்

தலைமுறைகள் கடந்து செல்கிறது
எங்கள் காலம்
வழி நெடுக மூத்த தியாகிகளின் சமாதிகளை
அடையாளம் வைத்தபடி.
காலக் குடுவை மணல்
உதிர முன்னே விண்ணில்
ஈழ மணிக்கொடி உயரும் அண்ணே

Please Click here to login / register to post your comments.