பாலாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமம் பல்லாயிரக்கணக்கானோர் இறுதி விடை

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான `தேசத்தின் குரல்' கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் பூதவுடல், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் (இலண்டன் நேரப்படி) வடக்கு லண்டனில் மயானமொன்றில் தீயுடன் சங்கமமானது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கலாநிதி பாலசிங்கம் லண்டனில் காலமானார்.

கடந்த ஐந்து நாட்களாக லண்டனிலுள்ள மலர்ச்சாலையொன்றில் வைக்கப்பட்டிருந்த இவரது பூதவுடல் நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு வடக்கு லண்டனிலுள்ள அலெக்ஸாண்ரா மண்டபத்துக்கு மக்களின் இறுதி வணக்க நிகழ்வுக்காக கொண்டு வரப்பட்டது.

அங்கு இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் குடும்பத்தவர்கள், மிக நெருங்கிய நண்பர்களும் நூற்றுக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்களும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வு முடிவடைந்ததும் கலாநிதி பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. லண்டனில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற அதேநேரம் தாயகப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அலெக்ஸாண்ரா ஹோலின் மத்தியில் பாலசிங்கத்தின் பூதவுடல் பேழை வைக்கப்பட்டிருந்தது. பூதவுடல் பேழையின் நான்கு மூலையிலும், வெள்ளைக் கையுறைகள் அணிந்தும் கறுப்பு உடைகள் அணிந்த தமிழ் செயற்பாட்டாளர்கள் நால்வர் நின்றிருந்தனர்.

இதேநேரம் லண்டனில் நேற்று வழமையை விட மிகக் கடும் குளிர் காலநிலை நிலவிய போதும் பாலசிங்கத்துக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்துவதற்காக செவ்வாய்க்கிழமையே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் லண்டன் வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்தத் தொடங்கினர்.

மலர்வளையங்கள், மலர் கொத்துகள் பாலசிங்கத்தின் பூதவுடல் பேழையை சுற்றி குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் இறுதி வணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவையும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

இறுதி வணக்க நிகழ்வு ஆரம்பமாகி சில மணிநேரத்தில் பல நூற்றுக்கணக்கான மலர்வளையங்களும் ஆயிரக்கணக்கான மலர்க்கொத்துகளும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இறுதி வணக்கத்தை செலுத்துவதற்காக உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வடக்கு லண்டனில் வந்து குவிந்து கொண்டிருந்த அதேநேரம், சுமார் 24,000 பேரையே கொள்ளக் கூடிய அலெக்ஸாண்ரா மண்டபம் முற்பகலே 30,000 க்கும் மேற்பட்டோரால் நிரம்பி வழிந்தது.

பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இளைஞர், யுவதிகள், வயோதிபர்களென பலரும் கண்ணீர் சொரிந்து தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இறுதி வணக்க நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரம் அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த அஞ்சலிக் கூட்டத்தில், இலங்கையிலிருந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், எஸ்.கஜேந்திரன், ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் உட்பட பலரும் உரையாற்றினர்.

உலகெங்கிலுமுள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தனது இறுதி அஞ்சலியை செலுத்தவந்த நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளன், ம.தி.மு.க. செயலாளர் வைகோவின் பிரதிநிதி ஆகியோரும் அஞ்சலி உரையாற்றினர்.

எதிர்பார்த்ததை விட மக்களின் வருகை அதிகமாயிருந்ததால் நண்பகலுக்கிடையில், இறுதி வணக்கம் செலுத்தியவர்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்டபத்திலிருந்து திரும்பிச் சென்றனர்.

இதேநேரம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனியார் விமானங்களையும் `கோச்' (நீண்ட பயணிகள் பஸ்)களையும் வாடகைக்கு அமர்த்தி ஆயிரக்கணக்கானோர் லண்டனுக்கு வருகை தந்து கொண்டிருந்தனர்.

அலெக்ஸாண்ரா ஹோலை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கொண்டிருந்ததால், பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக மிகக் கடும் குளிருக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கானோர் மிக நீண்ட தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.

பல்லாயிரக்கணக்கானோர் அலெக்ஸாண்ரா பிளேஸை நோக்கி நாள் முழுவதும் வந்து கொண்டிருந்ததால், அவர்கள் பாலசிங்கத்துக்கு தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்காக, இறுதி வணக்க நிகழ்வு மேலும் சில மணி நேரத்தால் நீடிக்கப்படவிருந்த போதும் பின்னர் அது நீடிக்கப்படவில்லை.

மிகப் பெருமளவு மக்கள் கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இரண்டு நாட்கள் பயணம் செய்து பாலசிங்கத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வந்திருந்தனர்.

சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நோர்வேயிலிருந்து பெருமளவு விமானங்களை வாடகைக்கு அமர்த்தி ஆயிரக்கணக்கானோர் இறுதி வணக்க நிகழ்வுக்கு வந்திருந்தனர். இந்த இறுதி நிகழ்வை தமிழ் தேசிய தொலைக் காட்சி உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்புச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மாலை 4 மணிக்குப் பின்னரும் பல நூற்றுக்கணக்கானோர் இறுதி வணக்க நிகழ்வுக்கு வந்திருந்த போதும் அவர்களால் தங்கள் இறுதி வணக்கத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

மாலை 3.30 மணிக்கு அலெக்ஸாண்ரா பிளேஸிலிருந்து பாலசிங்கத்தின் பூதவுடல் பேழை எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தீயுடன் சங்கமமானது.

இந்த இறுதி நிகழ்வில் பாலசிங்கத்தினதும் அவரது துணைவியார் அடேல் பாலசிங்கத்தினரதும் குடும்பத்தவர்களும் மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமென சுமார் 300 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நன்றி: தினக்குரல் Dec 21, 2006

Please Click here to login / register to post your comments.