கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது

ஆக்கம்: சஞ்சயன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது.

ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசபையின் பெண் உறுப்பினர்களே தெரிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மொழியியல்துறையில் புலமை கொண்டவரான பார்வதி கந்தசாமி, கனடா – ரொரன்ரோவில், புலம் பெயர்ந்த பெண்களின் சார்பில் தொண்டர் சேவையில் தீவிர ஈடுபாடு காட்டிவருபவராகும்.

பெண்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தன்னார்வ நிறுவனப் பணிகளில் அவர் தனது ஆற்றல்களைப் பயன்படுத்தி வருகிறார்.

முதலில் தமிழ் சமூகத்தவர்கள் மத்தியில் தனது பணிகளை ஆரம்பித்த பார்வதி கந்தசாமி, ரொரன்ரோவின் பல்கலாச்சார சமூகங்கள் மற்றும்; இனக் குழுமங்களைச் சேர்ந்த நலிவுற்ற பெண்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

சமூகப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் சமூகத்தவர் மத்தியில் விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக தனது எழுத்தாற்றலை தாராளமாக பயன்படுத்தும் பார்வதி கந்தசாமி பல நாடகங்களை தயாரித்து மேடையேற்றியதுடன், குநற் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.

இவரின் கலைப்படைப்புகளுக்கான தொனிப்பொருளாக மன அழுத்தம், பெண்கள் துஷ்பிரயோகம், வயோதிபர் துஷ்பிரயோகம் பதின் அகவையருக்கான நெருக்கடித்தீர்வு குறித்து எடுத்தியம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரொரண்டோ நகரில், தமிழ் மூத்தோருக்கான நலன்புரி நிலையமான 'வசந்தம்' அமைப்பின் நிறுவனர்களில் பார்வதி கந்தசாமியும் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தினையடுத்து, இலங்கையின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு தீர்வினைக் காண்பதற்கு ஆலோசனை வழங்கும் பணி மற்றும் நிதிதிரடடல் என்பவற்றிலும் பார்வதி கந்தசாமி தனது கவனத்தை அண்மைக்காலமாகச் செலுத்திவருகிறார் என ரொரன்ரோ நகரசபை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Click here to login / register to post your comments.