அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்

ஆக்கம்: டி.சிவராம் (தராக்கி)
இலங்கையின் படைவலுச் சமநிலை பற்றி கடந்த வாரம் பார்த்ததில் ஒரு முக்கியமான கேள்வி தோன்றுகிறது. அதாவது புலிகள் எவ்வளவுதான் தமது படைவலுவை சிறிலங்கா இராணுவத்திற்கு சமனானதாக பேணிவந்தாலும் எமக்குச் சார்பற்ற எந்தவொரு சிறு வெளிநாட்டுப் போர்த் தலையீடும் அதை இலகுவாக மாற்றிவிட வாய்ப்பிருக்கிறதே என்ற கேள்வி போனகிழமைக் கட்டுரையை கவனமாகப் படித்த எவருக்கும் கட்டாயம் தோன்றியிருக்கும். இந்தச் சிக்கல் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் அமைதிச் சூழலுக்கு அடிப்படையாக புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான போர்நிறுத்த ஒப்பந்தமே அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அத்திவாரமாக இருதரப்பிற்குமிடையிலான போர்வலுச் சமநிலையே இருக்கின்றது. எனவே இச்சமநிலை பாதிக்கப்பட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைப்பது கடினமாகிவிடும். இந்தவகையில் சிறிலங்கா அரசு புலிகளுடன் பேசி ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு முன்னர் வெளிநாடுகளோடு அது செய்துகொள்ளக்கூடிய எந்தவொரு நேரடிப் படைத்துறை ஒப்பந்தமும் (னுநகநnஉந வுசநயவல) இலங்கையின் படைவலுச் சமநிலையை பாதிக்கும்.

இதனாலேயே புலிகளோடு ஒருபுறம் அமைதிப் பேச்சுக்களை நடத்திக்கொண்டு மறுபுறம் அமெரிக்காவோடும் இந்தியாவோடும் படைத்துறை ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட கடும் பிரயத்தனங்கள் இலங்கையின் படைவலுச் சமநிலையையும் அதன் காரணமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் பாதிக்குமென அந்நேரத்தில் புலிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

புலிகளுக்கும் தனக்குமிடையில் படைவலுச் சமநிலை காணப்படுவதாலேயே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது ஒரு இராணுவத் தீர்வை திணிக்கலாம் என்ற தனது பாரம்பரிய எண்ணத்தை கைவிட்டு அரசியல் தீர்வில் நாட்டங்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகின்றது என்ற கருத்து இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த இலங்கை அவதானிகளிடம் காணப்படுகிறது. இலங்கையின் படைவலுச் சமநிலை தமக்குச் சார்பாக இருக்கின்றது என சிறிலங்கா அரசும் அதன் பின்னிற்கும் சிங்கள பௌத்த மேலாண்மையாளரும் திடமாக நம்புவார்களேயானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை காண பின்னடிப்பார்கள் என்ற உண்மையையும் சில நாடுகள் உணரத் தவறவில்லை.

அமெரிக்காவோடு யுஉஉநளள யனெ ஊசழளள ளுநசஎiஉiபெ யுபசநநஅநவெ என்ற பாரதுரமான படைத்துறை ஒப்பந்தத்தை செய்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சி காட்டிய அவசரமும் வேகமும் அதேகாலத்தில் பேச்சுவார்த்தையில் காட்டவில்லை என்ற உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதேபோலத்தான் ரணில் விக்ரமசிங்கவின் அரசு இந்தியாவுடன் படைத்துறை கூட்டுறவு ஒப்பந்தத்தைச் செய்ய பெருமுனைப்புடன் செயற்பட்டது. மேற்படி முயற்சிகளை சந்திரிகா அரசும் தொடர்வதை நீங்கள் அறிவீர்கள்.

இத்தீவின் படைவலுச் சமநிலையை தமது சொந்த முயற்சியில் உள்நாட்டிலேயே தனக்குச் சாதகமாக திருப்பமுடியாது என்பதை தீச்சுவாலை நடவடிக்கையின் தோல்வியோடு நன்றாக உணர்ந்துகொண்ட சிங்களதேசம், வெளிநாட்டுத் தலையீடு மட்டுமே இனி புலிகளின் படைவலுவை குறைக்க உதவும் என திடமாக நம்பிச் செயற்படுகின்றனர். அதாவது வெளிநாடுகளோடு செய்கின்ற படைத்துறை ஒப்பந்தங்கள் மூலம் தமக்குச் சாதகமாக இலங்கையின் படைவலுச் சமநிலையை மாற்றவேண்டும் என்பதில் சிங்களத் தலைமைகளுக்கு உள்ள ஆர்வம், அரசியல் தீர்வை நோக்கி செயற்படுவதில் இல்லை என்ற உண்மைபற்றி தமிழருக்கு எவ்விதமான மயக்கமும் இருத்தலாகாது.

வெளிநாட்டு இராணுவத் தலையீடு மட்டுமே தமது கையை மீண்டும் மேலோங்க வைக்கும் என சிங்கள தேசம் நம்புவதால் இவ்வாறானதொரு சிக்கல் எதிர்காலத்தில் தோன்ற வாய்ப்புண்டா என்பதையும் அவ்வாறு ஏற்படக்கூடிய ஒரு தலையீட்டை நாம் முன்தடுக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டிய கட்டாயம் எமது சமூகத்திற்கு இன்றுண்டு.

இவ்விடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிரித்தானியர் இத்தீவை விட்டகன்ற பின்னர் இன்றுவரையிலான 56 ஆண்டுகளில் சிறிலங்கா அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டமே தமிழ் மக்களுக்கு அரைகுறைச் சுயாட்சியை வழங்கவேனும் சிங்கள அரசியற் தலைமையால் கொண்டுவரப்பட்ட ஒரேயொரு சட்டமாகும். இதுவொரு உப்புச் சப்பற்ற பம்மாத்துச் சுயாட்சியையே தந்ததாயினும் இதை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட தமிழீழ விடுதலை இயக்கங்களின் போரியல் அழுத்தங்களுக்கு மேலாக இந்தியாவின் நேரடி வான்படை அச்சுறுத்தலும் தேவைப்பட்டன என்ற வரலாற்று உண்மையை நாம் ஆராய்வோமேயானால் படைவலுச் சமநிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். மேலும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், தனியார் வீடுகள், வயல்கள், தோட்டங்கள் என்பவற்றிலிருந்து கொள்கையளவில் வெளியேறவும் தமிழ் மக்களை கால் நூற்றாண்டு காலமாக சீரழித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தவும் சிறிலங்கா அரசு உடன்பட்டதற்கு ஒரேயொரு காரணம் 2001 ஏப்ரல் மாதம் தோன்றிய படைவலுச் சமநிலையே என்ற விடயத்தை மேற்குறிப்பிட்ட வரலாற்று உண்மையோடு தொகுத்துப் பார்க்க வேண்டும்.

அங்ஙனம் பார்க்கையில் இலங்கையின் படைவலுச் சமநிலை தமிழருக்குச் சார்பாக மேலோங்கினால்தான் இனி சிங்கள தேசம் ஒரு நியாயமான தீர்வை எம்முடன் பேசி நடைமுறைப்படுத்த முன்வரக்கூடும் என்ற தரவு பெறப்படுகிறது. அதாவது ஏப்ரல் 2001இலிருந்து தோன்றிய படைவலுச் சமநிலை இராணுவ வழிமுறைகளின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணலாம் என்ற சிங்கள தேசத்தின் நம்பிக்கையை சற்று வலுவிழக்கச் செய்துள்ளதே தவிர நியாயமான அரசியல் தீர்வொன்றை தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணத்தை அது சற்றேனும் ஏற்படுத்தவில்லை என்ற மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையே போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை வெளிப்பட்டு நிற்கின்றது.

எனவே தமிழ் மக்களுக்கு ஏற்புடைய ஓர் அரசியல் தீர்வை வழங்கியே ஆகவேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை சிங்களதேசத்தில் ஏற்படுத்துவதானால் இலங்கையின் படைவலுச் சமநிலையில் தமிழ்த்தரப்பின் கை இன்னும் கணிசமான அளவு மேலோங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்ற விடயம் வருங்காலங்களில் இன்னும் தெளிவாகத் தென்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் தரப்புப் படைவலு இனி கணிசமாக - அதாவது சிங்கள தேசத்தை ஓர் அரசியல் தீர்வை நோக்கி அழுத்தக்கூடிய வகையில் - மேலோங்க வேண்டுமாயின் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போதுள்ள தமிழர் தாயகப் பரப்பு மேலும் விரிவடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்புகளை காலவரையறையின்றி இழுத்தடித்தால் மேற்படி கட்டாயத்திற்கு புலிகள் ஆட்படுவர். அப்படி அவர்கள் ஆட்பட்டால் அதை சாட்டாக வைத்து முழுமையான அல்லது வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவத் தலையீட்டை ஏற்படுத்தி இலங்கையின் படைவலுச் சமநிலையை நிரந்தரமாக தம்பக்கம் திருப்பிக் கொள்ளலாம் என பல சிங்கள பௌத்த மேலாண்மையாளர் இன்று கணக்குப் போடத் தொடங்கியுள்ளனர்.

இங்கு ஒரு வரலாற்றுத் திருப்புமுனையான கேள்வியை அல்லது இருதலையை (னுடைநஅஅய) தமிழர் தேசம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதாவது சிங்கள தேசத்தை ஒரு நியாயமான அரசியல் தீர்வை நோக்கி அசைப்பதற்கு இலங்கையின் படைவலுச் சமநிலை எமக்குச் சார்பாக திரும்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதானால் அதையே சிங்கள மேலான்மைளாளர் எமக்கெதிரான ஒரு பொறியாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்பதே நாம் இன்று எதிர்கொள்ளும் இருதலை.

எமக்கு தவிர்க்கமுடியாதபடி ஏற்படக்கூடிய வரலாற்றுக் கட்டாயத்தை பயன்படுத்தி வெளிநாட்டு இராணுவ தலையீடு இங்கு ஏற்படவும் அதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் பலவருடங்கள் பின்தள்ளப்பட்டு எமது அரசியல் பேரம்பேசும் வலு ஒரேயடியாக முடக்கப்படவும் ஆவன செய்ய சிங்கள மேலாண்மையாளர் தவற மாட்டார்கள் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சிங்கள தேசம் காலவரையறையின்றி தொடரப்போகின்றது என்பதற்கான அறிகுறிகளே நூற்றுக்கு தொன்னூற்றொன்பது வீதம் காணப்படுகின்றது. இந்த நிலையில் நாம் மேற்கூறிய அரசியல் இராணுவப் பொறியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொண்டு தகர்க்கப்போகிறோம் என்பது நாம் ஒவ்வொருவரும் ஆராயவேண்டிய விடயமாகும். ஏனெனில் எதிர்காலத்தில் இது நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நேரடியாகவும் பயங்கரமாகவும் பாதிக்கக்கூடிய விடயம் என்பதை நாம் உணர வேண்டும்.

இதுசம்பந்தமாக மூன்று விடயங்களை விரிவாக ஆராயவேண்டியுள்ளது. ஒன்று - தமிழ்த் தரப்பிற்குச் சார்பாக இலங்கையின் படைவலுச் சமநிலை கணிசமான அளவு திரும்புகின்ற ஒரு நிலை ஏற்படும்போது இந்தியா அதைத் தடுக்க எந்தளவிற்கு இராணுவ ரீதியாகத் தலையிட தயாராகவுள்ளது என்ற விடயம். இரண்டு - மேற்படி நிலை ஏற்படும்போது இந்தியா தலையிடாவிடின் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் சிறிலங்கா அரசின் சார்பாக தலையிட எந்தளவு வாய்ப்புண்டு என்பது. மூன்று - எந்தவொரு வெளிநாடும் இங்கு இராணுவ ரீதியாகத் தலையிட முற்றாகத் தயங்குமளவிற்கு தமிழர் தரப்பிடம் சமச்சீரற்ற முன்தடுப்பு வலு (யுளலஅஅநவசiஉயட னுநவநசசநnஉந ஊயியடிடைவைல) எந்தளவிற்கு உள்ளது என்ற விடயமாகும். இவற்றை வருகின்ற கிழமைகளில் பார்ப்போம்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (Sept 05, 2004)

Please Click here to login / register to post your comments.