வரதர் ஓர் ஒப்பற்ற மனிதர்

ஆக்கம்: சச்சி
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்களிப்பாற்றிய `வரதர்' என்னும் தி.ச.வரதராஜன் இறைபதம் எய்திய செய்திகேட்டு அவரை அறிந்தவர்கள், அவரது எழுத்தைப் படித்தவர்கள் கலங்கி நிற்கின்றார்கள். இதழியல், படைப்புத்துறை, கருத்தாக்க வெளிப்பாடு என்ற பல்துறைகளிலும் வியப்பூட்டும் சாதனைகள் நிகழ்த்திய `வரதர்'. ஓர் ஒப்பற்ற மனிதர். இலக்கியத்துறையை செழுமைப்படுத்துவதற்காக ஓர் ஒப்புநோக்காளராக வாழ்வை ஆரம்பித்தவர். படிப்படியாக முன்னேறி `ஆனந்தா அச்சகம்' என்ற வெளியீட்டுவாரியத்தை ஆரம்பித்து அப்பணியை வாழ்வின் இறுதிவரை காத்தவர்.

இதழியல் நூல் வெளியீட்டுத் துறைகளில் அவரை, ஒப்பற்ற மனிதராக இலக்கியத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கலைச்செல்வி முதல் மறுமலர்ச்சிக்காலம் வரை ஓயாத இலக்கியப் பணியாற்றிய பெருமை அவருக்குண்டு. `வரதரின்' காலம் அவரின் தனிமனிதத் திறமையை உணர எதிர்கால சந்ததியினருக்கு பெரும் களமாக இருந்ததெனலாம். அவரது சிறுகதைகள், நாவல்கள், காலப்பதிவுகள் அவை வெளியான காலத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தன. அவருடைய படைப்புகள் நேற்றுவரை மற்றையோருக்கு உந்துசக்தியாக விளங்கிவந்துள்ளது.

ஈழத்து எழுத்துலக முன்னோடியான `வரதர்' எண்பது வயதைத் தாண்டியபோதும் இளைஞராகவே வாழ்ந்தவர். இவ்வயதிலும் சளைக்காது பணியாற்றியிருந்தமையை எண்ணும்போது நமக்கெல்லாம் பெருமைதான். நேற்று அவரை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கம்பீரமாக நடந்து சென்றதைக் கண்டவர்கள் `சிக்குன் குனியா' கொடுமை நல்ல மனிதர்களை காவு கொள்ள வேண்டுமா என வேதனைப்படுவதுண்டு.

மற்றவர்கள் மனம் நோகாது குறைவாகப் பேசி எல்லோர் மனங்களையும் பெற்றவர் அவர். இலக்கிய வித்தகச் `செருக்கு' அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோருக்கும் அவர் `நல்ல மனிதர்' எழுத்தாளர்களுள் சமுதாயத்தொண்டர்களின் தொகை பெருகிவரும் காலத்தில் வாழ்க்கையை உணர்ந்து தேவையறிந்து இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு எல்லோர் மனத்திலும் அன்பு பாராட்டிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. மட்டுமல்ல, அவரது வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது.

அவரது இலக்கியத் தகைமையை பலரும கௌரவித்து விருது வழங்கியதுண்டு. மூத்த எழுத்தாளராக அவரை நேசித்ததுண்டு. எழுத்தை நேசித்த `வரதருக்கு' எம் கண்ணீரைக் காணிக்கியாக்குவதைத் தவிர, வேறு வழியிருப்பதாக தெரியவில்லை. `தினக்குரல்' இல் அவரது பங்களிப்பு மறக்கமுடியாது. அந்த ஒப்பற்ற மனிதருக்கு எமது காணிக்கைகள்.

Please Click here to login / register to post your comments.