சிங்கள மயமாகும் தமிழ்க் கிராமங்கள்

ஆக்கம்: கே.சௌந்தரம்
வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையினால் தமிழ் கிராமமொன்றிற்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இதேபோன்று ஏற்கனவேயும் பல செயற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஏடிபல படை நடவடிக்கை மூலம் வவுனியா - பறையனாலங்குளம், மதவாச்சி - மன்னார் ஆகிய இரு வீதிகளையும் கைப்பற்றிய படையினர் பறையனாலங்குளத்தை சப்புமல்புர என பெயர்மாற்றம் செய்து பறையனாலங்குளம் சந்தியில் உள்ள படைமுகாமில் பெயர்ப்பலகை ஒன்றை நட்டு அதனை அப்போதைய பாதுகாப்பு துணை அமைச்சர் அனுருத்த ரத்வத்தையினால் திரைநீக்கம் செய்து விழா கொண்டாடினர். இதனை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் எடுத்துக் காட்டி சிறிது காலத்தில் பறையனாலங்குளம் சப்புமல்புரவாக மாற்றப்பட்டதை தடுக்க முடிந்தது.

ஆனால்... நெளுக்குளம், செட்டிகுளம் வீதியில் 1936 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உட்குளம் உலுக்குளமாக்கப்பட்டதை எவராலும் தடுக்க முடியவில்லை என வன்னியின் மூத்த நவீன இலக்கியவாதியான எஸ்.எல்.சௌந்தரநாயகம் (வன்னியூர்கவிராயர்) அவரின் படைப்பொன்றில் வெளிப்படுத்தியுள்ளார் என அவரின் ஊரவரும் நண்பர்களும் உறவினர்களும் கூறுகின்றனர்.

வவுனியா நகரிற்கு தெற்காக வவுனியா கண்டி வீதியில் உள்ள ஈரற்பெரியகுளம் என்ற கிராமத்தை இரட்டை என அழைக்கின்றனர். இதன் பெயரும் மாறி வருகின்றது.

இவை திட்டமிட்டு செய்வதனை செய்பவர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் உண்மை திட்டமிட்ட நடவடிக்கையே ஆகும்.

வவுனியாவிற்கு தெற்காக வவுனியா கண்டி வீதியில் கற்குழிக்கும் மூன்று முறிப்பிற்கும் இடைப்பட்ட இடத்தில் காட்டிலாகா திணைக்களம் இருந்தது. திணைக்களத்தை சூழவும் தேக்கு நடப்பட்டு அந்த இடத்தை தேக்கங்காடென அழைத்தனர். அந்த இடத்திற்கு முன்பாக ஜோசப்படைத்தளம், பொலிஸ் உயரதிகாரிகளின் அலுவலகம் என்பன வந்தபின் காட்டிலாகா திணைக்களம் பொலிஸ் புலனாய்வுத்துறையின் வசமானது. அதனைச் சூழவுள்ள தேக்கங்காட்டு பிரதேசத்தில் கணிசமான இடம் அவர்கள் தமது தேவைக்காக எடுத்தனர். இப்பொழுது தேக்கங்காடென்று அழைக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தேக்கவத்தை ஆகிவிட்டது. எங்காவது ஒரு சிலர் தேக்கங்காடென அழைப்பர், மற்றும்படி தேக்கவத்தையாகவே மாற்றப்பட்டுவிட்டது. இந்த இடத்தில் பொலிஸார் திணைக்கள கட்டிடத்தையும் சூழவுள்ள குறிப்பிட்டளவு பகுதியையும் எடுத்தனர். ஏனைய அரச காணியை தனியார் ஆக்கிரமித்தனர்.

தனியாரிடமிருந்தாவது காணிகளை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியுள்ளனர். இதுவும் தேக்கங்காடு தேக்கவத்தையாக மாறுவதற்கு ஒரு காரணமாகும்.

1936 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் வன்னியின் எல்லையை நோக்கிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. இதனை அன்றைய தமிழ் அரசியலாளர்களால் சுட்டிக்காட்ட முடிந்ததே தவிர நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் வவுனியாவின் தெற்கு கிழக்குப் பிரதேசங்கள் சிங்கள மயமானது. இதனை இன்று நாம் சொன்னால் அந்த பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குடியேறியவர்களின் பேரப்பிள்ளைகளே இன்றுள்ளனர். அவர்கள் நாம் இங்கு பிறந்தவர்கள் இது எங்கள் சொந்த இடம் என்பார்கள். இது பெரும் சிக்கலான விடயம். உண்மையை பொய் மேவக்கூடிய வகையில் நிலைமை காலம் கடந்து விட்டது.

ஆனால்... இதன் தொடர்ச்சியாக இன்றும் திட்டமிட்டு தமிழ் கிராமங்களை சிங்கள மயமாக்குவது எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களும் சிந்தனையாளர்களும் கவனம் கொள்ளுங்கள்.

மணலாறு பிரதேசத்தை திட்டமிட்டு கையகப்படுத்திய சிங்களவர் 1964 ஆம் ஆண்டு அங்கு குடியேற்றத்தை செய்து 1984 ஆம் ஆண்டு மணலாறை சூழவுள்ள தமிழ் கிராமங்களான பதவிக்குளம், தனிக்கல், மண்கிண்டிமலை, கும்பகர்ணன் மலை... உட்பட பல கிராமங்களில் இருந்தும் தமிழரை விரட்டியவர்கள் சிங்களப் பெயர்களை கிராமங்களுக்கு சூட்டி இன்று வெலிஓயாவென மார்தட்டுகின்றனர்.

தமிழரை அறிவற்ற முட்டாள்களாக்கி தாம் நினைத்ததை செய்து முடிக்கலாமென்ற நயவஞ்சகத் திட்டத்துடன் தான் வவுனியா பறையனாலங்குளம் வீதியில் பூவரசன்குளத்திற்கு மேற்காக இராமயன்கல் என்ற கிராமம் அம்பேவத்த என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதனை அந்த இடத்தில் பொலிஸ் முகாமிட்ட பின்னர் பொலிஸாரின் திட்டமிட்ட வேலை தான் என மக்கள் குறைபடுகின்றனர்.

மக்களால் குறைபட மட்டுமே முடியும். வேறு எதனையும் செய்யக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை. எனவே அரசியலாளர்கள் இதனை கவனத்திலெடுங்கள். உரியவேளை இதனைச் சுட்டிக்காட்டுங்கள். சிலவேளை அவர்களின் சிந்தனையில் தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக கூட இது தொடர்கின்றதென்பதை நாம் சுட்டிக் காட்டலாம். ஏனெனின் இதேபோன்று தான் காலாகாலமாக தமிழரின் நிலங்களில் இருந்து தமிழரை துரத்திவிட்டு இருபதாண்டுகளுக்கு மேலாக சொந்த இடத்தில் வாழ முடியாத நிலைமையினை திட்டமிட்டு செய்து வந்துள்ளனர்.

தமிழர் மீது இதையொரு ஆயுதமாகப் பிரயோகிக்கப்படுகிறது. கடந்து போன காலங்கள் வெறும் நாட்களல்ல. அது தமிழரைப்பொறுத்த வரையில் மிகவும் துயர் சுமந்த வரலாறு. இந்த வரலாற்றை சரியாக நோக்குகையில் தமிழரின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் பூர்வீகமாக தமிழர் வாழ்ந்த நிலங்களில் தமிழரின் அடையாளத்தை அழித்தொழிக்கும் வகையில் பேரினவாதிகள் தமிழரின் கிராமங்களை சிங்களப் பெயர் மாற்றம் செய்வதிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்துள்ளனர்.

நீண்ட காலமாக இந்த திட்டமிட்ட செயல் பற்றி எடுத்துரைக்கும் போது அதனை ஒரு செல்லாக்காசாக தட்டிக்கழித்துவிட்டு அவர்கள் அவர்களின் வேலையினை தொடராகச் செய்வதற்கு தமிழரும் துணை போயுள்ளனர். இப்படி துணை போவோரை இன்றும் தமிழினத்தின் அழிவிற்கு காரணமானவர்களாய் நாம் சில பிழைப்பு வாதிகளாய் இருப்பவர்களைக் காணலாம்.

வவுனியா மாவட்டத்தில் இராமயன்கல் அம்பேவத்தையாக மாற்றப்பட்டமை பற்றித் தமிழர் நெஞ்சுகள் குமுறுகின்றன. ஏன் இது போன்று செய்கிறீர்கள்? ஒரு இனத்தையும் அந்த இனத்தின் உணர்வையும் ஏன் மதிக்க மறுக்கின்றீர்கள்? இதே போன்று மாறி உங்களுக்கும் நடக்க வேண்டுமா? பொதுப்படையாக!

இராமயன்கல் இராமயன்கல்லாகவே இருந்தால் தான் அழிவுகளை தடுக்க முடியும் என்பதை எந்த அரசியல் ஞானமுள்ளவர்கள் ஒத்துக் கொள்ளப் போகின்றார்கள்?

Please Click here to login / register to post your comments.