சோல்ஃபெரி அரசியல் யாப்பு

ஆக்கம்: நம்முள் கவீரன்
வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! சுதந்திர இலங்கையின் முதல் அரசியல் யாப்புடன் புத்தாண்டை வரவேற்கிறோம்!

இன்று இலங்கைக்குப் புதிய அரசியல் யாப்புத் தயாரிக்கப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரயத்தனங்கள் இழுபறியில் இப்பொழுது இருந்து வருகின்றன. அதற்குக் காரணம் பிரித்தானியரிடம் இருந்து கொக்கி போட்டோ குற்றம் இழைத்தோ (By Hook or by Crook) பெற்றுக் கொண்ட அரசாள் உரிமையைப் பங்குபோட எத்தனிப்பது நாட்டுக்கிழைக்குந் துரோகம் என்று சிங்களவர் பலர் நம்புவதே.

முதன்முறையாக எம் நாட்டுக்கென்று உள்ளூர் அரசாட்சிக்காக அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது சோல்ஃபெரி ஆணையாளர்களாலேயே. அதன்படி பிரித்தானிய அரசர், செனட்சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கைப் பாராளுமன்றம் நடைமுறைக்கு வந்தது. 101 மக்கட் பிரதிநிதிகளில் 95 பேர் வாக்குரிமை மூலந் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. சோல்ஃபெரி ஆணையாளர்கள் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவைச் சிபார்சின் படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவொன்று (Delimitation Commission) மக்கட் பிரதிநிதிகளின் வாக்காளர் தொகுதிகளின் வரம்புகளை வகுக்க நியமிக்கப்பட்டிருந்தது. பொதுவாகத் தனி நபர் வாக்காளர் தொகுதிகளாகவும் சிறுபான்மையோர் பெருவாரியாக வாழ்ந்த தொகுதிகளில் பல்நபர் வாக்காளர் தொகுதிகளாகவும் இருக்க சிபார்சுகள் செய்யப்பட்டிருந்தன.

செனட் சபையில் 30 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். ஆளுநர் 15 பேரைத் தாமே நியமிக்கவும் மற்றைய 15 பேரை மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுக்கவும் வழியமைக்கப்பட்டது. இவர்களுள் மூன்றில் ஒரு பங்கினரான நியமிக்கப்பட்ட ஐந்து பேரும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 5 பேரும் இரண்டு வருடங்களுக்கொருதடவை ஓய்வு பெறவும் புதிதாக அவர்கள் இடத்துக்கு நியமனமுந் தேர்வும் நடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதிகளின் காலம் 5 வருடங்களாக ஆக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் அவை நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்தது. நியமிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் கூடிய செல்வாக்கைப்பெற்ற நபரை ஆளுநர் பிரதம மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பிரதம மந்திரி தனக்குப் பிடித்தவர்களை ஆளுநர் ஊடாக அமைச்சர்கள் ஆக்கக் கூடியதாக இருந்தது. வெளிநாட்டு, பாதுகாப்பு விடயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. மேலும் சில விடயங்கள் ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் இருந்து வந்தன. அவற்றுள் ஒரு இனத்திற்கோ குழுவிற்கோ வழங்கப்பட்ட உரிமைகளை மற்றைய இனங்களுக்கோ குழுவினர்களுக்கோ வழங்காதிருந்தால் அவற்றைப் பரிசீலித்து மாற்று நடவடிக்கை எடுக்கும் பொறப்பு ஆளுநரிடமே இருந்தது.

புதிய யாப்பின் கீழ் 1947 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி வென்று அதன் தலைவர் ஈ.கு.சேனாநாயக பிரதம மந்திரி ஆனார். 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சென்றபோது இலங்கைக்குத் தன்னாட்சி தரவேண்டும் என்று சேனாநாயக பிரித்தானிய அரசுச் செயலாளரிடம் கோரியிருந்தார். முதலில் புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்திய பின், சில காலத்தின் பின்னர் தன்னாட்சி தரப்படும் என்று அறிவித்திருந்தார் செயலாளர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி அதிகாரத்தை ஏற்றதும் அது இந்தியாவிற்குத் தன்னாட்சி தரத் தீர்மானித்தது. இது தான் சமயம் என்று, பிரித்தானியத் தொடர்பு கொண்ட அயல்நாடுகள் இரண்டிற்கு (இந்தியா, பாகிஸ்தான்) சுதந்திரம் வழங்குவதானால் இலங்கைக்கும் வழங்க வேண்டியது பிரித்தானியாவின் கடமை என்று சேனாநாயக குரல் எழுப்பினார். வேறு காரணங்களுங் காட்டப்பட்டன. அதாவது முன்னைய சாம்ராஜ்ய அரசியல் யாப்புகள் அனைத்தும் இலங்கையர்களால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இரண்டு உலக யுத்தங்களின் போது இலங்கை பிரித்தானியாவுடன் தோளோடு தோள் நின்று உதவியது என்றும், இலங்கையின் எழுத்தறிவுத் தகைமை இந்தியாவை விட மேம்பட்டது என்றும், காந்தி, நேரு போன்ற இந்தியத் தலைவர்கள் சர்வதேச அளவில் போற்றப்பட்டவர்கள். எனினும், இலங்கையர்கள் தமது வாக்குரிமையை 16 வருடகாலமாகப் பாவித்து வந்துள்ளனர் என்றும் இந்தியர் 1947 வரை அதனைப் பாவிக்கவில்லை என்றும் அதனால் தன்னாட்சிக்கு இலங்கை மக்கள் இந்தியர்களிலும் பார்க்கக் கூடிய தகைமையுடையவர்கள் என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. இக்காரணங்கள் இலங்கையர்களுக்குச் சாதகமாகவே ஏற்கப்பட்டன. முன்னர் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்பே தன்னாட்சி வழங்கத்தீர்மானிக்கப்பட்டது. எனவே, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் தன்னாட்சி வழங்கப்படும் என்று பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டது.

1. இலங்கை அரசின் மேல் உள்ள தனது ஆதிக்கத்தைக் கைவாங்க பிரித்தானியப் பாராளுமன்றம் உரிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. சோல்ஃபெரி அரசியல் யாப்பில் குறிப்பிட்ட தன்னாட்சி சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க முட்டுக்கட்டைகளாக விளங்கும் வரையறைகள் சகலதையும் இல்லாதாக்க பிரித்தானியாவில் ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

3. பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கலந்து பேசி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் பொருட்டு கடல் தொடர்பான, தரைதொடர்பான, ஆகாயந் தொடர்பான சில இலங்கைத் தளங்களைப் பிரித்தானியாவின் பாவிப்பிற்குக் கொடுத்துதவ வேண்டியிருந்தது.

4. வெளிநாட்டு உடன்படிக்கை மூலம் இலங்கையை ஒரு சுதந்திர நாடாகக் கணித்து, மதித்து, அந்நாடு தனது சொந்த வெளிநாட்டுத் தூதுவர்களை நியமிக்க வழிவகுத்துக் கொடுக்க வேண்டும். அதேநேரம் பிரித்தானியாவும் இலங்கையும் பிறநாடுகள் சம்பந்தமான தமது தொடர்புபற்றிய விபரங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

5. பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்ட உள்ளூர் அலுவலர்களைத் தொடர்ந்து அதே அடிப்படையில் வைத்திருக்கவோ அல்லது அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியங்களைக் கொடுத்து அவர்களை ஓய்வு பெறச்செய்யவோ தேவையான நடவடிக்கைகளை எடுப்பது. உரியகாலத்திற்கு முன் ஓய்வு பெற வைப்பதானால் அவர்களுக்குத் தக்க நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட இடைநிலை நடவடிக்கைகளை அவதானிக்கும் போது ஆக்கிரமிப்பால் அந்நியர் ஆட்சிக்குட்பட்ட ஒருநாடு, அதிகாரக் கைமாற்றலுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதனை அந்நாடு பெறும்போது எப்பேர்ப்பட்ட சிக்கலான நடவடிக்கைகளுக்கு அது முகங் கொடுக்க வேண்டும் என்று புரிகிறது அல்லவா? அடித்துப் பறிக்கும்போது அப்படி எல்லாம் நடக்கவில்லை. ஆனால் அமைதியாக அதிகாரத்தைத் திரும்ப ஒப்படைக்கும் போது பல விடயங்களையுங் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் தான் இன்றைய அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் பல சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளது. இதனால்தான் போலும் எங்கள் அரசாங்கமும் தற்போது "அடித்துப் பிடித்தால் என்ன?" என்ற கட்டத்திற்கு வந்துள்ளது. ஆகவே மொத்தத்தில் பயங்கரவாதந்தான் பதில் என்று இருசாராரும் வன்முறையை நாடியுள்ளனர். வன்முறையை நாடுபவர் யாராக இருந்தாலும் அவர் மனதில் பயங்கரவாதமே உந்துகோலாக இருந்து உதவி புரிந்து வருகிறது. மற்றவரைப் பயத்துக்குட்படுத்தித் தனது இலக்கை அடைய விழைவதே பயங்கரவாதம். இதில் ஒரு சாரார் மற்றவரைப் பயங்கரவாதிகள் என்று இன்று அழைப்பது தான் 21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த விசித்திரம்! அமெரிக்கா எங்களுக்குக் கற்றுக் கொடுத்த தலைசிறந்த சூத்திரம். நான் அடித்தால் ஜனநாயகவாதம் நீ அடித்தால் பயங்கரவாதம்!

ஐந்து நிபந்தனைகளும் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையானது பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் ஒரு அங்கத்துவ நாடாக அதன் சம்மதத்துடன் மாறியது. நானூறு வருட அந்நிய ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அதிகாரம் இலங்கைமக்களிடங் கையளிக்கப்பட்டது என்றால் அது வெறும் வாய்ப்பேச்சே. அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமே கையளிக்கப்பட்டது. அவர்களே இதுவரை மாறி மாறி அதிகாரத்தைப் பிரயோகித்து வந்துள்ளனர். ஆனால் இந்நாட்டின் பாரம்பரியங்களை உணர்ந்து, அதன் உண்மையான வரலாற்றினை ஏற்று, தற்கால மக்களின் பிரச்சினைகளை விளங்கி, வருங்காலத்தில் நாட்டை விருத்தியடையச் செய்யவேண்டும் என்ற நாட்டுப் பற்றுடன் அவர்கள் இதுவரை நடந்து வந்துள்ளார்களா என்றால் சாதகமான பதிலை எதிர்பார்க்க முடியாதிருக்கின்றது. முதல் ஆளுநர் நாயகமாக சேர் ஹென்றி மொங்க் - மேசன் மூர் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்டார்.

தன்னாட்சி கிடைத்ததாகப் பல இலங்கையர் மார்தட்டிப் புதிய அதிகார மாற்றத்தை எதிர்கொண்டிருப்பினும் அதிகார மாற்றம் ஒரு சிங்கள மக்கட் குழுவுக்கும் பிரித்தானிய குடியேற்றக் காரியாலய அலுவலர்களுக்கும் இடையிலான ஒரு கடுமையான பேரம் பேசலின் விளைவே என்றால் மிகையாகாது. சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழர்கள் மறக்கப்பட்டு ஆங்கிலேயர் நலவுரித்துகளும் சிங்கள மக்கள் நலவுரித்துகளுமே இப்பேரம் பேசலின்போது கவனத்திற்கு எடுக்கப்பட்டன. ஆங்கிலேயரிடந் தாமுந் தமிழரும் மற்றையோருங் கொடுத்துத் தாம் மட்டுமே திரும்பப் பெற்றுக் கொண்ட அதிகாரத்தைக் கைவிட அல்லது பகிர்ந்து கொள்ள சிங்கள அதிகாரக் குழுவினர்களுக்கு இதுவரை மனம் விடவில்லை. பேச்சில் எல்லாம் கொடுப்பது போல் பேசி மூச்சில் வஞ்சனையைச் சுமந்து கொண்டிருக்கின்றனர். கவீரனின் சட்டக்கல்லூரிச் சகபாடி சமசமாஜ ஆனந்தசங்கரி கூட இதை இப்பொழுது புரியத் தொடங்கியுள்ளார். வடகிழக்கு முப்பிரிவுகளுக்கு இப்பென்ன அவசரம் என்றுள்ளார். இந்திய இடை நுழைவுக்குச் சிங்கள இனவாதத்தின் பதிலடி இது என்பதை சிந்தித்து அறிந்து கொள்ளவேண்டும் நண்பர் அவர்கள்.

இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் நாம் அடுத்துப் பார்க்கப் போவது தான் ஒரு வேதனைக்குரிய விடயம். பேச்சில் ஒன்று மூச்சில் வேறொன்று வைத்திருந்த சிங்களத் தலைவர்களை அப்போதையத் தமிழ்த் தலைவர்கள் முற்றிலும் நம்பியது தான் வருத்தத்திற்குரியது. தமிழ்த் தலைவர்களில் ஒரு முக்கிய குறைபாடு இருந்து வந்துள்ளது. அவர்கள் தங்கள் கெட்டித்தனத்திற்கும் அறிவுக்கும் ஆற்றலுக்குஞ் சமனான அளவு புகழ்ச்சிக்கும் வீழ்ந்து விடக்கூடியவர்கள். அதுவும் இன்னொரு தமிழனிலும் பார்க்க "நீதான் உயர்ந்தவன்" என்றால் அந்தத் தமிழர் ஆழமான கிணற்றிலுங் குதிக்கத் தயாராகி விடுவார். ஏன் தன்னை இவ்வாறு மற்றவர்கள் புகழ்கின்றார்கள் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. எப்பொழுதுமே புகழ்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவே அதில் ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் மறத்தல் ஆகாது. இன்னொருவர் எங்களை வையும் போது வாளாதிருக்கலாம். ஏசும் போது ஏடாகூடமாக நடந்து கொள்ளலாம். ஆனால் புகழும் போது அதுவும் அளவுக்கு மீறிப்புகழும் போது உஷார் நிலையில் இருக்க வேண்டும். புகழ்கின்றவன் எங்காவது நம்மை மாட்டிவிடப் பார்க்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புகழ்ச்சிக்கு வீழாத மனிதர்கள் இல்லை. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்களின் மிகப்பெரிய பலகீனம் அதுதான். அப்படி என்ன நடந்தது என்று அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

Please Click here to login / register to post your comments.