இலக்கு வைக்கப்படும் மக்கள்

ஆக்கம்: விதுரன்
புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் தினமும் அப்பாவித் தமிழர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர். விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, ஆட்கடத்தல், காணாமல் போதலென இது தொடர் கதையாகிவிட்டது.

வடக்கு - கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் அப்பகுதிகளிலிருந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் வெளியேறிவிட்டது. யுத்தம் முடிவுக்கு வரும்வரை அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்குத் திரும்பும் சாத்தியமில்லை. வெறுமனே எழுதப்பட்டதொரு ஆவணமாக மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கையிருந்த நிலையில் வடக்கு - கிழக்கிலிருந்து கண்காணிப்புக் குழு விலகியதன் மூலம் நாட்டில் போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், முழு அளவிலான தாக்குதல்களை நடத்திவரும் அரசோ, கண்காணிப்புக் குழு வடக்கு - கிழக்கிலிருந்து வெளியேறியதால் கடும் விசனமடைந்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருப்பதாகவும் அதனை சர்வதேச கண்காணிப்பாளர்கள் மேற்பார்வை செய்வதாகவும் வெளியுலகுக்குக் காட்ட அரசு முற்படும் நிலையிலேயே கண்காணிப்புக் குழுவினரது வெளியேற்றம் அரசுக்கு நெருக்கடியாகியுள்ளது.

அதேநேரம், வடக்கு - கிழக்கு நிலைமைகள் மிகவும் மோசமடைந்து எவ்வேளையிலும் பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலையில் அதற்குள் தாங்கள் சிக்கிவிடுவோமென கண்காணிப்புக்குழு அஞ்சுகிறது. அத்துடன், கண்காணிப்புக் குழுவின் இந்த வெளியேற்றமானது, போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

வடக்கு - கிழக்கு இணைந்திருந்த நிலையில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடானது, வடக்கு - கிழக்கு பிரிப்பின் மூலம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையில், இனி இந்த உடன்பாட்டின் மூலம் சமாதானச் சூழ்நிலையை உருவாக்கவோ அல்லது சமாதான முயற்சிகளை மேற்கொள்ளவோ முடியாதென்பதை கண்காணிப்புக் குழுவும் உணர்ந்துள்ளது.

வடக்கு - கிழக்கில் கண்காணிப்புக் குழு இருந்த போதே மோசமடைந்திருந்த யுத்த நிலைமை தற்போது மேலும் மோசமடைந்துள்ளது. ஆனாலும், கண்காணிப்புக் குழுவின் வெளியேற்றமானது புலிகளுக்கு வாய்ப்பாகி விடுமென்றும் படையணிகளுக்கு புலிகள் இனிமேல் சிறுவர்களை பலவந்தமாகச் சேர்ப்பது அதிகரிக்கப் போகின்றதெனவும் அரசு கூறிக் கொண்டு வடக்கு - கிழக்கில் விமானத் தாக்குதல் மூலம் பல சிறுவர்களை கொன்றொழித்துள்ளது.

விமானப் படையினரால் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது இன்றும் நேற்றும் நடைபெற்ற நிகழ்வுகளல்ல. ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை விமானப் படையினர் கொன்றுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் இந்த வான் வழித் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு விமானத் தாக்குதலின் போதும் புலிகளின் இலக்குகளே தாக்கப்பட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறி முழு உலகையும் ஏமாற்றியே வருகின்றன. மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் முற்று முழுதாக அப்பாவிப் பொதுமக்களே, அதிலும் பல சிறுவர்கள் கொல்லப்பட்ட போதும் அப்பட்டமாக பொய்கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அது கடற்புலிகளின் முக்கிய தளம் என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானப் படையினர் துல்லியமாக மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலிகளின் தளம் அழிக்கப்பட்டதாக அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. ஆனால், கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவிப் பொதுமக்களென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் கூட புலிகளின் முகாம்கள் எதுவுமில்லையென, இந்தக் கொடூரத் தாக்குதலை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். அத்துடன், இது குறித்து ஜனாதிபதிக்கு விரிவான கடிதமொன்றை அனுப்பியும், இதுவரை அதுகுறித்து அரசு மௌனம் சாதிப்பதுடன் கடற்புலிகளின் தளமே தாக்குதலுக்கிலக்கானதாகவும் பொதுமக்களின் குடியிருப்புகள் தாக்கப்படவில்லையென்றும் கூறி வருகின்றது.

இதைவிட, இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படவில்லையென்றும் படுகாயமடைந்தவர்கள் மன்னார் ஆஸ்பத்திரிக்கோ அல்லது அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கோ கொண்டு செல்லப்படாது ஏன் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்களென்றும் கேள்வியெழுப்பும் அரசு, அதற்காகக் கூறிய காரணங்களை சர்வதேச சமூகமும் ஏற்றுள்ளது தமிழ் மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத் தாக்குதல் நடைபெற்ற இலுப்பைக்கடவை படகுத்துறை மீனவக் கிராமத்திலிருந்து மன்னார் ஆஸ்பத்திரி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. கிளிநொச்சி ஆஸ்பத்திரி சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. அநுராதபுரம் ஆஸ்பத்திரி சுமார் 115 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது.

இவையெல்லாம் அரசும் படைத்தரப்பும் நன்கறிந்த விடயங்கள். ஆனால், இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களை, மிக அருகிலுள்ள மன்னார் வைத்தியசாலைக்கோ அல்லது அதற்கடுத்தபடியாக அருகிலுள்ள அநுராதபுரம் வைத்தியசாலைக்கோ கொண்டு செல்லாது மிகத் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு ஏன் கொண்டு செல்லப்பட்டனர் என அரசு புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.

படுகாயமடைந்த அனைவரும் இலுப்பைக்கடவைக்கு அருகிலுள்ள பள்ளமடு மற்றும் முழங்காவில் கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் உயிலங்குளம் இராணுவச் சோதனை நிலையத்தில் இதற்கான அனுமதியை படையினர் முற்றாக நிராகரித்து விட்டனர்.

மன்னாரிலிருந்து சென்ற அம்புலன்ஸ்கள் உயிலங்குளம் சோதனை நிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்தே சுமார் 39 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு வாகனங்கள் மூலம், படுகாயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த உண்மைகளை மறைத்ததுடன் மட்டுமல்லாது அரசு வெளியிட்ட அறிக்கையில், அநுராதபுரம் ஆஸ்பத்திரி இலுப்பைக்கடவையிலிருந்து 112 கிலோமீற்றர் தூரமென்றும், அங்கு இவர்களைக் கொண்டு செல்லாது, 140 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு இவர்களை ஏன் கொண்டு சென்றார்களென்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன. இதன்மூலம் உண்மைநிலை மறைக்கப்பட்டு பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டதுடன், படுகாயமடைந்தவர்கள் எல்லோரும் புலிகளென்பதாலேயே அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படாது மிகத் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவைக்கும் கிளிநொச்சிக்குமிடையேயான தூரத்தை, இலுப்பைக்கடவைக்கும் அநுராதபுரத்துக்குமிடையிலான தூரத்தைவிட அதிகமெனக் காட்டுவதன் மூலம், படுகாயமடைந்தவர்கள் தொடர்பாக புலிகள் பொய் கூறுவதுபோன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கடைசியாக புதுடில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்திருந்தபோது, புதுடில்லியில் `இந்து' பத்திரிகையின் செய்தியாளர் மகிந்தவிடம் பிரத்தியேக பேட்டியெடுத்தார். அதன்போது, வடக்கில் ஆட்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும், படுகொலை செய்யப்படுவதும் மிகப் பெருமளவில் அதிகரித்திருப்பதாகக் கூறியதுடன் இதுபற்றி ஜனாதிபதி மகிந்தவின் கருத்தையும் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மகிந்த, எதுவித தயக்கமுமின்றி அப்பட்டமாக பொய் கூறினார். யாழ். குடாநாட்டின் இராணுவத் தளபதி ஒரு தமிழர் என்றும் அதுவும் அவர் யாழ்ப்பாணத் தமிழர் என்றும் கூறியதுடன், இவ்வாறானதொரு நிலையில் அங்கு எப்படி படையினர் இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவரென அந்தச் செய்தியாளரிடம் பதில் கேள்வியெழுப்பினார்.

இதில் மிக முக்கிய விடயமென்னவென்றால், மகிந்தவை பேட்டி கண்ட அந்தச் செய்தியாளருக்கு இலங்கை நிலைமை பற்றி போதிய அறிவில்லை. அதனால், இதுபற்றி வேறு கேள்வி எழுப்பவில்லை. இல்லையேல், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் எவருமே இல்லாத நிலையில் யாழ்.குடாநாட்டின் தளபதியாக ஒரு தமிழர் இருக்கிறார் என எப்படிக் கூறுவீர்களென்று திருப்பிக் கேட்டிருந்தால், அந்தப் பேட்டியில் மகிந்த கூறியவை எல்லாவற்றினதும் நம்பகத்தன்மை குறித்து பலகோடி இந்திய மக்கள் கூட அறிந்திருப்பர்.

இவ்வாறானதொரு பிரசாரமே இலுப்பைக்கடவை சம்பவம் குறித்தும் அரசு வெளியிட்ட அறிக்கை மூலம் முன்னெக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவைக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான தூரம் குறித்தோ இலுப்பைக்கடவைக்கும் அநுராதபுரத்திற்குமிடையிலான தூரம் குறித்தோ வெளிநாட்டுத் தூதர்களும் சர்வதேச சமூகமும் தென்பகுதிச் சிங்களவர்களும் பார்க்க மாட்டார்கள். அருகிலுள்ள அநுராதபுரம் ஆஸ்பத்திரியை விடுத்து 140 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு காயமடைந்தவர்களை கொண்டு சென்றதில் மர்மமிருப்பதாகவே கருதுவர்.

இதைவிட அரசு வெளியிட்ட அந்த அறிக்கையில் வேறொரு விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதாவது, விமானத் தாக்குதல் நடைபெற்ற இலுப்பைக்கடவை படகுத்துறை பகுதியில் மக்கள் குடியிருக்க படையினர் ஏற்கனவே, தடைவிதித்திருந்ததால் அங்கு மக்கள் குடியிருப்புக்கள் இருக்க வாய்ப்பில்லையென்றும் கடற்புலிகளின் தளமே இருந்தமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தகவலை மன்னார் ஆயர் முற்றாக மறுத்துள்ளார். மேற்படி படகுத்துறை பகுதி மக்கள் குடியிருக்க அனுமதிக்கப்பட்ட பகுதியென்றும் அது தடை செய்யப்பட்ட பகுதியல்ல என்றும் மன்னார் அரச செயலகம் தனக்குத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன், மிகப் பெரும் படுகொலையொன்றை செய்துவிட்டு அதனை மூடிமறைக்க அரசு காரணங்களைத் தேடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேநேரம், இந்தத் தாக்குதல் குறித்த படங்கள் இணையத்தளங்களில் உடனடியாகவே வெளியாகியுள்ளன. இவை தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. அவையெல்லாம் சம்பவத்தை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. கொல்லப்பட்ட, படுகாயமடைந்த பெருமளவு சிறுவர்களின் படங்கள் உண்மை நிலையை தெளிவுபடுத்தியும் இந்தப் படுகொலை குறித்து சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பதானது, படையினரின் செயற்பாடுகளுக்கு உற்சாகமூட்டுவதாகவேயுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு செஞ்சோலையில் இடம்பெற்ற தாக்குதலில் 51 மாணவிகள் கொல்லப்பட்டனர். அது புலிகளின் நிலையல்ல என்பது தெளிவாகத் தெரிந்தும் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பேரழிவு ஏற்படுத்தப்பட்டது. இதனைக் கூட, புலிகளின் பயிற்சி முகாமென்றே படையினரும் அரசும் கூறியிருந்தன. எனினும் கண்காணிப்புக் குழுவும் சர்வதேச அமைப்புகளும் இதனை நிராகரித்ததுடன் கொல்லப்பட்ட அனைவரும் மாணவிகளெனத் தெரிவித்தன.

வாகரையிலும் அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகள் பல தடவைகள் ஆட்லறி தாக்குதலுக்கிலக்காயின. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம், அகதிகளுக்கு மத்தியிலிருந்து புலிகள் தாக்குதலை மேற்கொண்டதாலேயே பதில் தாக்குதலில் இவர்கள் கொல்லப்படும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும் காரணம் கூறப்பட்டது.

இதுபோன்றே வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தினமும் பல தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதுடன் கடத்தல்களும் காணாமல் போதல்களும் அதிகரித்து வருகின்றன. எனினும் இன்று வரை இவை தொடர்பாக எவருமே கைது செய்யப்படவில்லை.

கிளேமோர் தாக்குதல்களும் படையினர் மீதான துப்பாக்கிச் சூடும் அதிகரித்து வருகையில் பதில் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டு வருகின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளும் ஆழ ஊடுருவல் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இது மேலும் தொடரும் சாத்தியங்களுள்ளன.

தற்போதைய நிலையில் வடக்கு - கிழக்கில் போர் நிறுத்த உடன்பாடு முழுமையாகச் செயலிழந்து கண்காணிப்புக் குழுவும் வெளியேறிய நிலையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எதுவித தகவல்களும் வெளியுலகிற்கு செல்வதில்லை.யுத்தம் நடைபெறுகையிலும் யுத்தநிறுத்தம் அமுலிலிருக்கையிலும் அப்பாவிப் பொதுமக்களே இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் ,வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதன் மூலம் இனிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பும் இல்லாது போய்விட்டது. இதனால் இந்தப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கியே அரசு முனைப்புடன் செல்வது வெளிப்படையாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும் அரசு இராணுவத்தீர்வை நோக்கிச் செல்கையில் புலிகளின் கடும் பதிலடியே அரசியல் தீர்வு குறித்து இனவாதிகளை சிந்திக்க வைக்கும். இவ்வாறான காலத்தை தனக்கு வாய்ப்பாக்கி யுத்த நிறுத்தத்திற்கு சென்று, அரசு படைபலத்தை கட்டியெழுப்பி பேச்சுவார்த்தை மேசையில் ஏமாற்றிவிட்டு மீண்டும் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடும்.

இம்முறையும் அதுவே நடைபெற்றுள்ளது. கடந்த ஐந்து வருடகால யுத்த நிறுத்தத்தால் கண்டபலன் எதுவுமில்லை. தமிழர்கள் சாணேற முழம் சறுக்கிறது. இதனால் இனியும் சர்வதேசத்தையும் பேச்சுவார்த்தையையும் நம்பவேண்டுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். அவர்களது இந்தக் கேள்விக்கு விடுதலைப் புலிகள் மட்டுமே இனிப் பதில் கூறவேண்டியிருக்கும்.

நன்றி: தினக்குரல் Jan 07, 2007

Please Click here to login / register to post your comments.