பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியதன் பின்னணி என்ன?

பிரித்தானிய உள்நாட்டு அமைச்சகம் 2006 மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீலங்காவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தீர்மானித்தது. பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி மிகுந்த பரபரப்பை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து ஸ்ரீ லங்கா நீக்கப்பட்டமை இலங்கையருக்கு ஏதோ வதிவிட உரிமை உடனடியாக வழங்கப்படப் போவது போன்ற மாயையை ஒரு சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை நம்பி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒரு பாரிய அலை வீசுவதாக அறியப்படுகிறது.

இலங்கையில் இன்று உள்ள போர்க்காலச் சூழல், ஆட்கடத்தல், கொலைகள், கைது, சித்திரவதை போன்றவற்றில் இருந்து எப்படி தப்புவது எங்கே போவது என்று அங்கலாய்க்கும் தமிழர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பல இலட்ச ரூபாக்கள் வாங்கி பிரித்தானியாவிற்கு அனுப்புகிறோம். அங்கே சென்றவுடன் உங்களுக்கு பிரஜா உரிமை (Citizenship) கிடைத்து விடும் என்று பல முகவர்கள் கூறி வருவதாகவும் அதனை நம்பி பல நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் முற்றுகையிட்டு இருப்பதாகவும் தினம் தினம் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே ஸ்ரீ லங்கா பாதுகாப்பான நாடு என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதனால் ஏற்படக் கூடிய பலா பலன்கள் எவை? இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு வதிவிட உரிமை வழங்கப்படுமா? அல்லது இலங்கையிலிருந்து வருகின்றார்கள் என்பதற்காக கண் மூடித்தனமாக வதிவிட உரிமை வழங்கப்படுமா? என்பதனை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

1983 ஜூலை சம்பவங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து வந்தோரை பிரித்தானிய அரசு அனுதாபத்துடன் வரவேற்று நியாயமான பயம் என்று நிரூபித்தவர்களுக்கு அகதி அந்தஸ்தும் ஏனையோருக்கு குடிவரவு விதிகளுக்கு புறம்பாக வதிவிட உரிமையும் (முதலில் நான்கு வருடங்களுக்கு) வழங்கியது. பின்னர் இவர்களுக்கு நான் வருடம் முடிந்த நிரந்தர பின்னர் வதிவிட உரிமை வழங்கப்பட்டது.

1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படலாயிற்று. அதாவது, காயங்கள் அல்லது காய வடுக்கள் (Sears) உடம்பில் காணப்படுபவர்கள் ஷ்ரீலங்காவிற்கு திரும்பிச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்ற வகையில் வதிவிட உரிமை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் படிப்படியாக இறங்கு முகம் கண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீ லங்கா அரசுக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தை அடுத்து, (2002 பெப்ரவரி) ஷ்ரீ லங்காவில் பிரச்சினையே இல்லை, கைதுகள் இல்லை என்று வதிவிட உரிமை வழங்கல் முற்றுப் பெறும் நிலைக்கு வந்தது.

உள்நாட்டு அமைச்சின் அலுவலகம் (Home office) அரசியல் அடைக்கால விண்ணப்பங்களை நாட்டுச் சூழ்நிலை, சமாதான உடன்படிக்கை ஆகியவற்றை காரணம் காட்டி, தொண்ணூறு சத வீதமான விண்ணப்பங்களை நிராகரித்தது. மேன் முறையீட்டு நீதி மன்றங்கள் தொண்ணூற்றி ஒன்பது சதவீதம் உள்நாட்டு அமைச்சு அலுவலக முடிவுகளை உறுதி செய்து தீர்ப்பு வழங்கின.

இந்நிலையில் அமுலுக்கு வந்த (Nationality, Immigration and Asylum Act) 2002, தஞ்சம் கோரியோரது நிலைமையை மேலும் மிக மோசமாக்கியது. இந்தச் சட்ட மூலம் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் பின்னர் மேன் முறையீட்டு உரிமையைக் கூட வழங்க மறுத்தது. இதனால் அரச பண உதவி, வீட்டு வசதி, வேலை செய்யும் உரிமை என்பவற்றையும் மறுத்தது. இதனால் விண்ணப்பம் செய்த சில தினங்களிலே எதிர்மறையான முடிவுகளைப் பெற்று எப்போது நாடு கடத்தப்படுவோம் என்ற நிலைக்கு தள்ளப்பட பல இலங்கையர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர்.

சுதந்திரமான பிரித்தானியாவில் இவர்கள் தமது சுதந்திரத்தை இழந்தனர்.

இந்நிலையில் 2004 அக்டோபரில் PS என்ற வழக்கின் தீர்ப்பு இலங்கைத் தமிழர்களின் அரசியல் தஞ்ச விண்ணப்பங்கள் முற்றாக நிராகரிப்புக்கு வழி வகுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

இவ்வழக்கில் ஸ்ரீலங்காவில் நிலவும் சமாதான சூழ்நிலை அதாவது சமாதான உடன்படிக்கை இன்னமும் அமுலில் இருப்பது சமாதானம் நிலவுவதாக ஒப்புக் கொள்ளுகின்ற நிலைப்பாட்டை உணர்த்துவதாகவும் அதன் அடிப்படையில் அரசு நடந்து கொள்வதாகவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை திரும்பும் தமிழர்கள் விமான நிலையத்தில் தஞ்சம் மறுக்கப்பட்டவராக சென்றாலும் தடுத்து நிறுத்தப்படுவதில்லை, கைது, சிறை, சித்திரவதை இல்லை எந்த ஒருவருக்கும் பயமில்லை என்பதனை உறுதிப்படுத்துவதாக மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது.

இந்தீத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அரசியல் தஞ்ச மேன்முறையீடுகளின் தீர்வுகளும் பின்னர் அமைந்தன.

இந்நிலையில் தான் "ஓ" என்ற அரசியல் தஞ்சம் கோரிய ஒருவர் சார்பில் ராஜேஸ்குமார் என்பவர் இன்றைய ஷ்ரீலங்காவின் பிரகடனப்படுத்தப்படாத போர், குண்டு வீச்சுகள், கொலைகள், ஆட்கடத்தல் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோர் சம்பந்தமான ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, உள்நாட்டு அமைச்சுக்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணைகளின் முடிவு தமக்கு நிச்சயம் தோல்வியைத் தரலாம் என்று எண்ணிய உள்துறை அமைச்சு புத்தி சாலித்தனமாக வழக்கு முடிவு, வழிகாட்டும் ஒரு வழக்காக (CASELAN) அமைந்து விட்டால் பல பழைய முடிவுகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு பலர் வதிவிட உரிமை பெற்று விடலாம் என்று எண்ணிய காரணத்தால், தாமாகவே புத்திசாலித்தனமாக ஷ்ரீ லங்காவை White List இருந்து நீக்குவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்து 13 மார்கழி 2006 இல் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது. எனவே இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வராமலே கருச்சிதைவுக்கு உள்ளானது என்பது தான் உண்மை. நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்குமேயானால் அதை மீறும் தீர்ப்பு வரும் வரை அது அமுலில் இருந்திருக்கும்.

ஆனால் அந்த நிலை ஏற்படுவதை மிகச் சாதுரியமாக உள்நாட்டு அமைச்சு அலுவலகம் தவிர்த்துக் கொண்டதுடன் தங்கள் முகத்தில் கரி பூசப்படுவதையும் விலக்கிக் கொண்டது.

இதன் மூலம் 22 ஜூலை 2003 இல் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்ட ஸ்ரீலங்கா 13 டிசம்பர் 2006 ல் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் 29.03.2005 "ஓ" தாக்கல் செய்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 12, 13 டிசம்பர் 2006 ஆகிய இரு தினங்களிலும் விசாரணை நடைபெறவிருந்ததே காரணமாகும்.

இது தனிப்பட்ட ராஜேஸ்குமார் என்ற சட்ட வல்லுநரின் முயற்சியே தவிர வேறெந்த குழுக்களுமோ, சட்ட நிறுவனங்களுமோ காரணம் அல்ல என்ற உண்மை பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு மூடி மறைக்கப்பட்ட விட்டது துரதிர்ஷ்டமே. ஆனாலும் ஒரு சிலர் முண்டியடித்து கூட்டம் போட்டு தாமே உள் நாட்டு அமைச்சை பணிய வைத்ததாக தம்பட்டம் அடித்தது வேடிக்கையானது. இவர்களே இலங்கைப்பத்திரிகைகளுக்கும் `வைற்லிஸ்ட் " பற்றிய செய்தியை வழங்கியிருந்தனர் .

ஒரு குடிவரவுச் சட்ட ஆலோசகர் ,மேன் முறையீட்டு நீதிமன்றங்களின் முன்னாள் ஆஜராகும் ஒருவர் என்ற ரீதியில் தினசரி லண்டனிலிருந்து மட்டுமல்ல இலங்கையில் இருந்தும் கூட தொலைபேசி அழைப்புக்கள் நேரடி விசாரிப்புக்கள் வருவதனால் அதனை விளக்க வேண்டிய ஒரு தார்மீக உரிமை இருப்பதாக எண்ணுவதால் இதனை எழுத வேண்டியுள்ளது.

அப்பாவித் தனமாக அப்பாடா வழி பிறந்து விட்டது இனிநாடு கடத்தும் அபாயமில்லை என்போரும் , எவ்வளவு லட்சம் செலவழித்து நாம் லண்டன் போனாலும் " சிற்றிசன் " கிடைத்துவிடும் என்று உள்ளதை எல்லாம் விற்று, இருக்கிறதை விட்டு பறக்க எண்ணும் அப்பாவித் தமிழர்களும் ஏமாந்து விடக்கூடாது,ஏமாற்றப்படக்கூடாது என்ற நல் எண்ணத்திலுமே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்களுக்கு என்ன நடக்கும்?

உண்மையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அவர்களது மனித உரிமை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படாமல் (அதாவது மேன் முறையீட்டில் ) இருந்தால் அல்லது முன்னர் சொன்ன விடயங்களில் உங்களுக்கு பயம் இருக்கிறது. ஆனால் இன்றைய நாட்டு நிலைமை (சமாதான உடன்படிக்கை) காரணமாக நீங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லலாம் என்று முன்னர் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் இன்றைய இலங்கைச் சூழலில் ஏன் நீங்கள் மீளச் செல்ல முடியாது என்று நாட்டு நிலையை ஆவணங்களுடன் (Country Report) புதிதாக விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு ஓரளவு விமோசனம் கிடைக்கலாம். அதுவும் அகதி அந்தஸ்து அல்ல Discretionary Leave என்று சொல்லப்படுகின்ற உள்நாட்டு அமைச்சின் தற்றுணிபின் பேரில் மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படலாம்.

மூன்றாண்டுகளி முடிவின் பின்னர் வதிவிட உரிமைக்காக நீடிப்பு விண்ணப்பம் செய்யவேண்டும். அன்றைய நாட்டு நிலையைக் கருத்தில் கொண்டு விண்ணப்பம் நீடிக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். அந்த விண்ணப்ப நீடிப்பு செய்யும் காலத்தில் விண்ணப்பதாரி 14 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

புதிதாக பிரித்தானியா வருவோர் நிலை எவ்வாறு இருக்கும்?

பிரித்தானியாவிற்கு வர விரும்புகின்றவர்கள் விசா இல்லாமல் நுழைவது மிகக் கடினமானது. முகவர்கள் மூலமாக வேறொருவரின் கடவுச்சீட்டில் பிரயாணம் செய்தும் உள்ளே நுழைந்து தனது கடவுச்சீட்டில் ஏன் பிரயாணம் செய்யவில்லை என்பதற்கு தகுந்த நியாயமான காரணங்களை காட்டத் தவறினால் அகதி அந்தஸ்து கோருபவர்கள் கூட 2002 Nationality & Immigration & Asylum Act இன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். இது தவிர இது ஒரு கிறிமினல் குற்றமாகவே கருதப்படும்.

அகதிஅந்தஸ்து கோருவோர் நிலை என்ன?

அகதி அந்தஸ்து கோருவோர் தமக்கு ஏற்பட்ட பாதகமான நிலைகள், தங்களது அரசியல் இயக்க ஈடுபாடுகள், அதனால் அரசினால் அல்லது அரச படைகளால் ஏற்பட்ட சித்திரவதைகள் கைதுகள் தொடர்ந்தும் இலங்கையில் ஏன் இருக்க முடியாது. இலங்கையில் ஒரு பகுதியில் பயம் என்றால் ஏன் மறுபாகங்களில் வசிக்க முடியாது என்பதனை நியாய பூர்வமாக நிரூபிக்க வேண்டும். நாட்டில் இன்று நடைபெறுகின்ற போர் சூழ்நிலை காரணமாக வசிக்க முடியாது என்று கூறுபவர்களது விண்ணப்பங்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டோர், லஞ்சம் கொடுத்து விடுதலை பெற்றோர் ஆகியோரது விண்ணப்பங்களும் வலிதற்றதாகவே கருதப்படும். இத்தகையோர் அரச படைகளால் வேண்டப்படுபவர்களாக கருதப்படமாட்டார்கள்.

இன்றைய நிலையில் வதிவிட உரிமை வழங்கப்படுமா?

நியாயமான பயம் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அகதி அந்தஸ்து வழங்கப்படும் அல்லது மனித உரிமைகள் அடிப்படையில் (HumanRights) அல்லது மனிதாபிமான (Humanitarian) அடிப்படையில் மூன்றாண்டுகள் வதிவிட உரிமை வழங்கப்படலாம். இவை எல்லாம் ஒருவருக்கு நடைபெற்ற சம்பவங்கள். சித்திவரதைகள், உயிராபத்து, அவரது அரசியல் இயக்க ஈடுபாடுகளையும் பொறுத்தே நிர்மாணிக்கப்படும்.

மேன்முறையீடு

சம்பவங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரியின் உண்மைத்தன்மையைப் பொறுத்தவரையில் (Credibility) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் மேன்முறையீட்டு உரிமை வழங்கப்படலாம். மேன்முறையீட்டில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்று உத்தரவாதம் இல்லை எனலாம்.

வைற்லிஸ்ட்டில் இருந்து சிறிலங்கா நீக்கம் இதன் பலன்கள் என்ன?

"வைற்லிஸ்ட்" என்பது பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலைக் குறிப்பிடும் முன்னர் சிறிலங்கா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இருந்தால் எத்தகைய காரணங்களை கூறியும் அரசியல் தஞ்சம் கோரியோரது விண்ப்பங்கள் அடிப்படையற்றது என்று நிராகரித்து மேன்முறையீட்டு அனுமதி மறுக்க காரணியாக அமைந்தது.

ஆனால் அந்த நிலை இப்போது மாறியுள்ளது. எழுபது சதவிகிதமான நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்படும். இது தவிர அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் அல்ல. இதுவும் இலங்கையல் சில பகுதிகளுக்கு சேர்ந்தவர்களுக்கே ஆகும். எல்லாப் பகுதிகளும் வன்முறைக்கு ஆளான பகுதிகள் அல்ல என்பதும் இது அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டோர் மீளத் திருப்பி அனுப்பப்படுவதையோ அல்லது இன்று ஸ்ரீலங்கா சூழ்நிலையில் சகலருக்கும் வதிவிட அனுமதி வழங்குவது என்ற பொருளிலோ அடங்காது என உள்நாட்டு அலுவல அகதிகள் மேன்முறையீட்டு திட்டமிடல் இயக்குநர் சபை 8.12.2006 ல் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில் கொழுக்கட்டை - மோதகமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

Please Click here to login / register to post your comments.