இராசதந்திர களத்தின் தளபதி பாலா!

ஆக்கம்: பழ. நெடுமாறன்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தம்பிகளாலும் பாலா அண்ணை என அன்போடு அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்டவர்தான் மறைந்த பேராசிரியர் அன்றன் பாலசிங்கம் அவர்கள்.

1980களின் தொடக்கத்தில் அவரும் நானும் அறிமுகமான நிகழ்ச்சி வேடிக்கையானதாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கியத் தலைவர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது "பிரபாகரனுக்கு தவறான ஆலோசனை தந்து அவரைக் கெடுப்பவர் பாலசிங்கம்' என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனக்கு அப்போது அவரைப்பற்றி எதுவும் தெரியாது. எனவே நான் சென்னையிலிருந்த பிரபாகரனைச் சந்திக்கும்பொழுது பாலசிங்கம் குறித்து என்னிடம் கூறப்பட்ட குற்றச்சாட்டை எடுத்துக்கூறினேன். இதைக்கேட்டப் பிரபாகரன் புன்னகை செய்தார். அந்தப் புன்னகையின் பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. அவர் பேச்சை மாற்றி வேறு விசயங்கள் குறித்துப் பேசினார். பிறகு நான் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் எனது இல்லத்திற்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியம் (தற்போது இளங்குமரன்) புதியவர் ஒருவரை அழைத்துக்கொண்டு என்னைச் சந்திக்க வந்தார். "இவர்தான் பாலசிங்கம்" என அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். மார்க்சிய சிந்தனையாளரான அவர் தமிழீழ விடுதலைக்குத் தன்னை எந்த அளவுக்கு அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் என்பது அவரது பேச்சின் மூலம் எனக்கு புலனாயிற்று. அவரது பேச்சில் வெளிப்பட்ட கண்ணியம், ஆழமான கருத்தோட்டம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.இவரைப்பற்றியா இப்படியொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது என என் மனதிற்குள் நான் வியந்தேன். இந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு எத்தனையோ முறை நாங்கள் அடிக்கடி சந்தித்து அளவளாவி இருக்கிறோம். தமிழ்நாட்டில் பாலா தங்கியிருந்த காலத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரிடமும் அவர் நல்லுறவைக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதில் அந்த நல்லுறவை முழுமையாகப் பயன்படுத்தினார். அவர் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது கிடையாது. தான் தலைவராக ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன்னைவிட வயதில் இளையவராக இருந்தும் அவரையே முன்னிலைப்படுத்தினார். அவர் மூலமே தங்களின் தாயகம் விடுதலைபெற முடியும் என உறுதியாக நம்பினார்.

சிறந்த சிந்தனையாளராக, சிறந்த இராசதந்திரியாக, மென்மையும் உறுதியும் நிறைந்தவராக அவர் திகழ்ந்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்குத் தத்துவ ஆசிரியராக திகழ்ந்தார். பிரபாகரனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்தார். ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளின் அரசியல் அறிவும் கூர்மைப்படுத்தப்படவேண்டும் என நினைத்தார். அதற்காக அவர்களுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தினார். உலகப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளை அவர்களுக்குப் படம் பிடித்துக் காட்டினார். இப்படி எல்லா வகையிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து வந்தார்.

அவர் படித்த படிப்புக்கு எங்கேயேனும் பேராசிரியர் பதவியையோ தூதரக உயரதிகாரி பதவியையோ எளிதில் பெற்று சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிரபாரகன் அவர்களின் அழைப்பை ஏற்ற கணமுதல் தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக்கொண்ட உண்மையான ஈகியாகத் திகழ்ந்தார்.

பிரபாகரன் அவர்களுக்கும் பாலா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பு ஆழமானது. இதயப்பூர்வமானது. பிரபாகரன் அவர்கள் அவரைப்பற்றிக் குறிப்பிடும்போது, பாலா அண்ணை என மதிப்புடன்தான் குறிப்பிடுவார். பாலா அவர்களும் தலைவர்க்குரிய எல்லா மரியாதையையும் பிரபாகரனுக்கு அளித்துப் பழகினார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச அளவில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைக்க பாலா பெரிதும் காரணமாக இருந்தார். இதன் காரணமாகவே அவர்மீது பிற இயக்கங்கள் பொறாமையும் கோபமும் கொண்டிருந்தன. 1985ஆம் ஆண்டு சென்னையில் அவரைப் படுகொலை செய்யவும் பலமுறை முயன்றனர். பாலாவின் சாதனைகளில் குறிப்பிடத்தக்கது திம்பு பேச்சுவார்த்தையில் அவரது பங்களிப்பாகும். பிற போராளி இயக்கங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் ஒன்றுபடுத்தி ஈழத்தமிழர்களின் பிரச்சினை தீர நான்கு அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநாட்டில் அவர் முன்மொழிந்தார். அதை மற்றப் போராளி இயக்கங்களும் வழிமொழிந்தன. சிங்கள அரசு இத்தீர்மானத்தை ஏற்க மறுத்தது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி இத்தீர்மானம் கண்டு ஆத்திரமடைந்தார். ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளை மிரட்டினார். அவருக்குச் சரியான பதிலடியை அம்மாநாட்டில் பாலா கொடுத்தார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த இந்திய அரசு அவரை இந்தியாவிலிருந்து வெளியேறும்படி உத்திரவிட்டது.

சத்தியேந்திரா, சந்திரகாசன் ஆகியோரையும் வெளியேறும்படி ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து டெசோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றோம். அதற்குப் பின்னரே அரசு பணிந்தது. அரசு பணிந்து வெளியேற்ற உத்திரவை ரத்து செய்தது. 1986ம் ஆண்டில் மே மாதம் மதுரையில் மிகப்பெரிய டெசோ மாநாட்டினை நடத்தினோம். அதன் வரவேற்புக்குழுத் தலைவராக நானும் மாநாட்டுத் தலைவராக கலைஞர் கருணாநிதியும் இருந்தோம். அந்த மாநாட்டுக்கு முதல் நாள் நடைபெற்ற அனைத்துப் போராளி இயக்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் சார்பில் பாலா கலந்துகொண்டார். மாநாட்டில் அனைத்திந்தியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாட்டுத் தீர்மானத்தை வடிவமைப்பதிலும் பாலா முன் நின்றார்.

இந்திய அமைதிப்படை இலங்கை சென்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க முயற்சிசெய்தபோது, இந்தியப் பிரதமர், தமிழக அரசியல் தலைவர்கள் பத்திரிகைகள் ஆகியவற்றிற்கு அவர் அவ்வப்போது எழுதிய கடிதங்கள் புகழ்பெற்றவையாகும். இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் குறித்து அவர் எழுதிய பிரசுரங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பெரும் கிளர்ச்சியைத் தோற்றுவித்தன. களத்திலே பிரபாகரன் தலைமையிலே விடுதலைப் புலிகள் போராடிக்கொண்டிருந்தபோது. இராசதந்திர களத்தில் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் அரும்பணியை பாலா மேற்கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் காட்டிய விவேகமும் உறுதிப்பாடும். வியக்கத்தக்கவையாகும்.

பின்னர் இலங்கையில் பிரேமதாசா பதவிக்கு வந்தபிறகு அவருடன் புலிகளின் சார்பில் பாலா, யோகி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சமயத்தில் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று நான் தமிழீழம் சென்றேன். அப்போது கொழும்பில் பாலா அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பேச்சுவார்த்தை நிலவரங்கள் குறித்து அவரும் இந்தியத் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து நானும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டாம்.

மட்டக்களப்பில் நடைபெற்ற மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் அவரும் நானும் கவிஞர் காசிஆனந்தன் அவர்களும் பேசினோம்.

சர்க்கரை நோயின் காரணமாக பாலா அவர்கள் உடல்நலம் குன்றியிருந்த செய்தியறிந்து மிக வருந்தினேன். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அவரைச் சிகிச்சைக்காக அழைத்து வரலாம் என்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். ஆனாலும் இந்தியத் தமிழக அரசுகள் இந்தியாவுக்குள் நுழைய அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன. ஒருவேளை அவர் இந்தியாவில் வந்து சிகிச்சை பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் அவர் நம்முடன் வாழ்ந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் பாலா அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி மருத்துவ சிகிச்சை அளிக்க பிரபாகரன் திட்டமிட்டார். ஆனால் அதற்கு உதவ இலங்கை அரசும் மறுத்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் பாலா அவர்களை அதிவிரைவுப் படகுகள் மூலம் சர்வதேச கடற்பகுதிக்கும் அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடும் அனுப்ப பிரபாகரன் திட்டமிட்டுச் செயல்பட்டார். அந்தப் பொறுப்பினை கடற்புலிகளின் தளபதி சூசையிடம் ஒப்படைத்தார். பாலாவை படகில் ஏற்றி அனுப்புவதற்கு பிரபாகரனே நேரடியாகக் கடற்கரைக்கு வந்தார். பாலாவுக்கு பிரியாத விடை கொடுத்தார். அவர் பத்திரமாகப் போய்ச்சேரும் வரை அந்தக் கடற்கரையிலேயே பிரபாகரன் அவர்கள் காத்திருந்த செய்தி அனைவரையும் நெகிழ்வித்தது. பிறகு நார்வே நாடு அவரை அழைத்துச் சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக பாலா உடல்நலம் பெற்றுத் தேறிய செய்தியறிந்து மகிழ்ந்தேன்.

17-06-2000 அன்று கனடாவில் டொரன்டோ நகரில் புலிகள் இயக்கத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில் நான் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். அலுவல் மிகுதியின் காரணமாக என்னால் வரஇயலாத நிலையைத் தெரிவித்தேன். ஆனாலும் பிரபாகரன் அவர்களிடமிருந்து எனக்கு வந்த செய்தியை மறுக்கமுடியாமல் கனடா சென்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகிற வழியில் ஜூன் 20ஆம் தேதி லண்டனில் இறங்கி பாலா அவர்களைச் சந்தித்தேன். ஓரளவுக்கு உடல் நலம் தேறியிருந்த அவரைப் பார்த்தபோது மகிழ்ந்தேன். அன்று முழுவதும் அவருடன் பேசுவதில் கழித்தேன். அன்றிரவே அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டேன். ஆனால் அதுதான் நான் அவரைச் சந்திப்பது கடைசிமுறையாக இருக்கும் என்பதை அறியாமல் போனேன்.

நார்வேயின் முயற்சியில் சமாதானப் பேச்சுவர்த்தைகளின்போது அப்பேச்சுவார்த்தைகளை இந்தியாவில் நடத்தலாம் என புலிகள் கூறிய யோசனையை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. தாய்லாந்திலும், ஜெனிவாவிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டியிருந்தது. தொலைதூரப் பயணங்களின் விளைவாகவும் அவரது உடல்நலம் குன்றியது. அந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியாவில் நடைபெற அனுமதிக்கப் பட்டிருக்குமானால். பாலாவிற்கு இங்கு மருத்துவ உதவியும் அளித்திருக்க முடியும். ஆனால் பிடிவாதமாக அவரை அனுமதிக்க மறுத்ததின் மூலம் மாறாத பழியை இந்தியா தேடிக்கொண்டது.

பாலா அவர்கள் காலமான செய்தி கிடைத்தபோது வேதனைத் தீ என்னைச் சூழ்ந்தது. அவருடைய இறுதிச் சடங்கில் நான் கலந்துகொள்ளவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். 25 ஆண்டுகாலத்திற்கு மேலாகப் பழகிய அந்த நண்பருக்கு இறுதி வணக்கத்தை செலுத்தக்கூட இயலாத நிலையில் நான் இருப்பதை எண்ணிப் பொருமினேன். பொடா வழக்கின் விளைவாக எனது கடவுச்சீட்டு காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதை உடனடியாகப் பெறுவதற்கான வழி எதுவும் இல்லை. பொடா வழக்கும் திரும்பப் பெறப்படவில்லை. இந்த தடைகளைத் தாண்டி லண்டனுக்குப் பயணம் ஆகும் நிலையில் நான் இல்லை. காலமெல்லாம் என்னுடைய இந்த இயலாமை என் நெஞ்சை அழுத்திக்கொண்டே இருக்கும்.

நான் அறிந்தவரையில் உலகத் தமிழர்களில் சிறந்த இராஜதந்திரியாக பாலா திகழ்ந்தார். அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்தார். தாயக விடுதலைக்காக. தன்னுடைய எழுத் தாற்றலை, பேச்சாற்றலை, அறிவாற்றலை அனைத்தையுமே அர்ப்பணித்தார். தனது தலைவனால் மிகவும் நேசிக்கப்பட்டார். அதனால்தான் அந்தத் தலைவனும் துயரை நெஞ்சில் தேக்கிக்கொண்டு தேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டதே என அரற்றினார்.

"தேசத்தின் குரல்' பாலசிங்கம் மறைந்தாலும் அவர் ஊட்டிய உணர்வு ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும் ஊடுருவி அக்குரலை ஓங்கி ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்செய்தி, Jan 01, 2007

Please Click here to login / register to post your comments.