இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி!

ஆக்கம்: விதுரன்
புதிதாக வந்துள்ள அதி நவீன ஆயுதங்களுடன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு அரசு திட்டம்

நாட்டில் ஸ்திரமற்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் போரில் அரசு குதித்துள்ள நிலையில் பெரும் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கட்சிகளைப் பிரித்து ஆட்களை இழுத்து அரசைப் பலப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயல்கையில் அவரது கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது.

இந்த அரசு மிகவும் ஸ்திரமாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடிருந்தாலும் இது உண்மையிலேயே ஸ்திரமற்றதொரு அரசாகவேயுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் பிளவுபடுத்தி அமைச்சுப் பதவி ஆசை காட்டி ஆட்களைத் தன்வசப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை ஜனாதிபதி மகிந்த உருவாக்க முயல்கிறார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிளவுண்டு மிகவும் பலவீனமானதொரு கட்சியாகிவிட்டதால் அடுத்த பிரதான எதிர்க்கட்சி, ஐ.தே.கட்சியா அல்லது ஜே.வி.பி.யா என்றதொரு கேள்வி எழும்நிலை உருவாகியுள்ளது. அத்துடன், இனியிருக்கப்போவது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஐ.தே.க.வை பிளவுபடுத்திய ஜனாதிபதி மகிந்த அதிலிருந்து மிகவும் முக்கியமான் 19 பேரை தன்வசப்படுத்தி அதில் 18 பேருக்கு நல்ல அமைச்சுப் பதவிகளை வழங்கியதன் மூலம் அவர்களைத் தொடர்ந்தும் தனது அரசில் தக்க வைத்துக்கொள்வார்.

அதேநேரம், ஐ.தே.க. விலிருந்து இவ்வளவு பேர் பிரிந்து சென்றமை அக்கட்சியின் எதிர்காலத்தையும் அக்கட்சி கட்டி வளர்த்து வந்த பாரம்பரியத்தையும் கேள்விக் குறியாக்கியதுடன் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கிருந்த செல்வாக்கிலும் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியென்ற அந்தஸ்தை ஐ.தே.க. இழந்துவிடுமோ என்ற அச்சம் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அக்கட்சியின் தலைவரோ, தனது தலைமைத்துவத்திற்கு ஏற்பட்ட போட்டியும் அச்சுறுத்தலும் நீங்கிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். கட்சிக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது குறித்து ரணில் விக்கிரமசிங்க சற்றும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

ஜே.வி.பி.யின் பூரண ஆதரவுடனும் அவர்களது முழு முயற்சியாலுமே மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானார். எனினும், மகிந்த ஜனாதிபதியானது முதல் அவர் மீது தனது செல்வாக்கை செலுத்த ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது.

ஒரு கட்டத்தில், இந்த அரசு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசா அல்லது ஜே.வி.பி. தான் ஆட்சி செய்கிறதா என்ற கேள்வி எழுமளவிற்கு நிலைமையிருந்தது.

இந்த நிலையிலிருந்து மகிந்தவை மீட்க அவரது சகோதரர்களும் மகிந்தவின் ஆலோசகர்களும் தீவிரமாக முயன்றனர். இவ்வேளையில் எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவ போட்டியும் பதவி ஆசையும் தலைதூக்கவே அதனை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகைளப் பிளவுபடுத்தி அவற்றிலிருந்து எம்.பி.க்களை இழுத்து அரசை பலப்படுத்த மகிந்தவின் ஆலோசகர்கள் திட்டமிட்டனர்.

இதேநேரம், ஜே.வி.பி.யின் கடும் நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் அவர்களது பிடியிலிருந்து வெளியேறி அவர்கள் எதிர்த்தாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாதளவுக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுவிட வேண்டுமென மகிந்த திட்டமிட்டார்.

ஜே.வி.பி.யின் பிடியிலிருந்து வெளியேறவும் ஏனைய கட்சிகளை பிளவுபடுத்தி எம்.பி.க்களை தன்வசப்படுத்தவும் ஜனாதிபதி மகிந்த, `தேர்தல்' என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தினார். புதிய தேர்தலென்றால் தனித்தே போட்டியிட வேண்டும் அதன்போது, கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து பெற்ற 38 ஆசனங்களில் மூன்றில் இரண்டு நிச்சயம் பறிபோய்விடுமென்பதை உணர்ந்த ஜே.வி.பி. தேர்தலை சந்திக்க பயந்தது.

தேர்தல் நடைபெறும், தேர்தல் நடைபெறப் போகிறதென மிரட்டி மிரட்டியே ஜனாபதி ஜே.வி.பி.யை ஓரங்கட்டினார். அதேநேரம், ஜே.வி.பி.யின் ஆதரவில்லாமல் இந்த அரசை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யை விட ஏனைய எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி மகிந்த பிளவுபடுத்தினார். மீண்டுமொரு தேர்தலென்றால் எம்.பி. பதவி கிடைப்பதே சந்தேகமென்ற நிலையிலிருந்த பலரும், புதியதொரு தேர்தலை சந்திப்பதை விட அரசுடன், இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசையும் ஸ்திரப்படுத்தி தங்களையும் வளப்படுத்த விரும்பினர்.

ஒருபுறம், தனது `மகிந்த சிந்தனை'யில் இல்லாத யுத்தத்தை நடத்திக் கொண்டு மறுபுறம் தனது அரசை ஸ்திரப்படுத்தும் தீவிர முயற்சியிலும் ஜனாதிபதி இறங்கினார்.

கிழக்கில் அடுத்தடுத்து படையினருக்கு கிடைத்த சில வெற்றிகள் மூலம், புலிகள் வெல்லப்பட முடியாதவர்களென்ற மாயையைத் தகர்த்து, அவர்கள் தோற்கடிக்கப்படக் கூடியவர்களென்பதை முழு உலகுக்கும் காட்டுவோமென ஜனாதிபதியும் அவரைச் சார்ந்தவர்களும் முழங்கினர்.

ஜனாதிபதி மகிந்தவை தங்கள் கைப்பொம்மையாக்கி தங்கள் சிந்தனையையே மகிந்த சிந்தனையாக்கிய ஜே.வி.பி, ஆரம்பத்தில் படையினர் பெற்ற வெற்றிகளையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பறைசாற்றியது. நாட்டை ஜே.வி.பி. யினர் முழு அளவிலான யுத்த நிலைக்கு இட்டுச் செல்லவும் விரும்பினர்.

வடக்கு - கிழக்கில் ஒவ்வொரு தடவையும் ஷெல் வெடித்த போதெல்லாம் புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் கிழக்கிலிருந்தும் பின்னர் வடக்கிலிருந்தும் புலிகளை விரட்டி விடுவோமென, ஜே.வி.பி. போர்ப் பிரகடனம் செய்தது. கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு கிடைத்த வெற்றிபோல் கொண்டாடவும் ஜே.வி.பி. முற்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி எம்.பி.க்களை ஒவ்வொருவராக மகிந்த தன் வசப்படுத்திக் கொண்டிருந்தார். இது ஜே.வி.பி.க்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கவே ஜே.வி.பி.க்கும் மகிந்தவுக்கு மிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

வேறு கட்சிகளிலிருந்து எம்.பி.க்களை உள்ளெடுத்து அரசை ஸ்திரப்படுத்துவதன் மூலம் தங்களை வெட்டிவிட மகிந்த தீர்மானித்துவிட்டதை ஜே.வி.பி. உணர்ந்த போது,தொழிற்சங்க போராட்டங்களை தீவிரப்படுத்தி நாட்டில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த ஜே.வி.பி. முற்பட்டபோது, ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ அவற்றையெல்லாம் வெட்டி ஆடினார்.

தனது மிரட்டல்கள் பலனளிக்கவில்லை என்பதை ஜே.வி.பி. உணரத் தொடங்கியது. ஆட்சியை கவிழ்த்து விடுவோமென மிரட்டத் தொடங்கியது. ஆனால், அதற்கு ஜனாதிபதி மசியவில்லை. ஆதரவை விலக்கினால் உடனடித் தேர்தலென அறிவித்து வந்தார்.

அதேநேரம், ஐ.தே.கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் தீவிரப்படுத்தியபோது ஐ.தே.க.வுக்குள் பெரும் பிளவு தோன்றும் நிலை உருவானது. புதிய தேர்தலொன்றுக்குச் செல்லாமலும், ஜே.வி.பி.யின், ஆதரவு இல்லாமலும் மகிந்தவின் அரசை பலப்படுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் போட்டி போட்டனர்.

தனது கட்சி பிளவுபடுவதை தடுக்கவும் அமைச்சுப் பதவிக்கு அலைபவர்களை கட்டுப்படுத்தவும் அவசர அவசரமாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டார். இதன் மூலம் கட்சி பிளவுபடுவதை தடுத்துவிட்டதாக நம்பிய ரணில் பின்னர் ஏமாந்தார். ரணிலின் ராஜதந்திரம் இதிலும் தோல்வியடைந்தது.

ஒருபுறம் எதிர்க்கட்சிகளெல்லாம் பதவி ஆசையில் அலரி மாளிகை முன்பாக வரிசையில் நின்றதால் மறுபுறம் தேர்தலை அவற்றால் ஒருபோதும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடித் தேர்தலொன்று வந்தால் இந்தக் கட்சிகள் (ஜே.வி.பி., ஐ.தே.க. உட்பட) படுதோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளதை நன்குணர்ந்த ஜே.வி.பி. தனது மிரட்டல்களை கைவிடத் தொடங்கியது.

கிழக்கில் படையினர் பெற்ற வெற்றிகளும் ஜனாதிபதிக்கு மிகவும் சாதகமாயிருப்பதை ஜே.வி.பி. நன்குணர்ந்ததால், தேர்தலின் போது அதனை அவர் தனது பிரசாரத்திற்கு நன்கு வாய்ப்பாக்கி கொண்டு விடுவாரென்பதும் ஜே.வி.பி.க்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

வடக்கு - கிழக்கில் படையினர் பெரும் தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே மகிந்தவுக்கு எதிராக பிரசாரங்களை முடுக்கி விடலாமெனவும் இல்லையேல் கிழக்கில் பெற்ற வெற்றிகள் அவருக்கே மிகவும் வாய்ப்பாகி விடுமென்பதையும் ஜே.வி.பி. உணர்ந்தது.

இதனால்தான், இராணுவம் வாகரை முதல் வெருகல் வரையான பகுதிகளை கைப்பற்றிய போது ஜே.வி.பி. எதுவும் கூறவில்லை. இராணுவம் பெற்ற வெற்றியை வானளாவப் புகழ்ந்து பாராட்டினால் அது ஜனாதிபதி மகிந்தவை பாராட்டுவதாகிவிடுமென்பதால், வாகரை வெற்றி குறித்து சாதாரணமாக அறிக்கையொன்றை விட்டுவிட்டு ஜே.வி.பி. பேசாமலிருந்துவிட்டது.

இன்றைய நிலையில் புலிகளின் கையோங்கி, இராணுவம் தோல்விகளை சந்தித்தால் மட்டுமே அது ஜே.வி.பி.க்கு வாய்ப்பாகும். ஜனாதிபதி யுத்தத்தை முன்னெடுக்கும் விதம் தவறானது. அவருக்கு புலிகளை யுத்தத்தில் வெற்றிகொள்ளும் ஆற்றலில்லையென பிரசாரம் செய்ய வேண்டுமென்றால், இனிவரும் நாட்களில் படையினர் தோல்வியைச் சந்திக்க வேண்டும்.மகிந்தவின் வீழ்ச்சிக்காக விரும்பியோ விரும்பாமலோ புலிகள் வெற்றி பெறுவதை ஜே.வி.பி.யும் இன்று எதிர்பார்த்திருக்கிறது.

மகிந்தவை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோற்கடிக்க ஜே.வி.பி.யும் ஐ.தே.கவும் தருணம் பார்த்துள்ளன. தங்களால் ஆட்சிக்கு வந்து தங்கள் பலத்தில் அரசமைத்த மகிந்த, இன்று தங்களையே ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு எதிர்க்கட்சிகளைப் பிளந்து ஆட்களை இழுத்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை நடத்துவதை ஜே.வி.பி.யினால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் தான், அரசுக்குள் ஏற்பட்டிருந்த குழப்பநிலை பூதாகரமாகி இன்று அது எரிமலையாக வெடித்துள்ளது. ஜனாதிபதியாக மகிந்த வரக் காரணமாயிருந்தவர்கள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி மற்றும் அநுரா பண்டாரநாயக்கா. அவர்களையே அதிரடியாக அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கி ஜனாதிபதி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்தோரை வரவேற்று அமைச்சர்களாக்கியதில் மங்கள சமரவீரவுக்கு உடன்பாடில்லை. இதனால், அரசில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தியடைந்துள்ளபோதும் மகிந்த இன்று தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்வதால் மௌனம் சாதிக்கின்றனர்.

ஆனாலும், அமைச்சர்களான மங்கள, அநுரா, ஸ்ரீபதி ஆகியோர் வெளிப்படையாக அரசை விமர்சித்திருந்தனர். அத்துடன், தனக்கும் மங்களவுக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக அநுரா தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், ஜனாதிபதியின் சகோதரர்களை பாராளுமன்றில் மறைமுகமாக அநுரா சாடியபோது பிரச்சினை தீவிரமடைந்தது.

இதையடுத்தே இந்த மூவரையும் அமைச்சர்கள் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளார். அதேநேரம், இந்த மூவரும் வெளியேறினாலும் இவர்களது அமைச்சுப் பதவியைக் காட்டி ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் ஐந்தாறு பேரை அரசில் இணைத்துவிடலாமென ஜனாதிபதி மகிந்த கருதுகின்றார்.

சுதந்திரக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை எதிரணியினர் தங்களுக்கு வாய்ப்பாக்கி கொள்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் காத்திருப்பதாகக் கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மூன்று அமைச்சர்களையும் வெளியேற்றியதன் மூலம் அரசிலும் பிளவேற்பட்டு விட்டதென்பதை மறைக்கவே ஜனாதிபதி முயல்வார். அதற்காக, எதிர்க் கட்சிகளிலிருந்து மேலும் மேலும் எம்.பி.க்களை தன்வசப்படுத்த முயல்வதுடன் போர்முனையில் மேலும் வெற்றிகளைப் பெற்று மக்கள் மத்தியில் தன்னை பெரும் `ஹீரோ'வாக காண்பிக்கவும் ஜனாதிபதி முற்படக்கூடும்.

அரசு மிகவும் ஸ்திரமாயிருந்தால், இந்த மூன்று அமைச்சர்களை விலக்கியதாலும் ஏற்படப் போகும் விளைவுகளையும் ஜனாதிபதி மகிந்த இலகுவாக சமாளித்துவிடலாம். ஆனால், பதவிக்காக அரசுடன் இணைந்து கொண்டவர்கள் நாளை வேறு வாய்ப்புகளுக்காக அரசைவிட்டுப் போய்விடலாமென்ற நிலை நிலவுவதால் யுத்த முனையில் வெற்றிகளைப் பெற்று தனது நிலையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தவே ஜனாதிபதி முயலக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

படையினருக்கு கடந்த சில மாதங்களில் மிக நவீன ஆயுதங்கள் வந்து சேர்ந்துள்ளன. மூன்று கிபிர் விமானங்களும் நான்கு `மிக்' விமானங்களும் புதிதாக வந்துள்ளன. வன்னியில் இவை கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி வருகின்றன.

கிழக்கில் புலிகள் தோல்வியடைந்துவிட்டதால் அவர்கள் வடக்கில் பாரிய தாக்குதல்களை நடத்தக் கூடுமெனக் கருதும் அரசு, யாழ். குடாநாட்டில் தனது படைபலத்தை பெருமளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கிளாலி, முகமாலை, நாகர் கோயில் பகுதிகளில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பாரிய தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் பீரங்கிகளும், ஆட்லறிகளும், பல்குழல் ரொக்கட் செலுத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் கடற்புலிகள் மிகவும் பலமாயிருப்பதால் குடாநாட்டினுள் அவர்கள் கடல்வழியாகத் தரையிறங்குவதை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரையோரங்களிலும் ஆட்லறிகளும் பீரங்கிகளும் வரிசையாக வைக்கப்பட்டுமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கை முழுமையாக புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கை மூலம் இராணுவ வெற்றிகளைப் பெற்று அதன் மூலம் தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களிலிருந்து விடுபட ஜனாதிபதி முயலக்கூடும்.

ஆனால்,படையினர் தோல்விகளைச் சந்தித் தால் அரசுக்கெதிராக அதனை எதிர்கட்சிகள் பயன்படுத்தக் கூடும்.

நவீன ஆயுதங்களின் வருகை, கிழக்கில் கிடைத்த சில வெற்றிகள், தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் என்பவற்றால் தற்போதைய நிலையில் புலிகளுடன் பேச்சுக்களுக்கு செல்வதை விட போருக்குச் செல்வதிலேயே அரசு நாட்டம் காட்டுகிறது.

அதேநேரம், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட போது வடக்கு - கிழக்கில் படையினர் எங்கெங்கு நிலை கொண்டிருந்தார்களோ அந்த இடங்களுக்கு படையினர் மீண்டும் சென்றால் மட்டுமே அரசுடன் பேச்சென புலிகளும் நோர்வே அனுசரணையாளர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டதால் புலிகளும் பேச்சுக்களுக்கு செல்லமாட்டார்களென்பது தெளிவு. இதனால், போர் மேலும் தீவிரமடையும் சாத்தியமுள்ளது.

யாழ். குடாநாட்டை புலிகள் முற்றுகையிடலாமென்ற அச்சத்தால் முல்லைத்தீவில் கடற்புலிகளின் முகாம்களை இலக்கு வைக்க படையினர் முயல்கின்றனர். கடற்புலிகளின் அச்சுறுத்தல் இம்முறை முழு அளவிலிருக்குமென படையினர் கருதுகின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் வெடித்த கடும் மோதல் இரு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், அந்த மோதல்களில் கடற்புலிகள் பங்கேற்கவேயில்லை.

இதனால், மீண்டும் குடாநாட்டை புலிகள் முற்றுகையிட முயன்றால் கடற்புலிகள் முழு அளவில் களத்திலிறங்குவரென படையினர் கருதுகின்றனர். அதேநேரம், புலிகள் தங்கள் ஆட்லறிகள் மூலம் பலாலி விமானத் தளத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்து விடுவரெனவும் படையினர் கருதுகின்றனர்.

அவ்வாறானதொரு நிலையேற்பட்டால் குடாநாட்டுக்கான அனைத்து விநியோகமும் முற்றாக ஸ்தம்பிதமடையும். தற்போது, குடாநாட்டில் உணவுப் பொருட்களுக்கு மிக மோசமான தட்டுப்பாடு நிலவுகையில் புலிகளின் முற்றுகைப் போர் தொடங்கினால் மக்கள் பசி, பட்டினி நிலைக்குச் சென்றுவிடுவர். இதனை நன்குணர்ந்தே குடாநாட்டில் இவ்வாறானதொரு உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படுத்தப்பட்டு அது தொடர்ந்தும் பேணப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வாகரையில் பெரும்பட்டினி நிலையும் மருத்துவ வசதியின்மையும் ஏற்படுத்தப்பட்டதால் புலிகள் வாகரையிலிருந்து விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டது போல் குடாநாட்டிலும் புலிகளுக்கு வெளியுலக நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களது முற்றுகையை தடுக்கும் விதத்தில் இங்கும் உணவுப் பொருட்களும் மருத்துவ நிலைமையும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினக்குரல், Feb 11, 2007

Please Click here to login / register to post your comments.