யாழ். குடாநாட்டு அவலங்கள்

ஆக்கம்: கி.சிவனேசன் எம்.பி

இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 22 ஆம் திகதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைவதுடன், யாழ். குடாநாட்டின் தரை வழிப்பாதை இராணுவத்தால் மூடப்பட்டு கடந்த 11 ஆம் திகதியுடன் ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையில் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளினால் இந்த ஒப்பந்தம் முற்றுமுழுதாக மீறப்பட்டு வட,கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இனம் மிகக் கொடுமையான மனிதப்பேரவலத்திற்குள் வாழும் துயரம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வட,கிழக்கு பகுதிகளில் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் நாடு முழுவதிலும் 5 இலட்சம் மக்களுக்கு மேல் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளமையையும், இதில் 2006 இல் மட்டும் அரசின் பிரகடனப்படுத்தப்படாத போர் நடவடிக்கையால் 213,000 மக்களுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் மட்டக்களப்பில் 76,000 பேரும், வாகரையில் 30,000 பேரும், திருகோணமலையிலிருந்து 26,000 பேரும் உள்ளடங்குவதுடன் ஏனையவர்கள் வடபகுதியினர் ஆவர். ஏற்கனவே இடம்பெற்ற போர்ச்சூழலால் 316,000 பேரும் தொடர்ந்தும் இடம்பெயர்வு வாழ்வையே வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் மனிதாபிமானப்பணிகள் உதவி ஆணையாளர் தெரியப்படுத்தியுள்ளார்.

ஒப்பந்தம் நடைமுறையிலுள்ள 2006 இல் மட்டும் 4303 பேர் கொல்லப்பட்டதுடன், வயது வந்தவர்களில் 908 பேரும் சிறுவர்கள் 2082 பேரும், 106 வாகனங்களும் கடத்தப்பட்டுள்ளன என அறிய முடிகிறது.

குறிப்பாக 2006 இல் யாழ். மாவட்டத்தில் மட்டும் 527 பேர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2006 இல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையும் 280 பேருக்கு மேல் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிய முடிகிறது. இந் நடவடிக்கைகள் 11.08.2006 இற்கு பின்னர் அதிகரித்து சென்றமையை அவதானிக்க முடிகிறது.

குறைந்தது 5 மணித்தியாலத்துக்கு ஒருவர் கொலை செய்யப்படும் கொலைக் கலாசாரம் அரச படைகள் சூழ்ந்திருக்கும் வட,கிழக்கு பிரதேசத்தில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இக் கொலைகளில் ஆட்கடத்தல்களில் மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஏதுமறியாத பொதுமக்கள், நாளாந்த உழைப்பாளிகள் என உள்ளடங்குவது தமிழினத்துக்கு பேரிழப்பாகும்.

இத்தகைய உயிருக்கு உத்தரவாதமற்ற இராணுவச் சூழலில் வாழும் தமிழினம் வெள்ளை வாகனத்தில் வரும் புலனாய்வாளர்களிடமிருந்தும் ஆயுத குழுக்களிடமிருந்தும் தம் உயிரை பாதுகாக்கும் நோக்கமாக 60 பேர் வரையில் யாழ் .மனித உரிமை ஆணைக்குழுவின் மூலம் நீதிமன்றங்களில் சரணடைந்து யாழ். சிறைச்சாலையில் வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இச்சிறைச்சாலையில் 250 இற்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதால் சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் இன்றி தொற்றுநோய்க்குள்ளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர் பாதுகாப்புக்காக சிறை சென்றவர்கள் அங்கு உயிர் துறக்கும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வகையான மனித அவலத்தின் மத்தியில் அடிப்படை வசதிகளற்ற குறிப்பாக உயிர் அச்சத்துடன் பட்டினி வாழ்வை எதிர்கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கான மனிதாபிமான பணிகளை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன் தொண்டு நிறுவனங்களினுடைய பணியாளர்கள் கொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் மனித உரிமையை பேணுபவர்களுக்கு கிடைக்கும் அரச அட்டூழியங்களாகும்.

இக்காலங்களில் அரச படைகளால் மனித உரிமைகள் சட்டத்தரணி ரேமெடியஸ் தாக்கப்பட்டமையும் யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கடமையாற்றிய சந்திரசேகரா போரஸ், பொறுப்பாளர் சுவேந்திரராசா போன்றோர் தொலைபேசி மூலம் பயமுறுத்தப்பட்டமையும்ம் நீதிக்காக உழைத்த நீதிபதி ஷ்ரீநிதி நந்தசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டமையும் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு அரசு மேற்கொள்ளும் அநீதிகள் எனலாம்.

மேற்குறித்த விடயங்களை புறந்தள்ளி அரசு தனது பொய் முகத்தை உலகிற்குக் காட்டி ஏமாற்றி வருகிறது. இதனாலேயே ஊடக சுதந்திரத்தை இல்லாதொழித்து சர்வதேச அரங்கில் அரசு மேற்குறித்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை அழிப்பதுடன் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கியும் ஊடகத்தின் வெளிப்படுத்துகைக்கான பொருட்களை பெற்றுக் கொள்ள தடைகளும் விதிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ்.குடாநாட்டில் 4 பக்கங்களில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்படும் பத்திரிகைகளுக்கு மக்கள் வரிசையில் நின்றே பெறும் நிலையேற்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்காதவர்கள் விற்பனை முகவரால் ஒட்டப்பட்ட 4 பக்கங்களையும் பார்த்துச் செல்கின்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை யாழ். குடாநாட்டில் எவ்வளவு காலத்திற்கு பத்திரிகை வெளியிடப்படும் எனும் ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வடக்கு கிழக்கு இராணுவத் தாக்குதல்களால் 100 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் சேதத்துக்குள்ளாகியும் சில பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளமையால் கல்வி கற்பதற்கான சூழலை இழந்துள்ளதுடன் பாடப்புத்தகங்களோ, கற்றல் உபகரணங்களோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அச்சத்துடனேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசத்திலுள்ள மருத்துவ மனைகளோ, சுகாதார நிலையங்களோ சேவையாற்றக்கடிய வகையில் போதிய வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன. உரிய காலத்திற்குரிய மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகளில் இல்லாமையே இதற்குக் காரணம். இதனால் இடம்பெயர்ந்த சுகாதார வசதியற்ற சூழலில் வாழும் மக்கள் தொற்று நோய்களால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடல் தொழிலாளர்கள், விவசாயிகள், நாளாந்த உழைப்பாளிகள் ஏ-15, ஏ-9 பாதைகள் இராணுவம் மூடியபின் மிகவும் துன்பமான வாழ்வை வாழ்வதுடன், பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நடைப்பிணங்களாக காணப்படுகின்றனர். தொழில் இன்மையால் வருமானம் எதுவும் இன்றி தமக்கான உணவைத்தானும் கொள்வனவு செய்ய முடியாத பொருளாதார வலுவற்ற குடும்ப வாழ்வையே வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் 5 வருடங்களை நிறைவு செய்யும் போர்நிறுத்த ஒப்பந்தத்தால் வட,கிழக்கிற்கு கிடைத்த நன்மை என்ன? அரசு விமான குண்டு வீச்சையோ, எறிகணைத் தாக்குதல்களையோ நடத்தாது விட்டனரா? வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளாது இருந்தனரா? யுத்த நிறுத்தம் மேற்கொண்டு 30 நாட்களில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டனவா? தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே கட்டுப்பாடோடு இருந்தனரா? தமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் பணிக்காக தமிழர் தாயகத்தில் நடமாட விட்டனரா? ஒப்பந்த காலத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா?

இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தாத அரசு'தமிழர் தாயகத்தின் மீது பிரகடனப்படுத்தாத போரை நடத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் விமானத் தாக்குதல்களையும் எறிகணை தாக்குதல்களையும் நடத்தி கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களை ஆக்கிரமித்து மக்களை இடம்பெயரச் செய்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் படைகளும் ஆயுதக் குழுக்களும் இணைந்து கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் செய்வதுடன் மக்களின் சொத்துகளை கொள்ளையடித்தும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் மூலம் சித்திரவதை செய்தும் சிங்கள பௌத்த மேம்பாட்டை தமிழர் தேசங்களில் திணிப்பதற்கு வசதியாக வட கிழக்கு தாயகத்தை பிரித்தும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பையும் தமிழின அழிப்பையும் ஏற்படுத்தும் அரச பயங்கரவாதத்தை சர்வதேசம் தொடர்ந்தும் பார்த்து ஏற்றுக் கொள்ளப் போகிறதா? எனும் கேள்வி இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வேளையில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில், "இலங்கை அரசின் பொலிஸார் தனது மக்களை பாதுகாக்கும் திறமையற்றது. மேலும், பொதுமக்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களும் பொலிஸாரின் பங்களிப்புடனேயே விடுக்கப்படுகிறது" என சுட்டிக்காட்டியதுடன் மனித உரிமைச் சபை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள், அனைத்துலக சமூகம் என்பன இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி கொலை அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுள்ளது.

இதேபோன்று கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் செல்வி கிலானே ரத்தோ ஊடகம் ஒன்றுக்களித்த செவ்வியில் கீழ்வருமாறு கூறுகின்றார். "வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு பேச்சுமூலம் தீர்வு காணவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட விடயம் பேச்சுகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இணைத் தலைமை நாடுகளின் விருப்பமாகும்.

மேலும், "அனைத்து மக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசு நீதி நியாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பின் நன்நடத்தையினை உறுதி செய்ய வேண்டும். மேற்குறித்தவாறே அரசு இனப்பிரச்சினைக்கு ஓர் அமைதிவழியிலான தீர்வைக் காணவேண்டும் என்பதைவிட ஷ்ரீலங்கா மீதான பிரித்தானியாவின் மிகப் பெரும் விருப்பம் வேறொன்றும் இல்லை" என அந்நாட்டு வெளிவிவகாரத்துறை கொமன் வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் காவெல் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய சர்வதேச சமூகத்தின் கருத்து வெளிப்பாடுகள் அனைத்தும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் ஒப்பந்த மீறல்களையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதையே உணர்த்துகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் இன்றுவரையும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள த மிழ் பேசும் இனம், இறைமையுள்ள சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திர தமிழர் தேசத்தை அமைத்துக் கொள்ள அங்கீகாரத்தைத் தருவதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். வெறுமனே அறிக்கைகளையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துவதை நிறுத்தி இலங்கை அரசின் உண்மைத்தன்மையை கண்டறிந்து அரசுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி தமிழ் பேசும் இனத்தின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். இதனையே சர்வதேச சமூகத்தின் மனிதாபிமான பணியாக தமிழினம் எதிர்பார்க்கிறது.

Please Click here to login / register to post your comments.