அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடிய தமிழ் அரசர்கள்

ஆக்கம்: த.மனோகரன்
கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு இன்றுடன் 192 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கைத் தீவில் தனியரசுகளாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் கைப்பற்றினர். அந்நியருக்கெதிராக இறுதிவரை போரிட்டு மாண்டவன் யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியன் என்பது வரலாறு.

சுயலாபம் கிட்டும் என்ற ஆசையால் காக்கை வன்னியன் என்ற தமிழனே சங்கிலியனைப் போர்த்துக்கேயர் தோற்கடிக்கக் காரணமாயமைந்தான் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதிவரை அந்நியரை எதிர்த்து நின்ற பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அரசனுக்கு உண்டு.

அதேபோன்று, வன்னித் தமிழரசரும் அந்நியருக்கெதிராக போராடிய வீர வரலாறு கொண்டவர்கள். சிற்றரசாக இருந்த போதும் போர்த்துக்கேயராகவோ, ஒல்லாந்தராகவோ வெற்றி கொள்ளப்படாத பெருமை கொண்டது வன்னித் தமிழ் அரசு. இறுதியில், ஆங்கிலேயருடன் நடைபெற்ற போரில் வன்னியரசு முறியடிக்கப்பட்டது வரலாறு.

தமிழ் அரசுகள் அந்நியருக்கெதிராகப் போராடியபோது கோட்டை இராச்சியத்தை ஆண்ட சிங்கள அரசர்கள் போர்த்துக் கேயரை வரவேற்றதுடன் மட்டுமல்ல, தமது இராச்சியத்தையே அவர்களுக்குத் தாரை வார்த்தமை வரலாற்றுப் பதிவாகும்.

இவ்வாறு இலங்கையின் கரையோர இராச்சியங்கள் அந்நியராட்சிக்கு உட்பட்ட போதும் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியம் சுதந்திரமாக விளங்கியது. கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தை ஆங்கிலேயர் பறித்தார்கள் என்பது வரலாற்று நிகழ்வு.

கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தைப் பறித்து அந்த சுதந்திர இராச்சியத்தை ஆங்கிலேயருக்கு அடிமைப்படுத்தியதில் பெரும் பங்கு சிங்களப் பிரதானிகளையே சாரும்.

கண்டியை ஆட்சி செய்த அரச பரம்பரை நாயக்கர்கள் தமிழர்களாக இருந்தமையால் இன வெறியுடன் செயற்பட்ட சிங்களப் பிரதானிகள் சொந்த நாட்டையே அந்நியரிடம் அடிபணியச் செய்யக் காரணிகளாகினர்.

தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாகட்டும் என்றபடி சிந்தித்த சிங்களப் பிரதானிகள் நாட்டை காட்டிக் கொடுத்த தேசத் துரோகிகளாகவே வரலாற்றில் பதியப்படும் தகைமை பெற்றவர்கள்.

கண்ணுச்சாமி என்ற தமிழ் இளவரசனே ஷ்ரீ விக்கிரமராஜ சிங்கன் என்ற இறுதிக் கண்டி அரசனாக விளங்கினான். இறுதிவரை ஆங்கிலேயருக்கெதிராகப் போரிட்டு சிங்களப் பிரதானிகளின் துரோகத் தனத்தால் பிடிபட்டு தென்னிந்தியாவிலுள்ள வேலூருக்கு கண்டி அரசன் நாடு கடத்தப்பட்டான். இனவெறியுடன் செயற்பட்ட, இறுதியில் சிங்கள இராச்சியமென்று மார்தட்டிக் கொள்ளும் கண்டி இராச்சியத்தை அந்நியருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பெருமை சிங்கள பிரதானிகளையே சாரும்.

1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி ஷ்ரீ விக்கிரமசிங்கன் என்ற கண்டி இராச்சியத்தின் அரசன் ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டான். கண்டி இராச்சியம் அன்றுடன் அழிந்தது. இலங்கைத் தீவு முழுவதும் அந்நியர் வசமானது.

இலங்கை வரலாற்றில் காக்கை வன்னியன் என்ற ஒரு தமிழனைத் தவிர, வேறு எந்தவொரு தமிழனும் சொந்த நாட்டின் துரோகியாக வரலாற்றில் பதிவாகி இல்லை.

ஆனால், கோட்டை இராச்சிய சிங்கள அரசனும், கண்டி இராச்சியத்தின் சிங்கள பிரதானிகளும் நாட்டைக் காட்டிக் கொடுத்து அந்நியருக்கு அடிமைப்படுத்திய பட்டியலில் நீண்டு செல்கின்றனர்.

இலங்கையின் தேசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பெற வேண்டியோர் வரிசையில் யாழ்ப்பாணத்து தமிழ் அரசன் சங்கிலியனும், வன்னியின் தமிழரசன் பண்டாரவன்னியனும் கண்டியின் தமிழ் அரசன் ஷ்ரீ விக்கிரமராஜசிங்கனும் ஆவர்.

சுதந்திரத்தைப் பறிப்பதை எதிர்த்து இறுதிவரை போராடிய தமிழ் அரசர்களை நாடு மறந்து விட்டது. நாமும் மறந்து விடக் கூடாது. சுதந்திரத்தின் அர்த்தம் புரியாது சுதந்திர வீரர்களாக உலா வருவோர் ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடியவர்களை மறந்து அல்லது மறைத்து விடுவது வரலாற்றுக் களங்கமாகவே அமைந்து விடுகின்றது.

மார்ச் மாதம் 02 ஆம் திகதி இலங்கையின் துரோக வரலாற்றில் நினைவு நாளாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு நாளாகும்.

Please Click here to login / register to post your comments.