நான் ஏன் எழுதுகிறேன்?

ஆக்கம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும்.

வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர்.

அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை.

மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர்.

பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய் யாவையும் சுத்தம் செய்து, காம்பு நீக்கி, அழகாக மற்றொரு தாம்பாளத்தில் அடுக்கி வைத்தனர். பழைய ஏட்டுக் கட்டு ஒன்றைத் தாம்பாளத்தில் என் தந்தையாரின் மாமனார் வைத்தார். அத்துடன் ஒரு புதிய பனை ஓலை. அருகில் இரும்பாலான எழுத்தாணி.

ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் மணந்தது. கற்பூரமும் ஏற்றினர்.

சிவாச்சாரியார் சிவசுப்பிரமணியம் முதலில் கருவறையில் பூசை செய்தார்.

பின்னர் வந்து முன் மண்டபத்தில் அமர்ந்தார். அவர் பக்கத்தில் என் தந்தையார் அமர்ந்தார். எதிரே என் தாயாரும் பிறரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

என் தந்தையார் தம் மடியில் என்னை இருத்தினார். என் வலது கையின் சுட்டு விரல் நுனியைத் தம் கைவிரல்களால் பிடித்து, தாம்பாளத்தில் அரிசித் தட்டில் எழுதுவித்தார். அனா... அனா.... அனா... என்று சொல்லியவாறே, அ என்ற எழுத்தை எழுதுவித்தார். எனக்கும் எழுத்துக்கும் இயற்கையைச் சாட்சியாக்கித் தந்தையார் ஏற்படுத்திய தொடர்பு அங்குதான், அப்பொழுதுதான்.

அதன் பின்னர் புதிய பனை ஓலையை ஏடாக்கி, அதில் அகரம் முதலாத அஃகேனம் ஈறாக இருந்த எழுத்துகளை என் தந்தையார் சொல்ல நான் திருப்பிச் சொன்னேன். எனக்கு ஏடு தொடக்கிய நாள் அன்று. புதிய பனை ஓலையில் இரும்பு எழுத்தாணியால் என் தந்தையார் விரலுள் அகப்பட்ட என் விரல்கள் கிறுக்கின.

பின்னர், கிடுகு வேய்ந்த எம் மண் வீட்டில், சாணம் பூசிய திண்ணைத் தரையில், மண் பரப்பி, என் சுட்டுவிரலால் எழுதக் கற்பித்தவர் என் தாயார்.

ஒரு பிடி சோறு, ஒரு வாழைக்காய்ப் பொரியல் துண்டு, நிலவின் ஒளியில் வீட்டு முற்றத்தில் ஓடுவதும் பிடி சோறு தின்பதும், பொரியலைக் கடிப்பதும், மணற் பரப்பில் அனா ஆவன்னா எழுதுவிப்பதுமாய் என் தாயாருடன் சில மாதங்கள் கழிந்திருக்கவேண்டும்.

எனக்கும் எழுத்துக்கும் என் மூன்றாவது வயதில் இப்படித்தான் நெருக்கம் ஏற்பட்டது.

படிப்படியாகச் சிலேற்றிலும் கொப்பியிலும் எழுதத் தொடங்கினேன். என் கையெழுத்தை விட என் அக்காவின் கையெழுத்து அழகாக இருக்கும். தாயார் சுட்டிக் காட்டுவார், அழகாக எழுதுமாறு காட்டித் தருவார்.

ஆறாவது வகுப்பில், என் சக மாணவர் தங்கராசா பக்கத்தில் அமருவார். முத்துமுத்தான அவருடைய எழுத்துகள் என்னைக் கவர்ந்தன. அவரைப் போல எழுத ஆர்வம்கொண்டேன். வகுப்பில் குறிப்பு எழுதுவதில் அவர் வல்லவர். நான் விளையாட்டுத்தனமாக இருப்பேன். கவலையீனமாக இருப்பேன். அவர் கவனமாகக் குறிப்பு எழுதுவார்.

வண்ணார்பண்ணையில் எங்கள் வீட்டுக்குக் கிட்டத்தான் அவரின் வீடு. மாலையில் அவரிடம் போய் அவர் கொப்பியை வாங்கிவந்து பாடக்குறிப்பைப் பார்த்து எழுதியபோது அவர் கையெழுத்துப் போலவே எழுதும் பழக்கம் வந்தது. என் எழுதும் முறையில் திருத்தத்தைக் கொண்டுவந்தவர் தங்கராசா. யாழ்ப்பாணத்தின் சிறந்த ஓவியர்களுள் ஒருவராக, கட்டடக் கலை வல்லுநராக இப்பொழுதும் யாழ்ப்பாணத்தில் தங்கராசா இருக்கிறார்.

என் தந்தையார் 1952இல் யாழ்ப்பாணத்தில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். பள்ளி முடிந்ததும் மாலை வேளைகளில் அங்கு போவேன். அச்சடித்த தாள்களில் பிழை திருத்தம் செய்துகொண்டிருப்பவரோடு என்னைச் சேர்த்து விடுவார். பிழைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார். பிறர் கண்டு பிடிக்காத பிழை ஒன்றைக் கண்டுபிடித்துச் சொன்னால், தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று போளி வாங்கித் தருவார். பிழை நீக்கி எழுதுவதற்குப் பழக்கியவர் என் தந்தையார்.

வட்டுக்கோட்டைப் புலவர் சிவபாதசுந்தரனார், புங்குடு தீவு வித்துவான் ஆறுமுகம் போன்ற பலர் என் தந்தையாரிடம் வருவர். எழுத்து மற்றும் பிழை திருத்தப் பணிகளில் அவர்களுடன் சேர்ந்துகொள்வேன். அதுவே பின்னர் என் எழுத்துகளுக்கு செம்மையைத் தந்தது.

பத்தாவது படித்துக்கொண்டிருந்த காலத்தில், என் தங்கையின் பள்ளியில் ஆண்டு மலருக்கு ஏதாவது எழுதித் தருமாறு தங்கையைக் கேட்டிருந்தனர். ஏதாவது எழுதித் தாங்கோ அண்ணை என அவர் என்னைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள் வந்து, அன்றே கடைசி நாள் என்றார்.

கா கா என்று கரைந்தது காகம் எனத் தொடங்கி, எட்டு வரிகளை எழுதி முடித்துத் தங்கையிடம் கொடுத்தேன். அவரும் அந்த வரிகளைத் தன் ஆசிரியரிடம் கொடுக்க, பள்ளி மலரில் என் தங்கை பெயரில் கவிதையாக வெளிவந்தது. எனக்கு எழுதும் ஆற்றல் உண்டு என நம்பி, என்னை விடாமல் கேட்டு, எழுதுவித்த என் தங்கையே என் எழுத்து முதன்முதலாக அச்சில் வரக் காரணமானார்.

அவ்வாறு எழுதுதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் என் வகுப்புத் தோழர் சண்முகசுந்தரம். தான் பார்த்த திரைப்படக் கதையை எனக்குக் கூறுவார். தான் படித்த பாரதியாரின் கவிதை வரிகளைக் கூறுவார். பாரதிதாசனின் கவிதை வரிகளைக் கூறுவார். நான் சுவைத்த வரிகளை அவரிடம் கூறுவேன். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதுகையில் கவிதை நடை இருவரது கடிதங்களிலும் வெளிப்படும். இப்பொழுது தோழர் சண்முகசுந்தரம் நோர்வேயில் பல்கலைக்கழகம் ஒன்றில் வேளாண் துறையில் பேராசிரியராக உள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன். தொடக்க நாள்களில் லூயி பிஷரின் காந்தியடிகள் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. காந்தியடிகளை எனக்கு முழுமையாக அறிமுகம் செய்த நூல் அதுதான். காதி பவன் சென்று காந்தியடிகளின் நூல்கள் பலவற்றை வாங்கிப் படித்தேன். புவிக்குள்ளே முதன்மையுற்றாய் என்ற தலைப்பில் காந்தியடிகளைப் பற்றி நான் எழுதிய கட்டுரை, 1960 அக்டோபர் 2இல் யாழ்ப்பாணம் ஈழநாடு இதழில் வெளியானது. அப்பொழுது ஈழநாடு ஆசிரியராக இருந்தவர் திருவையாறு கே. பி. ஹரன். நேரே அவருக்கு அனுப்பினேன். திருத்தல் நீக்குதலின்றி வெளியிட்டார். மார்கழி விடுப்புக்கு யாழ்ப்பாணம் போனபொழுது அவரைப் பார்த்தேன். தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்தார். 19 வயதில் என் எழுத்து யாழ்ப்பாணத்தில் அரங்கேறியது.

பின் திரும்பிப் பார்க்கவில்லை.

கதைகள் எழுதும் கற்பனை வளம் எனக்கு இருக்கவில்லை.

தகவல்களைத் தொகுத்துச் சுவைபடச் சொல்லும் ஆற்றல் இருந்ததாக நம்பிக்கொண்டேன். சில நேரங்களில் அவை கவிதை வரிகள் போலவும் தோன்றின. கவிதையாக வந்த பொழுது எழுதிவைத்தேன்.

என் அயலில் நிகழ்ந்தழவும் என்னைப் பாதித்தனவும் என் எழுத்துகளுக்கு நெம்புகோலாயின. நான் கேட்ட சொற்கள், படித்த வரிகள், எனை உந்தும் மொழியாயின. பழமொழிகளும் பாடல்களும் சந்தத்தையும் ஓசையையும் சேர்த்தன. பரந்து சிதறிய தகவல்கள் எனக்குச் செயல்களமாயின. நூல்கள் என் சிந்தனையைத் தூண்டின. என் நண்பர்கள் என் எழுத்துகளை ஊக்குவித்தனர்.

Please Click here to login / register to post your comments.
Comments (1)
The Indian government especially the congress government has been unsympathetic to the just cause of the Tamils in eelam and has taken mindless action by sending the IPKF in 1980's and this action has been quite strange as the Tamils and Hindu brother from India had been deployed in main land lanka to eliminate fellow tamilians and hindu's. This attitude is quite strange when compared to other struggles around the world, for example for the Palestinians cause all the Arab-Muslim countries have rallied behind Palestine and creation of the Muslim state in middle east.Such mindless and discarding attitude shown by the then congress government shows how disconcerted it is towards Hindu struggles around the world.
venkatram prasad r from India on Nov 01, 2006 18:20:58 GMT