சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது

ஆக்கம்: டி.சிவராம் (தராக்கி)
புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்)

புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத்துமாத்தாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் அரசியல் தீர்வில் உண்மையான நாட்டமெதுவும் கிடையாது. அதனாலேயே அவர்கள் தமது சார்பில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைப்பதில்லை. இலங்கையில் அமைதிப் பேச்சுகள் குழம்புவதற்கு இதுவே முக்கிய காரணமாகிறது! - என்பதே சிங்களப் பேரினவாதிகளும் ஸ்ரீலங்கா அரசும் தங்களுடைய அடாவடித்தனங்களை நியாயப்படுத்தவென சர்வதேச சமூகத்திடம் எடுத்தியம்பி வந்த விளக்கமாகும்.

இனப்பிரச்சினை தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இருட்டடிப்புச் செய்வதற்கும் விடுதலைப் போராட்டத்தை சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட பயங்கரவாதமாகக் காட்டுவதற்கும் மேற்படி வாதம் அவர்களுக்கு மிகவும் பயன்பட்டுவந்தது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே விடுதலைப் புலிகள், தமிழர் கடந்த 50 வருடங்களாக கடந்து வந்த அரசியல் பாதையின் முக்கிய மைல்கற்களை அடித்தளமாகக் கொண்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை என சர்வதேச தமிழ் சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசிடம் கையளித்தனர். இதைக் கண்டதும் சிங்களத் தேசியவாதிகள் போட்ட பெரும் கூச்சலின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

சிங்களப் பேரினவாதிகளின் அபிமான நாயகனான கதிர்காமர் அமெரிக்கா மற்றும் இந்தியத் தலைநகரங்களுக்குச் சென்று 'இது இடைக்காலத் தீர்வல்ல தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான நகல்திட்டம்" - என்று கொக்கரித்தார்.

சந்திரிகாவும் கதிர்காமரும் ஜே.வி.பி.யும் சிங்களப் பேரினவாதப் புத்திஜீவிகளும் அத்தோடு நடுநிலையாளர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில சிங்கள அறிஞர்களும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற சில தமிழர்களும் சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாக புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை நிராகரித்து விடும் என திட்டவட்டமாக நம்பினர்.

ஏனெனில், அடக்கு முறைக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களுக்கு தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு புலிகளின் திட்டம் முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும், அதனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டா என்பதும் மேற்படியாரின் நம்பிக்கையாக இருந்தது.

புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவை சர்வதேச ஆதரவோடு புறக்கணித்து புலிகளை வழிக்குள் கொணரலாம் என எண்ணிய சந்திரிகாவும் அவரது மதியுரைஞர்களும் 'அதைப்பற்றிப் பேசலாம்; ஆனால், நாம் முன்வைக்கின்ற மாற்றுத் தீர்வுத்திட்டத்தைப் பற்றியும் பேசினால் என்ன?" - எனப் புலிகளைக் கேட்குமளவிற்கு இன்று நிலைதடுமாறியுள்ளனர்.

இங்கு ஏலவே குறிப்பிடப்பட்டதைப்போல, புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதி;காரசபைத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவில்லை - என நாடிபிடித்து அறிந்திருந்தால் சந்திரிகாவும் சிங்களப் பேரினவாதிகளும் மேற்குறிப்பிட்ட ஏனையோரும் பேச்சுவார்த்தையைக் குழப்பி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத வன்முறையாக காட்டும் வேலையில் முழு மூச்சாக இறங்கியிருப்பார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமெனப் பட்டியலிட்டுள்ள அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் கூட ஏன் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை கண்டிக்காமலும் அதைக்கைவிட்டு ஸ்ரீலங்கா அரசுக்கு ஏற்புடைய வேறொரு அடிப்படையில் பேசுமாறு புலிகளை வற்புறுத்தாமலும் இருக்கின்றன என்பதை சிங்களப் பேரினவாதிகளும் புத்திஜீவிகளும் புரிந்துகொள்ளாமல் இன்று புலம்பி வருகின்றனர்.

அண்மையில், அமெரிக்க இராஜாங்க பிரதி உதவிச் செயலர் டொனால்ட் காம்ப் கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது தொடுக்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளில் இந்த ஆதங்கத்தைக் காணலாம்.

உலகின் இரு முக்கிய மூலப்பொருட்களை கையகப்படுத்தும் நோக்குடன் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைவு போன்றதொரு இடைக்காலத் தீர்வுத் திட்டத்துக்கு அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான பிரித்தானியாவும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளன என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எமது விடுதலைப் போராட்டம் பெருமெடுப்பில் ஆயுதக் கிளர்ச்சியாக பரவிய அதே ஆண்டு (1983) சூடான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை மக்கள் அந்நாட்டின் இஸ்லாமிய அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் இறங்கினார்கள். சூடான் அரசு தம்மை இஸ்லாமிய மேலாதிக்கத்துக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் உட்படுத்தி நசுக்கப் பார்க்கிறது என்பதே தென் சூடான் போராட்டக் குழுக்களின் நிலைப்பாடாக இருந்தது.

மத்திய தரைக்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது என 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியா உணர்ந்து கொண்டதாலும் இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மேற்படிக் கடற்பாதைகள் கட்டாயம் தேவை என்பதாலும் சூடானில் பிரித்தானியப் பேரரசு கால்வைத்தது. அதற்குப் போட்டியாக அங்கு வல்லாதிக்கம் செலுத்த பிரான்ஸ{ம் முனைந்தது. நவீன உலகின் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருளாக எண்ணெய் தோன்றிய பின்னரும் அது செங்கடலின் ஒரு கரையில் அமைந்துள்ள சவூதி அரேபியாவில் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும் சூடானின் கேந்திர முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக பிரித்தானியப் பேரரசு சூடான் மீது தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டது.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சூடான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள், பல ஆயுதக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டன. இதன் காரணமாக, சூடான் மக்களை பிரித்தாளும் நோக்கில் அந்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதற்கு பிரித்தானியப் பேரரசு முயற்சியெடுத்து அதில் வெற்றி கண்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சுயெஸ் கால்வாய் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போனதால் செங்கடல் மீதும் சூடான் மீதும் பிரித்தானியாவுக்கிருந்த அக்கறை அருகிப்போயிற்று. இது 1956ஆம் ஆண்டு சூடான் சுதந்திரமடைவதற்கு வழிவகுத்தது. எனினும், சூடான் அரசு மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு தென்சூடான் மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் காலத்துக்குக் காலம் பயன்படுத்தத் தவறவில்லை.

எண்ணெய்வளம் நிரம்பிய சவூதி அரேபியாவின் பாதுகாப்பை முன்னிட்டு அமெரிக்கா செங்கடல் பிராந்தியத்தில் பிரித்தானியா விட்டுச் சென்ற ஏகாதிபத்திய இடைவெளியை நிரப்பிற்று.

ஸ்ரீலங்கா அரசு மீது அழுத்தத்தைச் செலுத்தி அதைத் தன் வழிக்கு வரவைப்பதற்காக இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்த முயற்சித்த அதே பாணியில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடான பிரித்தானியாவும் தென் சூடான் மக்களின் போராட்டத்தை பயன்படுத்தின.

இதனிடையே, தென் சூடானில் பெரும் எண்ணை வளமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் எதிராகத் தன்னை பாதுகாத்துக் கொள்ள எண்ணிய சூடான் அரசு இந்த எண்ணெய் வளத்தை அபிவிருத்தி செய்யும் தனி உரிமையை சீனாவுக்கு வழங்கியது.

தென் சூடானின் எண்ணெய் வளத்தை சீனா முழுமையாகக் கையகப்படுத்திக் கொண்டால், அது தனக்குச் சவால் விடக்கூடிய உலக வல்லரசாக வளர்ந்து வரும் வேகம் மேலும் துரிதப்படும் என்பதை உணர்ந்த அமெரிக்காவம் அதன் கூட்டு நாடுகளும் வேலையில் இயங்கின.

தென் சூடான் போராட்ட இயக்கத்துக்கு அமெரிக்கா கூடிய இரகசிய ஆதரவு வழங்கத் தொடங்கியது. சூடானின் இறைமையைச் சிதைத்து அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதை தம் வழிக்குக் கொண்டுவர அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் எடுத்த முயற்சிக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

நீங்கள் கையில் வைத்திருக்கும் இப்பத்திரிகைக் காகிதத்தின் மீது அச்சடிக்கப்படும் மை பரவி ஊறாமல் சீராக அடிக்கப்படும் வடிவத்திற்கு அமைய, நிற்பதற்கு ஒரு மூலப் பொருள் இன்றியமையாதது ஆகும். அதுதான் அரபிப்பசை (புரஅ யுசயடிiஉ) இந்த மூலப் பொருள் இல்லாவிட்டால் நீங்கள் அருந்தும் மென்பானங்களின் செயற்கை நிறங்கள் போத்தலின் அடியில் படிந்து விடும். அது மட்டுமன்றி அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், இனிப்பு வகைகள் எனப் பல்வேறு உற்பத்திகளுக்கு அரபிப்பசை முக்கியமான மூலப் பொருள் ஆகும்.

உலகின் மொத்த அரபிப்பசை உற்பத்தியின் 80 சதவீதத்திற்கு மேல் சூடானிலிருந்தே ஏற்றுமதியாகிறது. இந்த ஏற்றுமதியை முழுமையாக கட்டுப்படுத்துகின்ற நிறுவனத்தின் (புரஅ யுசயடிiஉ ஊழஅpயலெ) உரிமையாளராக இருந்து வந்தவர் ஒஸாமா பின்லேடன் ஆவார்.

1996ஆம் ஆண்டு இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு சூடான் அரசு தஞ்சமளிக்கிறது எனக் கூறி சூடான் மீது அமெரிக்கா வரையறுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தது. அதேவேளை, சூடானிலிருந்து அரபிப்பசையை இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது.

இற்கெதிராக உடனடியாகவே அமெரிக்காவின் பெரும்பலம் படைத்த மென்பான உற்பத்தியாளர் சங்கமும் அமெரிக்க அச்சக உரிமையாளர் சங்கமும் போர்க் கொடி தூக்கின. இவற்றின் அரசியல் மற்றும் பணம் செல்வாக்கை கண்டு பயந்த அமெரிக்க அரசு தடையை நீக்கியது.

ஆனால், சீனாவின் கைக்குள் சூடானின் எண்ணெய் வளம் போகாமல் இருப்பதற்கும், அரபிப்பசை உற்பத்தி மீது செல்வாக்குச் செலுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் திட்டம் தீட்டிச் செயல்பட்டன.

தென் சூடான் போராட்ட இயக்கம் தன் சொந்தக் காலில் சுதந்திரமாக நின்று செயல்படும் ஓர் அமைப்பு அல்ல. அமெரிக்க, பிரித்தானிய செல்வாக்கிற்கு அமையவே அதன் தலைமை செயல்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்தி சூடான் அரசு மீது படிப்படியாகத் தமது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தென் சூடான் போராட்ட இயக்கத்தை பேச்சுவார்த்தையில் இறக்கின.

சூடான் அரசுக்கும் தென்சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் ஆரம்பித்த பேச்சுக்களுக்கு நோர்வே அனுசரணையாளராக நியமிக்கப்பட்டது.

(நோர்வேயை அனுசரணையாளராக கொண்டு வருவதில் அமெரிக்காவே பின்னின்று செயற்பட்டது.)

மேற்படி பேச்சுக்களின் ஊடாக சூடான் அரசு மீது தனது செல்வாக்கைப் பெருக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளம், கனிம வளம், அரபிப்பசை மற்றும் செங்கடல் பாதைகள் ஆகியவற்றை தான் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா கருதுகிறது.

நோர்வேயின் அனுசரணையோடு நடைபெற்ற பேச்சுக்களின் விளைவாக சூடான் அரசுக்கும் தென் சூடான் போராட்ட அமைப்பிற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது.

இந்த இடைக்கால நிர்வாக அமைப்பு பற்றிய உடன்படிக்கை ;மச்சாக்கோஸ் ப்றொட்டக்கோல் (ஆயஉhயமழள Pசழவழஉழட) என அறியப்படுகிறது.

இந்த உடன்பாட்டின் கீழ் தென் சூடான் மக்களின் சுயநிர்ணய உரிமை எந்தவித தங்குதடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த உடன்படிக்கையின் கீழ் நிறுவப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் காலமுடிவில் (6 ஆண்டுகள்) தென் சூடான் மக்கள் ஐக்கியப்பட்ட சூடானுக்குள் இருப்பதா அல்லது பிரிந்து தனிநாடாகச் செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக சர்வதேச ரீதியாகக் கண்காணிக்கப்பட்ட தேர்தல் ஒன்று நடத்தப்படும் என வரையறுக்கப்பட்டது.

ஈராக்கிற்கு அடுத்ததாக சூடான் பிரச்சினை சர்வதேச கவனத்தை இன்று ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டுப் போரொன்றின் தீர்வுக்கு ஒரு இடைக்கால நிருவாக கட்டமைப்பு முக்கியமானது என்பதும் ஒரு சமூகத்தின் சுயநிர்ணய உரிமை ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கப்படலாம் என்பதும் ஒதுக்க முடியாத விடயங்களாக உள்ளன.

ஐக்கிய சூடானுக்குள் தென்சூடான் மக்கள் தொடர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இடைக்கால ஒழுங்கு பயன்படவேண்டும் என மச்சாகோஸ் உடன்பாடு கூறுகிறது.

அதேபோல ஐக்கிய இலங்கைக்குள் தாம் தொடர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை தமிழருக்கு ஏற்படுத்த சிறிலங்கா அரசுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வரலாற்று வாய்ப்பாக இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை நோக்கப்பட வேண்டும் என்பதை நாம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்பவேண்டும்.

சூடானில் ஒரு கதை இலங்கையில் ஒரு கதை என ஆகவும் பம்மாத்து விட முடியாத நிலையில் அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் உள்ளன.

இதில் மிக முக்கியமானது என்னவெனில், சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான வரலாற்றுக்காரணங்கள் தென் சூடான் மக்களைவிட தமிழீழ மக்களுக்கே மிக அதிகமாகவே உள்ளன.

சூடானின் இடைக்காலத் தீர்வுத்திட்டத்தைப் போலல்லாது புலிகள் முன்வைத்துள்ள இடைக்காலத்தன்னாட்சி அதிகார சபைத்திட்டம் எமது முழுச் சுயநிர்ணய உரிமையை கொள்கையளவில் மட்டுமன்றி நடைமுறையிலும் செயற்படுத்தும் கட்டமைப்புகளைப் பற்றியும் பேசுகிறது.

எமது வளங்கள், எமது நிலம் ஆகியவற்றின் மீதான எமது உரிமையையும் வலியுறுத்துகிறது. ஆனால், சூடானில் இடைக்காலத் தீர்வு அமெரிக்க நலன்களையும் உள்ளடக்குவதால் இவை பற்றித்தெளிவாகப் பேசவில்லை.

எனினும், சூடானின் இடைக்காலத்தீர்வும் அதன் அடிப்படையாக அமைந்துள்ள சுயநிர்ணய உரிமைக்கோட்பாடும் இவற்றிற்கு மேற்கு நாடுகள் வழங்கிய ஆதரவும் எமக்கு சாதகமாகவே உள்ளன. இதனாலேயே, சிங்களப் பேரினவாதிகள் கலங்கிக் குழம்புகின்றனர்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் முழங்குவது மட்டுமே எமது அரசியல் வேலை என்று சும்மாயிருக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் இதுபோன்ற விடயங்களை மேலும் கற்று மக்களிடையே இறங்கி வேலை செய்ய வேண்டும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (Aug 08, 2004)

Please Click here to login / register to post your comments.